அப்பா போட்ட காய்கறித் தோட்டம்!

கதையில் வராத பக்கங்கள் - 24

0
560

ஒரு முன் குறிப்பு: உங்களுக்கு இந்தக் கதையைப் படிப்பதை விடக் கேட்பதில் ஒரு வேளை ஆர்வம் கூடுதல் உண்டா? அப்படியானால், நீங்கள் இதனை பிரபலமான ஒலிப்புத்தகத் தளமான ‘கதை ஓசை‘யில் தீபிகா அருணின் அருமையான குரலில் இலவசமாகக் கேட்டு ரசிக்கலாம். அதற்கு இங்கே சொடுக்குங்கள்:

[ஆண்டு 1962-64.  எனது  ஏழாவது முதல் பத்தாவது வயதுகளில் நடந்தவை இவை.]

அம்மா, கொல்லைப் புறத்திலிருந்து பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தாள். 

“கொல்லையிலே ரெண்டு நாகப் பாம்பு, நாரத்தை மரத்தடி கீழே ஒரே பொதரும் பூண்டுமாயிருக்கோல்லியோ அங்கே! ஐய்யோ. ஜோடியா எப்பிடி படமெடுத்து ஆடிண்டிருந்துது தெரியுமா?” 

அம்மாவின் குரல் பதற்றத்தில் நடுங்கியது.

“நெஜம் பாம்பாம்மா? நாங்களும் பாக்கணும்மா! லலிதா நீ வரியாடி?” என்று கடைசி அக்காவைக் கூப்பிட்டேன் நான்..

“ஐயோ, வேண்டாம் வேண்டாம்; கொல்லைப் பக்கமே யாரும் போகாதீங்கோ! அப்பா ஸ்கூல்லேர்ந்து வரட்டும். எங்கேர்ந்து தான் இப்படிப்பட்ட வீட்டைப் பிடிச்சாரோ மனுஷன்” என்றாள் அம்மா.

ரயில்வே லைனுக்கு ஒட்டி இருந்த வீட்டிற்கு முதலில் குடி வந்த பிறகு,  இப்போது தான் வீடு மாறி, சன்னதித் தெருவில் இருந்த இந்த வீட்டுக்கு நான்கைந்து நாட்கள் முன்னால் குடிவந்திருந்தோம்..

அப்பாவுக்கு இந்த கிராமத்து பாணி ஓட்டு வீடு ரொம்பவுமே பிடித்திருந்தது. காரணம் வீடு ரொம்பவே பெரியது; வாடகையோ மிகக் குறைவு. வீட்டின் கொல்லைப் புறமோ  நீண்டு நெடிந்து பரவி இருந்தது. அந்த வீட்டில் கடந்த ஒரு வருடமாகவே யாரும் குடிவரவில்லையாம். பூட்டித் தான் கிடந்திருக்கிறது இத்தனை நாள்.

அப்பாவோ கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். உடல் உழைப்புக்கு அஞ்சாதவர். அவருக்குள் ஒரு காய்கறித் தோட்டக்காரன் இத்தனை நாள் வேலை இல்லாமல்  உறங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது. அவர் வீட்டை விட அந்தக் கொல்லையைப் பார்த்துத் தான் மயங்கியிருக்க வேண்டும்.  

சாயுங்காலம் பள்ளிக்கூட வாத்தியாரான அப்பா பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் வராததுமாக அம்மா இரைந்த குரலில் தான் கண்ட நாகப் பாம்பு தரிசனத்தைப் பற்றிப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அப்பாவோ, சில விஷயங்களில் அலட்டிக்கொள்ளாத பேர்வழி!

“ஒனக்கு எப்பப்பார்த்தாலும் பாம்பு பயம்தான்! நாகப் பாம்புன்னா சொல்றே?  பொதுவா இந்தப்பக்கமெல்லாம் நாகப்பாம்பு நடமாட்டம் ரொம்பக் கிடையாது. நீ பார்த்தது வழலைப் பாம்பாக இருக்கும். தூரத்லேர்ந்து பார்த்தா ரெண்டும் ஒண்ணு போலத்தான் இருக்கும். வழலைப் பாம்புக்கு விஷம் கிடையாது. கொல்லையைத் தாண்டி வயல் இருக்கோல்லியோ? அங்கே தான் அவை இருக்கும். எலி, தவளையெல்லாம் புடிச்சு சாப்பிடும். அது படமெல்லாம் எடுக்காது!” 

அப்பா சாரைப்பாம்பை வழலைப் பாம்பு என்றுதான் சொல்லுவார். அது அவரது கிராமத்து பாஷை. அவருக்கு கிராமத்து வாழ்க்கை முறைகளெல்லாம் அத்துப்படி. அவருக்குப் பாம்பு பயமெல்லாம் ஒன்றும் கிடையாது. 

“நெஜம்மா நாகப் பாம்பு தான் பாத்தேன். படம் எடுத்து ஆடித்து; ரெண்டு பாம்பு; ஜோடியா இருந்துது; பத்தடி நீளம் இருக்கும்!” என்றாள் அம்மா விடாமல்.

“பத்தடியா?  சரித்தான் போ!  ரொம்ப நீளமாவே அளக்கறே! எனக்கு குடிக்கக் காப்பி உண்டா கிடையாதா முதலில்?” என்றார்  அப்பா. அம்மா தனக்குத் தானே புலம்பியபடி சமையற்கட்டுக்குள் போனாள்.

அம்மாவுக்கோ நெளிவதெல்லாம் நாகப் பாம்பு என்றால் அப்பாவுக்கோ விஷப்பாம்பேயானாலும் அது வழலைப்பாம்பு தான்! 

