அத்தரிப்பாச்சா கொழுக்கட்டை!

(சின்ன வயதில் கேட்ட பாட்டிக் கதைகள்-1)

0
602

ஒரு முன் குறிப்பு: உங்களுக்கு இது போன்ற கதையைப் படிப்பதை விடக் கேட்பதில் விருப்பமா? அப்படியானால், இந்தக் கதையை ‘கதை ஓசை‘ தீபிகா அருணின் அருமையான குரலில் Spotify இல் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்:

ரொம்ப காலம் முன்னாடி ஒரு கிராமத்திலே, சுப்புணி, சுப்புணின்னு ஒரு ஆளு இருந்தான். அவனுக்கு படிப்பு ஏறலை. சரியான சோம்பேறி. சாப்பாட்டு ராமன். எப்போதும் ஏதாவது வாய்க்கு ருசியாய் அவனுக்குத் தின்று கொண்டிருப்பதில் தான் விருப்பம். அவன் அப்பா நல்ல விவசாயி. அவர் அவனைத் தன் வயலில் வந்து கட்டாயமாக வேலை செய்ய வைப்பார். யாரும் வேலை செய்யாமல் வெட்டிச் சோறு தின்னக் கூடாது அல்லவா?

சுப்புணி வேண்டா வெறுப்பாகத் தான் வேலை செய்வான். எப்போதடா வேலை முடியும் என்று பார்த்திருந்து வீட்டுக்கு ஓடுவான். “அம்மா, பசிக்குது சோறு போடு; ருசியா என்ன புதுசா செய்திருக்கே?” என்று அதட்டலாய் கேட்பான். “இன்னிக்கு சோறும் குழம்பும் தாண்டா மவனே!” என்றால் சுப்புணி கோபத்தில் கூப்பாடு போடுவான்; பாத்திரங்களை விசிறி அடிப்பான்.

மாலையில் கணவர் வயலிலிருந்து திரும்பி வந்ததும் சுப்புணியின் அம்மா, “ஏங்க! எனக்கோ வயசாகுது; சுப்புணி விதம் விதமாய்ப் பண்ணித் திங்கணும்னு அலையுறான். பேசாமே அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிடுங்க; அவன் பொண்டாட்டி வந்து அவனுக்கு விதம் விதமாய்ப் பண்ணிப் போடட்டும்; என்னால ஆகாது” என்றாள்.

“இந்த முரட்டுப் பயல், சோம்பேறிக்கு எவன் பெண்ணைக் கொடுப்பான்?” என்றார் சுப்புணியின் அப்பா.

ஆனாலும் அங்கே இங்கே பேசி சுப்புணியின் அம்மா வெளியூரில் இருந்த தூரத்து உறவுக்காரப் பெண் ஒருத்தியைக் கண்டுபிடித்தாள். ரொம்ப ஏழைக் குடும்பத்துப் பெண். பெரியவர்கள் பார்த்துப் பேசி, சுப்புணிக்கு அந்தப் பெண்ணைக் கல்யாணம் கட்டி வைத்தார்கள்.

சுப்புணியின் புது மனைவி நன்றாகவே சமைப்பாள்.  கல்யாணம் ஆகி சில நாட்கள் அவள் அவனுக்கு தான் அறிந்தவரை, விதம் விதமாய் சமைத்துப் போட்டாள். ஆனாலும் அவன் தனக்கு  ஏதாவது புதிது புதிதாய் பதார்த்தங்கள் செய்து போட வேண்டும் என்று சத்தம் போடுவான். பெண்டாட்டி அலுத்துப் போய் செய்யாது விட்டால் கோபித்துக்கொண்டு அவளைத் திட்டுவான். அடிக்கக் கை ஓங்குவான்.

ஒரு நாள் சுப்புணி ஏதோ காரியமாக வெளியூர் போக வேண்டியிருந்தது. அப்போது அவன் போன ஊருக்கு அடுத்த ஊரில் தான் அவனது மாமியார் வீடு இருந்தது. மாமியார் வீட்டுக்குப் போனால் தன்னை மரியாதையாகக் கவனித்து நன்றாக சாப்பாடு போடுவார்கள் என்பதால் சுப்புணி வேலை முடிந்ததும் நேரே மாமனார் வீட்டுக்குப் போனான்.

“அடடே, வாங்க மாப்பிள்ளே!” என்று அவனை வரவேற்றார்கள். ” என்ன திடீர்னு வர்ரீங்க?, ஊரிலே எங்க பொண்ணு சுகமா? உங்க அப்பா அம்மா சுகமா?” என்றெல்லாம் விசாரித்தார்கள். ராத்திரி சாப்பிட்டு, தங்கிவிட்டு காலையில் தான் கிளம்பவேண்டும் என்று உபசாரம் செய்தார்கள். சுப்புணிக்கும் அதானே வேண்டியது?

