ரேடியோ நினைவுகள்!

0
1460

என் வானொலி நினைவுகள் ஏராளம், ஏராளம்!

என் சிக்கனத் தந்தை எப்படியோ வானொலிக்கு மட்டும் செலவழித்து விடுவார்! நான் பிறப்பதற்கு முன்பே வீட்டில் வானொலி இருந்தது (65 வருடங்கள் முன்பு). முதலில் ஒரு ‘மர்பி’ இருந்தது; பின் ஒரு ‘டெல்பி’ வந்தது.

எனக்கு நினைவு தெரிந்தபோது, காலையில் திருச்சி வானொலியில் மங்கள இசையிலிருந்து நாள் தொடங்கும். ஐந்து நிமிடங்கள் ஷேக் சின்ன மௌலானாவின் நாதஸ்வர ஒலி!

என் தந்தைக்கு வீட்டில் கர்னாடக சங்கீதம் ஒலிக்க வேண்டும். (அவர் பொறுமையாய் இருந்து ஒன்றும் கேட்க மாட்டார்!) என் தாய் நல்ல ரசிகை. ஆக, காதில் தானே விழுந்தே நான் கர்னாடக சங்கீதத்தை ரசிக்கவும், ராகங்களை அடையாளம் காணவும் கற்றுக்கொண்டேன்.

திருச்சி வானொலிதான் சென்னையை விடத் தெளிவாக எங்கள் கிராமத்தில் கேட்கும். என் அக்காள் ஒரு நாடக ரசிகை. எல்லா குட்டி நாடகங்களையும் கேட்டுக்கொண்டிருப்பாள். டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தென்னூர் கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயர்கள் திருச்சி வானொலியில் அப்போது பிரபலம். அங்கமாலி கே ஜே ஜோஸ் என்கிற ஒருவர் (மலையாளி) வானொலி நிலைய வித்வான்; ‘தில்ரூபா’ என்கிற ஒரு ராஜஸ்தான் வயலினை வாசிப்பார், அதன் ஒலியே வித்தியசமானது. எல்லா நிகழ்ச்சிகளிலும் அதன் ஒலி கேட்கும்! மத்தியானம் ஒரு மணிக்கு அவர் அதில் கர்னாடகக் கச்சேரி வேறு எப்போதாவது செய்வார்!

என் இரண்டு அக்காக்கள், சென்னை வானொலி வழியேயே ஓலேட்டி வேங்கடேஸ்வருலு என்கிற ஒரு நல்ல தெலுங்கு வித்வான் சொல்லிக்கொடுத்த தியாகராஜர் கிருதிகளைக் கற்றுக்கொண்டார்கள்!

சிறு வயதில், ‘பாப்பா மலர்’ மிகவும் பிரபலம்! ரேடியோ அண்ணா (அவர் பெயர் இரா. அண்ணாசாமி என்று நினைவு) மிகவும் பிரபலம். மல்லிக் என்கிற ஒரு வானோலி இசையமைப்பாளர் நல்ல நல்ல பாட்டுகள் குழந்தைகள் பாடல்களாக இசையமைப்பார். ஏ. சி.ஜெயஸ்ரீ என்கிற ஒரு பெண் சும்மா சும்மா அதில் பாடுவாள். ஆனால் எங்களுக்கு அதில் நாடகங்கள் தான் சுவாரசியம்.

இன்றைய பிரபல சித்திர வீணை வித்துவான் ரவி கிரண், பாப்பா மலரில் 3 வயதில் வந்து, ஒரு ராகம் ஒருவர் சிறு ஆலாபனையாகப் பாடினால், தம் மழலைக்குரலில் அது என்ன ராகம் என்று கண்டுபிடித்துச் சொல்லும் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டு அதிசயப்பட்டது நினைவில் இருக்கிறது.