இந்த வீட்டுக் கொல்லையில் ஒரு கக்கூஸ் கூட இல்லையாததால், இங்கு குடி வந்ததும் முதல் காரியமாக அப்பா, நான்கைந்து மூங்கில் கழிகள் நட்டு தென்னை ஓலை நான்கு புறமும் வேய்ந்து ஐந்தடிக்கு ஆறடி ஒரு மறைப்பை வீட்டின் கடைசி சுவரான கொல்லைப் புறச் சுவரை அடுத்து கிணற்றடிக்கு சற்று பக்கத்தில் உருவாக்கினார். அதனுள் இரண்டடிக்கு இரண்டடி அளவும் சுமார் ஐந்தடி ஆழமும் உள்ள குழியை வெட்டினார். வெட்டி யெடுத்த மண்ணை பக்கத்திலேயே முட்டாகக் குவித்தார். இரண்டு பரப்பலகைகளை குழியின் இருபக்கங்களில் நடுவே ஒரு அடி இளைவெளி விட்டு இருத்தினார். இயற்கைக் கக்கூஸ் ரெடி!  பக்கத்தில் ஒரு தகர டப்பாவில் நிறைய சாம்பல். 

கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுள்ளே போய், மரப்பலகையில் கால் வைத்துக்கொண்டு குந்தி உட்கார்ந்துகொண்டு  காலைக் கடனைக் கழிக்க வேண்டியது; கழுவிக்கொண்ட பின் ஒரு பிடி சாம்பலை உள்ளே குழிக்குள் தூவவேண்டியது, குவித்திருந்த மண்ணையும்  சிறிது  உள்ளே தள்ளிவிடவேண்டியது. அவ்வளவே!

அம்மா கிளப்பி விட்ட பீதியில் அக்காமார்கள் கொல்லைப் புறம் போகவே பயந்தார்கள்! துணைக்கு ஒருவரும் கூடவே போகவேண்டும். கொல்லைக் கதவருகில் ஒருவர் செக்யூரிட்டி போல நிற்கவேண்டும். பாம்பு நடமாட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கண் குத்திப் பாம்பு போல (!) பார்க்க வேண்டும்!

ஆனால் அது என்னவோ அம்மாவுக்கு மட்டுமே அந்தப் பாம்பு தரிசனம் கிட்டியிருந்தது! மற்ற யாருக்கும் கொடுப்பினை இல்லை. ஆனால் பிடித்த பயம் விட்டபாடில்லை. என்ன செய்ய?

அம்மா தன் அப்பாவுக்குக் இது பற்றிக் கடிதம் எழுதினாள். அவர் ஒரு சம்ஸ்கிருத பண்டிதர். ஏராளமாய் சுலோகங்கள் அவருக்குத் தெரியும். அவர் “அப சர்ப்ப சர்ப்ப..” எனத் தொடங்கும் ஒரு சுலோகத்தை தபால் கார்டில் எழுதி அதை மனனம் செய்தால் பாம்பு அண்டவே அண்டாது என்று தைரியம் சொல்லி பதில் போட்டிருந்தார்.

அம்மாவும் அக்காமார்களும் அதனை விழுந்து விழுந்து படித்து மனப்பாடம் செய்து கொண்டார்கள். கொல்லைப்புறம் போகவேண்டியிருந்தால் அதை முணுமுணுத்துக்கொண்டே போவார்கள்!

ஆனாலும் அம்மாவுக்கு அதுவும் போதவில்லை. காரணம் அடுத்த இரண்டு நாளில் மற்றொரு சம்பவம் நடந்தது. . அம்மா கொல்லைப் படியில் இறங்கும்போது படியோரமாக ஒரு பாம்பு படுத்திருந்ததாம்; அது கண்ணில் படாததால் அம்மா கவனிக்காமல் படி இறங்குகையில்  வாலால் அம்மாவில் காலில் சுளீர் என்று அடித்துவிட்டு நகர்ந்து போய்விட்டதாம்!

அம்மா ஆடிப்போய் விட்டாள்! ஆனாலும் அப்பாவுக்கென்னவோ அதை நம்பும் எண்ணம் ஏதும் இல்லை! 

அம்மா, சம்ஸ்கிருதத்தில் எழுதத் தெரிந்த பெரியக்காவைக் கூப்பிட்டு கொல்லைச் சுவரின் பின் பக்கத்திலும் பின் பின்கட்டின் மாட்டுக்கொட்டாய் சுவரிலும் அந்த ‘அபசர்ப்ப சர்ப்ப ‘ சுலோகத்தை சாக்பீஸினால் எழுதச் சொன்னார். அக்கா எழுதி வைத்தது எனக்குத் தெரியாது.

அன்று கொல்லைப் பக்கம் போய்வந்த பின் அங்கு எனக்குத் துணைக்காக நின்றிருந்த கடைசி அக்காவிடம் நான் “இதோ சொவத்திலே சாக்பீஸினாலே என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டேன். “அது சம்ஸ்கிருதம்; அப சர்ப்ப சர்ப்ப சுலோகத்தை அம்மாதான் பெரியக்காவை விட்டு எழுதி வைக்க சொன்னா” என்றாள்.

“பாம்பு சம்ஸ்கிருதம் படிக்குமா?” என்றேன். 

“போடா லூசு!” என்றாள் அவள்.

அப்போது அண்ணன் அந்தப் பக்கம் வந்தான். அவனிடமும் கேட்டேன். அவன் நமுட்டுச் சிரிப்புடன். “ஓ பாம்பு படிக்குமே? அதுக்குத் தானே எழுதிவெச்சிருக்கு? “இந்தப் பகுதியில் பாம்புகள் நடமாடத் தடை பிறப்பிக்கப் பட்டுள்ளது; மீறினால் மரண தண்டனை கிடைக்கும்” என்று அதில் எழுதியிருக்கு. படிச்சிட்டு பாம்பு பயந்து ஓடியே போய்டும்” என்றான். எல்லாரும் விழுந்துவிழுந்து சிரித்தோம்!

மறு நாள் காலை.

காலையில் எழுந்து கோக்கோமால்ட் குடித்துவிட்டு பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க சோம்பல் பட்டுக்கொண்டு நான் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். 