“மாப்பிள்ளை வந்திருக்கிறாரே? ஏதாவது நல்லதாய் சமைத்துப் போடு” என்றார் மாமனார் தம் மனைவியிடம்.

“அதெற்கென்ன? அரிசிமாவும் வெல்லமும் தேங்காயும் இருக்கிறது; கொழுக்கட்டை செய்துவிடுகிறேன்” என்றாள் மாமியார்.

சாப்பாடு தயாரானது. சுப்புணி உட்கார்ந்தான். வாழை இலையில் சுடச்சுட கொழுக்கட்டை பரிமாரினார் மாமியார்.

சுப்புணி உருண்டை உருண்டையாய் இருந்த கொழுக்கட்டையை எடுத்து சுவைத்தான். ஆகா! என்ன ருசி என்ன ருசி! அவன் அப்படி ஒரு பதார்த்தம் இத்தனை காலம் சாப்பிட்டதே இல்லை! 

“அத்தே, இது என்னாது இம்புட்டு ருசியா இருக்குது? இதும் பேரென்ன? ” என்றான். “இதான் மாப்ப்ளே, கொழுக்கட்டை” என்றாள் மாமியார்.

“என்ன சொன்னீங்க?”

” கொழுக்கட்டை, கொழுக்கட்டை” என்றார் மாமியார் மீண்டும்.

முட்டாளான சுப்புணி தனக்குள் மீண்டும் மீண்டும் “கொழுக்கட்டை, கொழுக்கட்டை” என்று சொல்லிக்கொண்டான். அவனுக்கு பெயரெல்லாம் சும்மா சும்மா மறந்து விடும்.

“ஏன் அத்தே, இத எப்படி செய்யணும்னு உங்க பொண்ணுக்கு, அதான் என் பொண்டாட்டிக்கு தெரியுமா?” என்றான். “ஓ, தெரியுமே?” என்றாள் மாமியார்

இலையில் போட்ட கொழுக்கட்டைகளைத் தின்றபிறகு இன்னமும் போடச் சொல்லி அவற்றையும் தின்றான். வீட்டில் மற்றவர்கள் தின்பதற்கு மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் தானே தின்று “ஏவ்” என்று ஏப்பம் விட்டான்.

கை கழுவும்போது “கொழுக்கட்டை, கொழுக்கட்டை” என்று சொல்லிக்கொண்டான். திண்ணையில் போய்ப் படுத்தான். தூங்கும்வரை “கொழுக்கட்டை கொழுக்கட்டை” என்று சொல்லிக்கொண்டிருந்தான். பேரு மறந்து போய்விடக் கூடாது. ஊருக்குப் போய் பெண்டாட்டியிடம் இதைப் பண்ணிப் போடச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவாறே தூங்கிப் போனான்.

சுப்புணி, காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு, அத்தை கொடுத்த கூழைக் குடித்து விட்டு தன் ஊருக்குக் கிளம்பினான்.

“அத்தே, நேத்து ராத்திரி பண்ணிப் போட்டீங்களே, அதன் பேரு என்ன?” என்றான்.

“கொழுக்கட்டை” என்றாள் மாமியார்.

“ஆங், கொழுக்கட்டை, கொழுக்கட்டை” என்று சொல்லிக்கொண்டே சுப்புணி கால் நடையாக தன் ஊரைப் பார்க்கக் கிளம்பினான். வழியெல்லாம் கொழுக்கட்டை கொழுக்கட்டை என்று சொல்லியவாறே போனான். பேர் மறந்து போய்விடக் கூடாது; ஊருக்குப் போய் பெண்டாட்டியிடம் பண்ணிப் போடச் சொல்ல வேண்டும். ஆகா என்ன ருசி என்ன ருசி!

கொழுக்கட்டை …. கொழுக்கட்டை….

சுப்புணி நடந்து போகும் வழியில் ஒரு நீரோடை குறுக்கிட்டது. அதில் முழுவதும் தண்ணீர் ஓடியது. அதன் அகலம் ரொம்பக் குறைவுதான். 

ஒன்று தண்ணீரில் இறங்கி அதைக் கடந்து போகலாம். ஆனால் இடுப்பு வேட்டி நனைந்து விடும். அல்லது  சற்று முயன்று  ஓடி வந்து ஓரு எம்பு எம்பித் தாவினால், இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்குக் குதித்து விடலாம்.

சுப்புணிக்குத் தன் புதிய வெள்ளை வேட்டியை அழுக்கான ஓடை நீரில் நனைக்க மனம் வரவில்லை. பேசாமல் தாவிவிடலாம்.

சுப்புணி, கரைக்கு 20 அடி தூரத்திலிருந்து தடதட வென்று ஓடி வந்து, “அத்தரிப் பாச்சா” என்று சொல்லியவாறே தாவி அடுத்த கரையில் குதித்துவிட்டான்!