சினிமாப் பாட்டு கேட்க இருக்கவே இருக்கிறது சிலோன் வானொலி! ராஜா, அப்துல் ஹமீதை அறியாதவர் யார்? ஒரே சமயத்தில், திருச்சி வானொலி, இலங்கை வர்த்தக ஒலிபரப்பு, சென்னை வானொலியில் சினிமாப்பாட்டுகள் (நேயர் விருப்பம் இன்ன பிற) இருந்தால், எதில் நமக்குப் பிடித்த பாட்டு வருகிறது என்று இங்கும் அங்கும் மாற்றி மாற்றி (சில சமயங்களில் ஒன்றும் உருப்படியாகக் கேட்காமல்!) அலைபாய்ந்ததுண்டு!

‘ஒலிச்சித்திரம்’ (சினிமாவிலிருந்து ஒலிப்பதிவு செய்து, ஒரு மணி நேரமாகக் கதையைச் சுருக்கித் தருவது) என் அக்காக்கள் ஆர்வமாய்க் கேட்பார்கள். ஒரு அக்காளுக்கு “ரேடியோ நாடக விழா” என்றால் படு ஆர்வம்! அந்த சமயங்களில் சில பிரபல சினிமா, நாடக நடிகர்கள் கூட ரேடியோ நாடகங்களில் குரல் கொடுப்பார்கள்! (மனோகர், நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், கோபாலகிருஷ்ணன் இப்படி). “காப்புக் கட்டிச் சத்திரம்” என்று ஒரு நாடக சீரியல் பிரபலம்! அதில் மனோரமா, இளநீர் விற்பவராக குரல் கொடுத்து நடித்து மிகவும் பிரபலம் ஆனார்!

பின் தங்கவேலு காமெடி (ஒலித்தட்டுகள் மூலம்) அவ்வப்போது வானொலியில் ஒலிக்கும். கேட்கும்போதெல்லாம் சிரிப்போம். அந்த வசனங்களெல்லாம் மனப்பாடம்!

பின், சென்னை இசை விழா நேரடி ஒலிபரப்புகள்! சில வித்துவான்கள் “பிச்சு உதறுவார்கள்”! ( மணக்கால் ரங்கராஜன், மதுரை சோமு…) . ரசிகர்கள் முன்னிலையில் வித்துவான்கள் பாடுவதற்கும், அதே வித்துவான்கள் வானோலியில் ஒலிப்பதிவு அறையில் பாடுவதற்கும் உள்ள வித்தியாசம் (பாடும் தரத்தில், உற்சாகத்தில், கற்பனைகளில்) அப்போதெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும்!

அவ்வப்போது நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் விரும்பிக் கேட்டவர்கள் பெயர்களைப் படிக்கும்போது லிஸ்டு நீண்டுகொண்டே போகும்! “ஏண்டா, பேர் படிக்காட்டி என்ன முழுகிப்போச்சு? படிக்கிற நேரத்திலே ரெண்டு பாட்டு கூடப் போடுங்களேண்டா!” என்று புலம்பியதுண்டு!

பின் சிற்றலை ஒலிபரப்பில் ‘உலகப் பயணம்’ செய்ததுண்டு! மிகவும் நுணுக்கமாய் டியூன் செய்து பொறுமையுடன் தேடினால், பிபிஸி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, மாஸ்கோ வானொலி, பீகிங் வானொலி இவை கொரகொரவென்று கேட்கும்! அந்தக் காலத்திலேயே பீகிங் வானொலி, மாஸ்கோ வானொலி, பிபிஸிஇல் ஒரு குறிப்பிட்ட குறுகிய நேரங்களில் தமிழ் ஒலிபரப்பு இருக்கும்! சீனர்கள் பேசும் தமிழ் படு சிரிப்பாக இருக்கும்! ராகம் போட்டுப் பேசுவார்கள்!

என் தந்தை, இந்திய பாகிஸ்தான் போர் நடந்த போது சில சமயம் சிற்றலையை நோண்டி, பாக்கிஸ்தான் வானொலியைப் பிடித்து செய்திகளைக் கேட்பார். “நம்ம ஆளுங்க சொல்ற சாவுக் கணக்கும் அவங்க சொல்ற சாவுக் கணக்கும் நேர் தலை கீழான்னா இருக்கு?” என்று புலம்புவார்! “உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, குசும்பு!” என்று என் தாய் திட்டுவதையும் கேட்டுக்கொள்வார்!