அப்பா கையில் ஒரு அறிவாளுடனும் மண்வெட்டியுடனும் முற்றத்துக்கு வந்தார். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்தார். “நான் கொல்லைப்பக்கம் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, பிறகு காய் கறி பயிர் செய்யவதற்கு ஆரம்ப  ஏற்பாடு செய்யப் போகிறேன்; யார் யார் என் உதவிக்கு வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“நான் வர்ரேன்!” என்று முதலில் கை தூக்கினேன். ஒம்பதாவது படிக்கும் அண்ணனும் தயக்கத்துடன் எழுந்து வந்தான். பெரிய அக்காக்கள் இருவரும் பாம்பு பயத்தை வெளியே சொல்லாமல். “ஐயோ,  சமையக்கட்டில் அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணணும்; வீடு பெருக்கியாகணும்; இல்லைன்னா அம்மா திட்டுவா; நாங்க வரலைப்பா” என்று கழன்றுகொண்டார்கள்.

கடைசி அக்கா மாத்திரம், “அப்பா, பாம்பு இருக்காதுன்னா நானும் வரேன்” என்றாள். 

“வா, வா! பாம்பு தைரியசாலிகளைக் கண்டால் ஓடிவிடும்; ஆனா பயந்தாங்கொள்ளிகளைக் கண்டால்  சாதாரண வழலைப்பாம்பு கூட படம் காட்டி ஆடும்” என்று அப்பா சமையற்கட்டுப் பக்கம் அம்மா தலை தெரிகிறதா என்று எட்டிப்பார்த்து  நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே  சொல்லிவிட்டு கொல்லையை நோக்கிக் கிளம்பினார்.

உற்சாகமாக நாங்கள் மூவரும் பின் தொடர்ந்தோம்.

கக்கூசுக்கும் கிணற்றடிக்கும் அந்தண்டை கொல்லை விரிந்து பரந்திருந்தாலும்  நாங்கள் யாரும் போய்ப் பார்க்க  இதுவரை துணிந்ததில்லை. சரளைக் கற்கள் போட்ட ஒத்தையடிப் பாதை ஒன்று அங்கே ஊடுறுவிப் போனது..

இத்தனை நாட்கள் ஆள் நடமாட்டமே இல்லாததால், வழியை மறைத்துக்கொண்டு பக்கவாட்டில் கண்ட செடிகளும், புதர்களும் வளர்ந்திருந்தன. அப்பா அறிவாளால் செடிகளை வெட்டிக் களைந்தவாறே முன்னேறினார். வெட்டிய செடிகளின் பச்சை வாடை மூக்கில் வந்து அடித்தது.  இரண்டு நாட்கள் முன்பு இரவு பெய்திருந்த மழையால் மண் இன்னும் ஈரமாக இருந்தது.

“அப்பா, காடு மாதிரி இருக்கிற இந்த இடத்திலே நெஜமாவே காய்கறியெல்லாம் பயிர் செய்ய முடியுமா?” என்று சந்தேகமாய்க் கேட்டாள் அக்கா.

“ஓ கண்டிப்பா முடியும்; ஆனா நெறைய பாடுபடணும்; எல்லா காட்டு செடிகளையும் வெட்டிக் களைந்தாகணும்; கொல்லை பூரா கொத்தியாகணும்; இது இன்னும் எந்தப் பயிரும் காணாத பச்சை மண்ணு. சரியா பாடுபட்டா, கொள்ளையாய் காய்க்கும். உரமே போடவேண்டாம்; இந்த மண்ணிலேயே அத்தனை சத்து இருக்கும்!” என்றார் அப்பா. அவர் அனுபவம் பேசிற்று.

அன்று தொடங்கி அடுத்த இரண்டு மாதங்கள் அப்பா காலையிலும் மாலையிலும் கொல்லைப் புறத்தில் படு மும்முறமாக வேலைகள் செய்ய ஆரம்பித்தார். அண்ணனும் அப்பாவும் ஆளுக்கொரு மண்வெட்டி, அறிவாள் சகிதமாக வளர்ந்த புதர்களை வெட்டினார்கள். நான் என் கையில் ஒரு தடிக்கம்பை எடுத்துக்கொண்டு சிறிய செடிகளையெல்லாம் கொம்பாலேயே அடித்து அடித்து நசித்தேன். அக்கா வெட்டிய தழைகளையும் கிளைகளையும் கொல்லை கடைசியில் ஒரு இடத்தில் குவிக்க அப்பாவுக்கு உதவினாள்.

ஒரு வாரத்தில் வெட்டிக் கழித்த தழைகளும் செடிகளுமே ஒரு குட்டி வைக்கோற் போர் அளவுக்கு ஆகிவிட்டன!

“அப்பா, இந்தத் தழையெல்லாம் என்ன செய்ய?” என்று கேட்டேன்.

“காஞ்சு சருகாயிடுத்துன்னா அதை  உரமாய் போட யூஸ் பண்ணிக்கலாம் தான்; இல்லை எரிச்சு சாம்பலாக்கினால் அந்த சாம்பலும் உரம்தான்” என்றார் அப்பா. இதெல்லாமே எனக்குப் புதிய விஷயங்களாய் இருந்தன.

ஒரு வழியாகக் கொல்லைப்புறம் முழுவதிலும் புதர்களை நீக்கியாயிற்று. ஆங்காங்கிருந்த மரங்களைத் தவிர இப்போது  கொல்லை பளிச்சென்று வெளிச்சமாய் ஆகிவிட்டது.

“அப்பா, பாம்பெல்லாம் எங்கே போச்சு?” என்று கேட்டேன்.