அப்பாடி! தண்ணீரில் விழாமல் தப்பியாயிற்று.

ஆனால் அப்படித் தாவியதில் அவன் வாயில் வந்த ‘அத்தரிப் பாச்சா’ இதுவரை சொல்லியிருந்த கொழுக்கட்டையை மறக்கடித்து விட்டது!

அவன், இப்போது, ‘அத்தரிப்பாச்சா …. அத்தரிப்பாச்சா…” என்று சொல்லியவாறே தன் கிராமத்துக்கு போய்ச் சேர்ந்தான்.

வீட்டில் நுழைந்ததும் முதல் வேலையாக பெண்டாட்டியைக் கூப்பிட்டு, “ஏண்டி, உங்க வீட்டிலே எத்தினி நல்லா ‘அத்திரிப்பாச்சா’ செய்து போட்டாங்க! உனக்கும் அது சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களே; நீ ஒரு நாள் கூட எனக்கு அது பண்ணிப் போட்டதில்லையே? சரி; இப்பவே எனக்கு நீ அத்திரிப்பாச்சா செய்து போடணும், ஆமா!” என்றான்.

“என்னாது? அத்திரிப்பாச்சாவா? அப்படி நான் ஒண்ணும் கேள்விப் பட்டதே இல்லையே?” என்றாள் அவன் மனைவி.

“ஏண்டி பொய் சொல்லுறே? உங்க வீட்டிலே நேத்து ராத்திரி உங்க அம்மா செஞ்சி போட்டு தின்னவன் நான் சொல்றேன்! உனக்கு அப்படி ஒண்ணு தெரியாதுன்னு பொய்யா சொல்லுறே?” என்று அதட்டினான் சுப்புணி.

“அத்தே, இதப் பாருங்க. இவரு ஏதோ அத்திரிப்பாச்சா செய்து போடுன்னு அடம்பிடிக்கிறாரு! அப்படி ஏதானும் பதார்த்தம் உண்டா என்ன?” என்று தன் மாமியாரைக் கேட்டாள் அவள்.

“எலே! முட்டாளே, அப்படி ஏதும் கிடையாதுரா” என்றாள் சுப்புணியின் அம்மா.

சுப்புணிக்கு கோவம் எகிறியது. ” அங்கே அத்தை பண்ணிப் போட்டு நான் தின்னுட்டு வந்து சொல்றேன், என்னை என்ன முட்டாளாக்கப் பாக்குறீங்களா? ஏண்டி, உனக்கு அத்திரிப் பாச்சா பண்ணத் தெரியாததாலே தானே இப்படி சொல்றே? ஏம்மா, நீயும் இவளுக்கு ஒத்துப் பாடுறே?” என்று இறைந்தான் சுப்புணி.

“போய்யா பொழப்பத்த ஆளு” என்று கோவத்துடன் சொன்னாள் அவன் பொண்டாட்டி. சுப்புணிக்கு வந்ததே கோவம்!

“என்னாடி சொன்னே?” என்றவாறே சுப்புணி ஒரு தடியைக் கையில் எடுத்து அவளை அடிக்க ஓங்கினான். அவள் தப்பித்து ஓடினாள். சுப்புணி அவளைத் துறத்தியவாறே பின்னால் ஓடினான். ஓடும் வழியில் ஒரு வாழைப்பழத் தோலியில் கவனிக்காது கால் வைக்க,  சர்ரென்று சறுக்கி விழுந்தான் சுப்புணி. கையிலும் காலிலும் மண்டையிலும் நல்ல அடி.

சுப்புணி இப்போது கட்டிலில் படுத்திருந்தான். விழுந்து அடிபட்டதில் ஒரே வலி. சுப்புணியின் மனைவி அவனுக்கு அடி பட்ட இடங்களில் தவிட்டை சூடு பண்ணித் துணியில் சுருட்டி வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆங்காங்கே அவன் உடம்பில் வீக்கம். “அடடா, எப்படி கொழக்கட்டை, கொழக்கட்டையாய் வீங்கியிருக்கு” என்றாள் அவன் மனைவி.

“ஆங்! அதே தான் கொழக்கட்டை, கொழக்கட்டை! அதைத்தான் உன் அம்மா எனக்கு சமைச்சுப் போட்டாங்க!”

“அடப் பாவி மனுசா! எனக்கு கொழக்கட்டை நல்லா பண்ணத் தெரியுமே? அதைச் சொல்லாமே நீ ஏதோ அத்திரிப்பாச்சான்னு இல்லே சொன்னே?” என்றாள் அவன் மனைவி.

கொழக்கட்டை போல வீங்கியிருந்த இடங்களைத் தடவியவாறே அசடு வழியச் சிரித்தான் அத்தரிப்பாச்சா சுப்புணி!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here