பொங்கல் நாட்களில், சிறப்புப் பட்டிமன்றம் (பெரும்பாலும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று இலக்கியத் தரமாய் இருக்கும்), கவியரங்கம் கேட்டதுண்டு. அப்துல் ரகுமான், கலைஞர் கருணாநிதி இவர்களெல்லாம் அந்தக் கணத்தில் இயற்றிப் பதிலடியாய்க்கொடுக்கும் கவிதைகளும் அவற்றில் கேட்டதுண்டு.

பெரிய அக்காள் திருமணமாகி, வடக்கே வேலை பார்க்கும் அவள் கணவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம், ரேடியோவில் இந்திப் பாடல்கள் ஒலிக்கும்; சமையற்கட்டிலிருந்து வெங்காயமும் மணக்கும்! இரட்டை விருந்து!

ஒரு காலத்தில் “பெருமைக்கு சரைப்பதுபோல” நானும் கிரிக்கெட் வர்ணனைகள் கேட்டதுண்டு. நல்ல காலம், அதிலிருந்து சீக்கிறமே வெளியே வந்துவிட்டேன்! எனக்கு அடுத்த நாள் பேப்பரில் ஸ்கோர் பார்ப்பதே போதும்! (‘ஓ! சரியாய்ப் புரியாததால் விட்டுவிட்டாயா’ என்று கேட்கிறீர்களா!?)

அப்போலோ -13 விண்கலம் கோளாராகி, பின் வேறொரு ராக்கெட் அனுப்பி, விண்வெளி வீரர்களை மீட்டுக்கொண்டு வந்த சாதனை வர்ணனைகளை அமெரிக்க வானோலி ஒலிபரப்பில் கேட்ட நினைவு. அதுபோலவே ‘ஸ்கைலாப்’ என்கிற விண்வெளி ஓடம் உடைந்து பூமியில் விழுந்த விவரங்கள் அமெரிக்காவிலிருந்து செய்த நேரடி ஒலிபரப்பிலும் கேட்டேன்.

கல்லூரியில் படிக்கும் நாட்களில், புதன் இரவு ஒரு மணி நேரம் பழைய பாடல்களை நேயர் விருப்பத்தில் சென்னை வானொலி ஒலிபரப்பிய காலம். “கண்கள் இரண்டும் இங்கு உன்னைக் கண்டு தேடுதே”, “இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே”, “நினைக்கத் தெரிந்த மனமே” என்று சில பாடல்கள் அலுத்துப்போகும் அளவுக்கு பல வாரங்கள், மாதங்கள் முன்னணியிலேயே இருந்த நினைவு.

கல்லூரி நாட்களில், சிற்றலையை நோண்டுகையில், இலங்கை வானோலி நிலையம் தென் கிழ்க்கு ஆசிய நாடுகளுக்கென்று ஒரு ஒலிபரப்பு மாலை நேரங்களில் செய்வது தெரிய வந்தது. அதில்தான் முதன்முதலில் மலையாளத் திரைப்படப் பாடல்கள் கேட்டுக் “காதலாகினேன்”! மலையாள மொழியின் இனிமை, ஜி.தேவராஜன், பாபுராஜன், அர்ஜுனன், தட்சிணாமூர்த்தி போன்ற இசை அமைப்பாளர்களின் (கர்னாடக இசையைப் பெரிதும் சார்ந்த) இசையமைப்பு, ஜேசுதாஸ், ஜெயசந்திரன் இவர்களின் மென் குரல் இவற்றால் பெரிதும் கவரப்பட்டேன். அதனாலேயே நானே முயன்று மலையாள மொழியும் கற்றுக்கொண்டேன்!

முதன் முதலில், இளையராஜாவின் “அன்னக்கிளி உன்னைத் தேடுதே”, “அடி ராக்காயி, மூக்காயி….” “மச்சானப் பாத்தீங்களா” கேட்டு அந்த வித்தியாசமான இசையில் மயங்கி வாயைப் பிளந்த அந்த நினைவுகள் பொன் போன்றவை!

இப்படி எத்தனையோ மலரும் நினைவுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here