“அடைசல் எல்லாம் ஒழிஞ்சு போய், ஆள் நடமாட்டமும் இருந்தால் பாம்பெல்லாம் வராது; அதோடே, இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே ராத்திரி எலிப்பொறி வைத்து ஐந்தாறு எலிகளைப் பிடிச்சாச்சு இல்லையா? சாப்பிட எலி இல்லேன்னா வழலைப்பாம்புக்கு இங்கே என்ன வேலை?” என்றார் அப்பா.

ஆக பாம்புகள் ஏதும் இல்லை என்று பத்திரத்தில் எழுதி எங்களின் சாட்சிக் கையெழ்த்தும் வாங்காத குறையாக அப்பா தைரியம் சொல்லவே, ஒரு நாள் அம்மாவும் மூத்த இரு அக்காக்களும் கொல்லைப்புற விஜயம் செய்து மூக்கில் விரலை வைத்தார்கள். “அப்பாடி! கொல்லை இத்தனை பெரிதா? ஏன்பா, இங்கே பூச்செடிகளும் போடலாமே?” என்று ஆரம்பித்தார்கள். 

“இல்லை இல்லை; காய்கறிதான் போடணும்; அங்கே இங்கே ரெண்டு மூணு பூச்செடிகள் வேணா வெச்சுக்கொங்கோ. அவ்வளவுதான்”  என்றார் அப்பா. அவருக்கு மல்லிகைப் பூவின்மணமே பிடிக்காது; ” வாடினா சாணி நாத்தம் அடிக்கிறது” என்று சொல்லி அம்மாவுக்கு மல்லிகைப் பூவே வாங்கித்தராத சிக்கனப் பேர்வழியாயிற்றே அவர்!

அப்பாவின் அடுத்த கட்ட நடவடிக்கை கொல்லையைக் கொத்துவது. 

காலையும் மாலையும் வேர்க்க விருவிருக்க அவர் கொல்லை நெடுகிலும் மண்ணைக் கொத்தினார். சமயங்களில் அண்ணன் தானும் ஆங்காங்கே கொஞ்சம் கொத்துவான். நான் சின்னச் சின்ன சகாயங்கள் செய்வேன். கொத்தி மண்ணைப் புரட்டிப் போடும்போது வெளியே கொத்துக் கொத்தாய் வரும் பழைய செடிகளின் வேர்களையும், பெரிய கற்களையும் பொறுக்கி கொல்லைக் கடைசியில் கொண்டு போய்ப் போடுவேன்.  அப்பாவின் கூடவே நின்று சதா ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன்.

“எதுக்கு மண்ணைக் கொத்தணும்?”


“பயிர் எதுவும் பண்ணாததால் மண்ணு இறுகிப் போயிருக்கும். புதிசா செடி நடணும்னா மண்ணு எளகி இருந்தால் தான் முடியும். அதோடு மண்ணுக்குள்ளே காத்து போகணும். உள்ளே அடியில் கிடந்த மண்ணு மேலே வந்து சூரிய வெளிச்சம் படணும். மேலே இருக்கிற மண்ணு அடியில் போனால் அதில் சேர்ந்துள்ள சத்தெல்லாம் புதுசா வைக்கிற  செடிகளோட வேர்களுக்குப் போகும்” என்றெல்லாம் கொத்தியவாறே விளக்குவார் அப்பா.

அண்ணனுக்கு ஒரு வினோத சுபாவம் உண்டு. அவனுக்கு எப்போதும் தனக்கென்று சில உரிமைகளை நிலை நாட்டிக்கொள்வது வழக்கம். ஒரு குறு நில மன்னன் தன் சிறிய நாட்டுப் பகுதியை தானே ஆள்வது போல! கூடத்து அலமாரியில் ஒரு தட்டு தனக்கு என்று ஒதுக்கிக் கொள்வான். அதில் தன் புத்தகங்கள் சாமான்களை வைத்துக் கொள்வான். மேஜையில் உள்ள டிராயர்களில் தனக்கென்று ஒரு டிராயர் தனி. அவனது துணிகளைப் போட கூடத்தில் இரு தூண்களுக்கு இடையே அவனுக்கென்று ஒரு தனி கொடி. அவன் படுக்கையை சுருட்டி வைத்துக்கொள்ள சுவர் மூலையில் அவனுக்கென்று ஒரு தனி ஸ்டூல் — இப்படியெல்லாம். அவன் அலமாரியிலோ, டிராயரிலோ, அல்லது துணிக்கொடியிலோ அடுத்தவர் புத்தகம், சாமான், துணி என்று எட்டிப்பார்த்தால் அதை எடுத்து விசிரி அடிப்பான்.

அவன் கக்கூசுக்கு சற்று தள்ளி ஒரு ஆறடிக்கு ஆறடி நிலத்தை அவனே முழுவதும் கொத்தினான். முடித்ததும் அப்பாவிடம் வந்து, “அப்பா, அந்த இடம் பூரா நான் என் போக்கில் செடிகள் வைத்து விஞ்ஞான ஆராய்ச்சியெல்லாம் செய்வேன்” என்றான். அவனுக்கு அறிவியல் ஆர்வம் கூடுதல். 

அப்பா, “இங்கேயும் ஆரம்பிச்சிட்டியா? அங்கங்கே நடுவிலே கிடைக்கிற இடத்திலே உன் பயிர் ஆராய்ச்சியெல்லாம் வெச்சுக்கோ, அவ்வளவுதான்!” என்றார்.

அப்பா, பஞ்சாங்கத்தைப் புரட்டி நல்ல நாள் பார்த்து, “நாளன்னிக்கி சாயந்திரம் நாம விதை போடலாம்” என்றார். பிறகு எங்களைக் கூட்டிக்கொண்டு கொல்லைப் புறத்தை ஒரு ரவுண்டு அடித்து எங்கே எங்கே என்ன போடுவது என்று விளக்கினார்.

“அதோ அந்த சாக்கடை முடியற எடத்திலே ரெண்டு மூணு வாழைக்கன்னு நட்டுடுவோம். அதுபாட்டுக்கு சாக்கடைத் தண்ணீரை உரிஞ்சிண்டு தானே வளர்ந்துரும்;; அதுக்குப் பக்கத்திலே அங்கே அகலமா பாத்தி கட்டியிருக்கேன் பாரு, அங்கே கீரை. இதோ இந்தப்பக்கம் கொத்தவரை; அதுக்குப் பக்கத்திலே வெண்டை, கத்திரிக்காய். கிணத்தை சுத்தி ஒரு சைடு பூச்செடிகள் வெச்சுக்குங்கோ பொண்ணுகளா. கெணத்திலேர்ந்து தண்ணி சேந்தும்போதும், துணி துவைக்கும் போதும் வர்ர தண்ணியே அதுகளுக்குப் போதும்; கெணத்துக்கு இந்தப் பக்கம் மிதி பாகல், அதை ஒட்டி பச்சை மிளகாய், தக்காளி, சேப்பங்கிழங்கு  போட்டுடலாம்; அதோ அங்கே ரெண்டு பந்தலைப் போட்டு, புடலையும், அவரைக்காயும் போட்டுடலாம். அதோ அந்த சுவரண்டை பூசணி, பரங்கி…”

அன்றும், மறுனாள் மாலையும் , கிணற்றிலிருந்து அப்பா வாளி வாளியாய் தண்ணீர் எடுத்து, விதை போடத் தீர்மானித்திருந்த எல்லா இடங்களிலும் தண்ணீர் ஊற்றினார். நானும் ஒரு சிறு வாளியை எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றினேன். அண்ணனும் கடைசி அக்காவும் கூட.

நல்ல நாளும் வந்தது. ஒரே ஆர்வமாக எல்லாரும் கொல்லைக்குப் படையெடுத்தோம். அப்பா பலப்பல  காகிதப்  பொட்டலங்களில் விதைகளை வாங்கி வைத்திருந்தார். எது எந்தக் காய்கறியின் விதை என்றெல்லாம் எங்களுக்குக் காட்டி விளக்கினார்.

“குட்டிகளெல்லாம் வெண்டை விதையுங்கோ முதலில்” என்றார். சின்னதாய் சாம்பல் நிறத்தில் மணிமணியாய் இருந்த வெண்டைக்காய் விதைகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டியது. விதைக்கும் இடத்தில் மண்ணில் சிறிது நீர் ஊற்றி சேறு ஆக்க வேண்டியது. அதில் விரலால் அமுக்கி ஒரு சிறு குழி; அதற்குள் வெண்டை விதையை ஒரு அரை இஞ்சு ஆழத்தில் அமுக்கி மண்ணை மூடிவிடவேண்டியது. அவ்வளவே.

அப்படி ஆளாளுக்கு வெவ்வேறு விதைகளை போட்டி போட்டுக்கொண்டு விதைத்தோம். கருப்பு மணல் போல் இருந்த கீரை விதைகளை அப்பா நல்ல சேறு போல நீர் விட்டிருந்த பாத்தியில் விசிரினார்போல் தூவி விட்டார். கொத்தமல்லி விதைகளை ஒரு சப்பாத்திக் குழவியைக் கொண்டு உருட்டி  நசுக்கி, அவற்றையும் மற்றொரு பாத்தியில் தூவினார்.

“என்ன, பொடலங்காயை நீ விதைக்கிறாயா? நல்ல நீளமாய் பாம்பு பாம்பாய்க் காய்க்கும்”  என்றார் அப்பா அம்மாவிடம். “ஐய்யோ, நான் மாட்டேன்!” என அம்மா சொல்ல, எல்லாரும் சிரித்தோம்.

மறு நாள் காலை, பல் தேய்த்துப் பால் குடித்ததும் கொல்லைப் பக்கம் ஓடினோம் நானும் கடைசி அக்காவும். விதைகள் முளைத்துள்ளனவா என்று பார்க்க. பிறகு மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் மீண்டும் ஓடிப்போய்ப் பார்ப்போம்.

அடுத்த நாள் காலை. ஓடிப் போய்ப் பார்க்கையில், நாங்கள் வெண்டை விதை இட்ட இடங்களில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் ஒரு புழு மண்ணிலிருந்து வளைவாய் கொக்கி போல வெளியே வருவது போலக் கண்டது. “ஆ! முளை விட ஆரம்பித்து விட்டது. நாளைக்குப் பார்; என்ன ஆகிறதென்று!” என்றார் அப்பா. எங்களுக்கு ஒரே த்ரில்!

மறுனாள் இரு குட்டி இலைகளுடனும் மெல்லிய வெள்ளைத் தண்டுடனும் அரை இஞ்சு உயரத்துக்கு வெண்டை முளைத்திருந்தது ஆங்காங்கே. அவ்வாறே அவரை, கொத்தவரை, பூசணி, பறங்கி இவையும் முளை விட்டிருந்தன. அவரை விதை இரண்டாகப் பிளந்து, குறுத்து இலையின் கீழே இருபக்கமும் கை விரித்தாற்போல் வெளியே வந்திருந்தது. அப்பா அதைச் சுட்டிக் காட்டி, “இன்னும் வளர்வதற்கு இந்த விதைகளிலிருந்தே சத்தை இழுத்துக்கும். அப்புறம் இந்தக் கைகள் காய்ந்து விழுந்து விடும்” என்று விளக்கினார் அப்பா.

 இட்ட பெரும்பாலான விதைகள் அடுத்தடுத்து முளைவிட்டு சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தன.

தினமும் மாலையில் செடிகளுக்கு நீர் ஊற்ற நானும் என குட்டி வாளி சகிதமாய் உதவிக்கு வந்து விடுவேன்.

இரு அக்காமார்களும் தங்கள் தோழிகள் வீடுகளிலிருந்து கனகாம்பரம், துலுக்க சாமந்தி, முல்லை, டிசம்பர், செம்பருத்தி  போன்ற பூக்களின் விதைகளையோ, பதியன்க்ளையோ கொண்டுவந்து கிணற்றுக்கருகில் வைத்தனர்.  எனக்கும் என் கடைசி அக்காவுக்கும் ‘பட்டு ரோஸ்’ எனப்படும் ஒரு பூவின் மீது கொள்ளை பிரியம். அது ரோஜாபோன்ற அமைப்பில் அடுக்கடுக்கான இதழ்களுடன்  ஆழ்ந்த பின்க் நிறத்தில் ஒரு இஞ்சு சைசுக்குப் பூக்கும்; அதற்கு மணம் ஏதும் கிடையாது.. எங்கள் ஆரம்பப் பள்ளியின் சன்னலோரத்தில் அது நிறைய வளர்ந்து பூத்துக் குலுங்கும். அதன் இலைகள் ஒரு இஞ்சு நீளத்துக்கு கத்தி போல இருக்கும். ஒரு நான்கைந்து இலைகளுடன் ரெண்டு, மூணு  இஞ்சு நீளத்துக்கு அதன் ஒரு தண்டை ஒடித்து வந்து மண்ணில் செறுகினால் போதும்; அடுத்த ஓரிரு நாட்களில் வேர்விட்டு முளைத்துக்கொண்டு விடும். அப்படி ஏழெட்டு பட்டு ரோஸ் செடிகளையும் பதியனிட்டோம். அவையும் கிடுவிடுவென்று துளிர் விட ஆர்ம்பித்து விட்டன.

அடுத்துவந்த வாரங்களும் மாதங்களும் எங்களுக்கெல்லாம் உற்சாகமும் ஆனந்தமும் அளிக்கும் தினங்களாக இருந்தன. ஒவ்வொரு செடி விடும் முளைகளும், இளம் தளிர்களும், அவை வளரும் வேகமும் பின் அவை மொட்டு விடுவதும், பின்னர் ஓவ்வொரு காய்கறிச் செடியிலும் ஒவ்வொரு விதத்தில் மலர் மலர்வதும் அந்தச் சின்ன வயதில் எத்தனை ஆனந்தத்தைத் தந்தன! 

  இன்றுகூட  அந்த நினைவுகளை அசை போடும் போதும் அந்த ஆனந்தத்தின் சாயலை உணர முடிகிறது. இளம்பிராயத்துக் கண்களில் அவையெல்லாம் எத்தனை எத்தனை அற்புதங்களாக விரிந்தன அன்று!

பூக்கள் விரிய ஆரம்பித்தவுடன் எங்கிருந்தோ பட்டாம் பூச்சிகளும் தேனீக்களும் வந்தன. தேனீக்களை அத்தனை கிட்டத்தில் நான் அப்போதுதான் பார்த்தேன். அவை பூக்களில் உள்ள தேனைக் குடித்துவிட்டு தங்கள் கால்களில் மஞ்சளாய்  மகரந்தப் பொடிகளைத் திரட்டிக் கொள்ளும்.

அப்பா அவற்றைக் காட்டி எங்களுக்கு மகர்ந்தச் சேர்க்கை பற்றி சொல்லிக் கொடுப்பார். தேனி எப்படி மலரிருந்து குடித்த தேனைத் தன் வயிற்றில் பக்குவப்படுத்தித் கெட்டியாக, கெட்டுப்போகாத தேனாக மாற்றித் தன் கூட்டில் சேமித்து வைக்கும் என்று விளக்குவார். அதன் கொடுக்கைக் காட்டி எச்சரிக்கையாய் இருக்குமாறு அறிவுறுத்துவார்.

காலில் ஒட்டிக் கொண்டு போகும் மகரந்தத்தை பயன் படுத்தி தேன் மெழுகு உண்டாக்கி எப்படிக் கூடு கட்டும் என்று விளக்குவார். எல்லாம் அந்த வயதில் கேட்க ஆச்சரியமாய் இருக்கும். 

“இப்போ, நம்ம ஊர் பஞ்சாயத்து போர்டிலேயே வீட்டிலே தேனி வளர்க்க சொல்லிக்கொடுக்க ஆளுங்கள்ளாம் வர்ரா. தேன் பெட்டி வாங்க மானியமெல்லாம் கொடுக்கராளாம்” என்றார் அப்பா.

அடுத்த இரண்டு வருடங்களில் எங்கள் வீட்டிலேயே தேன் பெட்டி வைத்து தேனீக்களை  வளர்த்தோம்! அது ஒரு தனிக் கதை! 

பறங்கி பூசனி இவை கொடிகள்; கடகடவென்று அவை வளர்ந்து படரும் வேகம் ஆச்சரியமானது.  இவற்றில் ஆண் பூக்கள், பெண் பூக்கள் என்று தனித்தனி உண்டு என்று அப்போதுதான் தெரிந்து கொண்டோம்.. இவற்றின்  பெண் பூக்களில் முதலில் பிஞ்சு விட்டபின்னரே பூ மலர்வது என்பது ஓர் வித்தியாசமான ஆச்சரியமாய் இருந்தது.

எங்கள் விஞ்ஞானி அண்ணன் அவன் போக்கில் செடிகள் வைக்கும் மும்முரத்தில் இருந்தான். “நம்மூர் கிளைமேட்டுக்கு இதெல்லாம் வளராதுரா” என்று அப்பா சொல்வதைக் காதில் வாங்காமால் அவன், உருளைக்கிழங்கு, வெங்காயம், கொண்டைக் கடலை, பேரிக்காய், பிளம்  இவற்றை வளர்க்க முனைந்து கொண்டிருந்தான்!

ஒரு நாள் வீட்டில் வாங்கியிருந்த அன்னாசிப் பழத்தின் கொண்டையைக் கத்தரித்து ஒரு ஓரத்தில் நட்டு வைத்தான்.

அண்ணனின் ஆராய்ச்சியில் எதிர்பாராது வளர்ந்தவை வெங்காயமும், அன்னாசியும். மற்றவை ஒன்றும் முளைக்கவில்லை. நீள நீளக் கத்திகள் போல ஏராளமான முட்களுடன் அசுர வேகத்தில் இலைகள் விட்டுக்கொண்டு வளர்ந்த அன்னாசிச் செடியின் வடிவமே மிரட்டுவதாக இருந்தது.

அக்காமார்களின் தலைகள் நிறையக் கனகாம்பரமும், டிசம்பர் பூகக்களும் அலங்கரிக்க ஆரம்பித்தன. அலுக்காமல் முல்லை பூக்களைப் பறித்து முழம் முழமாய்த் தொடுத்து வைத்துக் கொண்டு அழகு பார்த்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல, பூத்த செடிகள் காய் விட ஆரம்பித்தன. காலையில் கொல்லையில் சுற்றும்போது அப்பா மிகப் பிஞ்சான வெண்டைக்காய், கொத்தவரங்காய்கள் ஒன்றிரண்டைப் பறித்து அப்படியே பச்சையாகக் கடித்து சுவைப்பார். முரண்டு பிடிக்கும் எனக்கும் வாயில் திணித்துவிடுவார். எனக்கு என்னவோ அவை ருசித்ததில்லை!

புலங்காய் பிஞ்சுகள் மற்றொரு ஆச்சரியம். குட்டியாய் ஸ்பிரிங்கு போல் சுருண்டிருக்கும் அவை. அவை சற்றே பெரிதானதும் அப்பா, அவற்றின் நுனியில் ஒரு சணலைக் கட்டி, மறு முனையில் சிறு கல்லை எடைக்காகக் கட்டித் தொங்க விட்டு விடுவார்.  அப்படித்தான் வளைந்து சுருண்டிருக்கும் புடலை,  கல்லின் கனத்தினால் நீண்டு,  பாம்பு போலப் பந்த்லிலிருந்து தொங்கும்.

காலா காலத்தில் காய்கள் பறிக்கும் நிலைக்கு வந்தன; அன்றாடம் கொல்லையில் ஒரு சுற்று சுற்றி வந்தால் வெண்டைக்காய், கொத்தவரை, அவரைக்காய், கத்தரி, தக்காளி, பச்சை மிளகாய், பாகல், அவ்வப்போது பூசணிப் பிஞ்சு, பறங்கிப் பிஞ்சு, வாழைப் பூ என்று பை நிறையப் பறித்துக் கொண்டு வரமுடிந்தது.கூடவே கீரையும்.

அப்பா ஆரம்பத்தில் ஊகித்தது போலவே எல்லாச் செடிகளும் பம்பர் அறுவடைதான் அளித்தன! அவரைக்காய்கள் காய்த்த அளவு மலைப்பாய் இருக்கும். பல்கிப் படர்ந்திருந்த பூசணி, பறங்கியின் பெரிய பெரிய இலைகளை விலக்கி எங்கெங்கே காய் விட்டிருக்கிறது என்று அவ்வப்போது பார்த்து வைத்துக் கொள்வோம். எப்போதாவது எங்கள் கண்ணில் படாது ஏதேனும் ஒரு கொடியில் இலைகளுக்குக் கீழே பெரிய பூசணிக்காய்கள் ஒளிந்து கொண்டும் இருக்கும்! கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல் சந்தோஷத்துடன் ஓடிப்போய் அப்பாவிடம் சொல்லுவோம்!

அண்ணன் வைத்த அன்னாசி அற்புதமாய் வளர்ந்து மிகப் பெரிய பழத்தைத் தந்தது! அவன் வைத்த வெங்காயமும் மண்ணுக்கடியில் கொத்துக்கொத்தாய் விளைந்திருந்தது. பொங்கலுக்கு முன் இஞ்சி, மஞ்சள், சேப்பங்கிழங்கு இவற்றை மண்ணை அகழ்ந்து வெளியே எடுத்தோம். எல்லாம் தாராளமாய் விளைந்திருந்தன.

எல்லா செடிகளும் காய்க்கும் வரை இருந்த உற்சாகம் நாளாவட்டதில் என்னைப் போன்ற சிறார்களுக்கு சமையற்கட்டில் பிர்ச்சனையாக் முளைத்தது.

 “அம்மா! தினம் தினம் எதுக்கு வெண்டைக்காய் கறி பண்றே? ஐயோ! பூசணிக்காய் கூட்டா? அலுத்துப் போச்சுமா. இன்னிக்கும் எல்லாக் காயும் போட்ட அவியலா? இப்பத்தானே ரெண்டு நாள் முன்னால் பண்ணினே? எனக்கு இந்த கத்திரிக்காயைக் கண்டாலே வாந்தி வருது” … இப்படியெல்லாம் புலம்புவதும், அப்பா ஒரு அதட்டல் போட்டு எங்களைச் சாப்பிட வைப்பதும் நடந்தன!

வாழைகள் தார் விட்டன. சீப்பு சீப்பாய் பூவன் காய்கள் சமையற் கட்டில் இறைந்தன. அம்மாவுக்குப் பிடித்த வாழைக்காய் வறுவல் திருவிழா அவ்வப்போது நடந்தது.  சமையற் கட்டுள்ளில் இருந்த காற்றோட்டமில்லாத ஸ்டோர் ரூமில் தட்டு தட்டுகளாய் வாழைச் சீப்புகள் பழமாக மாறிக்கொண்டிருந்தன. இரவு சாப்பாட்டுக்கப்புறம் அப்பா தலைக்கு மூன்று வாழைப்பழங்களைத் திணித்துவிடுவார். “பாரு, அழுக ஆரம்பித்துவிடும்; வீணாப் போயிடும்; சாப்பிடுங்கோ, சாப்பிடுங்கோ”. எனக்குப் பிடிக்காத பழங்கள் லிஸ்டில் பூவன் பழமும் சேர்ந்தாயிற்று.

தெருவில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் வீடுகளுக்கு அவ்வப்போது காய்கறிகளும், பூசணி பரங்கி பத்தைகளும் இலவசமாய்ப் போகும். வெளியூரிலிருந்து உறவினர்கள் யாரேனும் வந்தால் பை நிறைய அவரைக்காயும், சொத்தைகள், முத்தல்கள கலந்த கத்தரி வெண்டைகளும், ஓரிரண்டு சீப்பு வாழைப் பழங்களும் அப்பா தலையில் கட்டாத குறையாகக் கொடுத்து அனுப்பிவிடுவார்!

அடுத்த 2, 3 வருடங்கள் கொல்லையில் காய்கறிகள் தொடர்ந்து காய்த்தன; அப்பா தொடர்ந்து பாடுபட்டார். சிறார்களுக்கு அப்பாவுக்கு உதவுவதில் சோம்பல் வர ஆரம்பித்தது உண்மை. 

மூன்றாவது வருடம் பறங்கியும் பூசணியும் சக்கை போடு போட்டன. அப்பா, இவ்விரு கொடிகளையும் வீட்டுக் கொல்லைப் புற ஓட்டின் மீது ஏற்றி விட்டிருந்ததார். தாராளமாக சூரிய ஒளி கிடைத்ததால், பிரமாதமாக தழைத்து ஓட்டின் மீது படர்ந்தன. பெரிய பெரிய பானைகள் போன்ற காய்கள்! 

இந்த வருடம் அப்பா புதிதாகப் போட்டது வெள்ளரிக்காய என்று நினைத்துக்கொண்டு போட்ட கக்கரிக்காய். சுவைக்க வெள்ளரி போலவே இருந்தாலும் இந்தக் காயின் மேற் தோலில் பொடிசாக மெல்லிய முட்கள் இருக்கும். தோலை சீவிவிட்டே சாப்பிடமுடியும். கணக்கு வழக்கில்லாமல் காய்த்துக்கொண்டே இருந்தது.

அப்போது தான் பெரியக்காவின் கல்யாணமும் நிச்சயமாயிற்று. கல்யாணம் தீர்மானமாகியதுமே சிக்கனக்கார அப்பா, ஓட்டின் மீது காய்த்திருந்த பறங்கி, பூசணிகளை நன்றாகக் கொடியிலேயே முத்தவிட்டார். பின் ஏணி வைத்துக் கூறையின் மீது ஏறி அவற்றைப் பறித்து சமையற்கட்டு அலமாரியில் அடுக்கி வைத்தார் அப்பா. 

பெரிய கிராமத்து வீடாததால், வீட்டிலேயே வைத்துத் தான் கல்யாண வைபவம். கொல்லை இரண்டாம் கட்டில் கோட்டை அடுப்புகள் வைக்க வசதிகள் இருந்தன. எல்லாவற்றிலும் சிக்கனம் பார்க்கும் அப்பா எப்படியோ, சமையலுக்கு மட்டும் மிகவும் பேர்பெற்ற சமையற்காரரான கும்பகோணம் ராஜுவுக்கு சொல்லி வைத்துவிட்டார்.

கல்யாண விருந்துக்கு உபயோகிக்க பறங்கி, பூசனி, மொந்தன் வாழை, வாழைத்தண்டு, வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய், தேங்காய், அவரைக்காய் என்று எல்லாமே  வீட்டுக்கொல்லையிலிருந்தே பெரும்பாலும் தேற்றியாகி விட்டதால் அப்பாவின் காய்கறி பட்ஜெட்டில் நிறையவே சேமிப்பு!

கும்பகோணம் ராஜுவின் கை மணத்தில் மாயாபஜார் கடோத்கஜனைப் போல “கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்” என்று ஊர்க்காரர்களும் உறவினர்களும் பாடாத குறைதான். அப்பாவுக்கு கல்யாண சாப்பாட்டை எல்லாரும் பாராட்டியதில் ஒரே குஷி.

கும்பகோணம் ராஜு விடை பெறும் தருணம். அப்பாவே மனம் வந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை கூடுதலாக வைத்து வெற்றலைப் பாக்குடன் ராஜுவுக்கான சம்பளத்தைக் கொடுத்தார். “ஜமாச்சுட்டேள் ராஜூ. ஊர்க்காரா எல்லாம் உங்க சமையலை ரொம்பவே பாராட்டி சொன்னா. ரொம்ப தேங்க்ஸ்!” என்றார்.

“நான் தான் சார் ஒங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஆத்துலே வெளெஞ்ச காய்கறின்னா ருசியே தனிதான். கடையிலே மொத்தமா வாங்கினோம்னா முத்தலையும் சொத்தலையும் சேர்த்து தள்ளி உட்ட்டுடுவான். அத விடுங்க! அந்த கக்கறிப் பிஞ்சு பத்தித்தான் நான் உங்களுக்கு சொல்லணும்னு ரொம்ப.  நாங்கள்ளாம் அடுப்படி சூட்டிலே வேகறவா. எங்களுக்கு இந்த விருந்து சாப்பாடு ஒண்ணும் ருசிக்காது. சூட்டுக்கு இதமா நான் அப்பப்போ போய் ஒங்க கக்கரிப் பிஞ்சுகளைப் பறிச்சு சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன். என்ன ருசி, என்ன குளிர்ச்சி போங்கோ!”

என்று சொன்ன ராஜு , தம் மேல் துண்டை பிரித்துக் காட்டி, “இப்போத்தான் கெளம்பறத்துக்கு முன்னாடி ஊர்லே பசங்களுக்கு கொடுக்கலாமேன்னு ஒரு பத்து பன்னண்டு பிஞ்சைப் பறிச்சு கட்டிண்டேன்; ஒங்களுக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லையே?” என்றார்.

“ஆகா, தாராளமா கொண்டு போங்கோ!” என்றார் அப்பா வாயெல்லாம் பல்லாக!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here