சரணம் ஐயப்பா!

0
137

கதையில் வராத பக்கங்கள் – 22 

22.    சரணம் ஐயப்பா!

நான் சபரிமலை ஐயப்பனைப் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கு 12,13 வயது இருக்கலாம். அதாவது 1969 வாக்கில்.

அப்போதுதான் எங்கள் கிராமத்துத் தெருவில் ஒரு இளைஞர் சபரி மலைக்கு செல்ல மாலை போட்டுக்கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருந்தார்.  எங்கள் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமத்தில் புதிதாய் குடி வந்திருந்த ஒரு குருசாமியிடம் இந்த இளைஞருக்கு பரிச்சயம் ஏற்பட்டதின் விளைவு அது.

அப்போது அவர் வீட்டுப் பையன்கள் மூலம் சபரிமலை யாத்திரை பற்றியெல்லாம் முதன் முதலாகக் கேட்டு வாயைப் பிளந்தது நினைவு இருக்கிறது. தலையில் இருமுடி சுமந்து கொண்டு 30, 40 கிலோ மீட்டர் தூரம் கடுமையான மலைப் பிரதேசங்களில் நடந்து போகவேண்டுமாம். படிகள் ஒன்றும் கிடையாதாம். வழியில் யானைகளோ, புலிகளோ வந்து தாக்குமாம். வழியில் எந்த ஒரு வசதிகளும் கிடையாதாம். போய் உயிருடன் திரும்பி வருவதே பெரிய விஷயமாம். ஆனால் அப்படிப் போய் வந்தவர்களுக்கு ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் கிட்டுமாம். வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்குமாம்.

எங்கள் ஊரிலிருந்து ஒரு சாமானிய மத்தியத் தரக் குடும்பத்திலிருந்து பெரிதாய் தெய்வ பக்தியோ, யம நியமங்களோ அறியாத ஓர் கிராமத்து இளைஞர் அத்தனை தூரம் பயணித்துப் போவது என்பதே எனக்குப் பெரும் வியப்பாய் இருந்தது அவ்வயதில்.

பிற்காலத்தில் நான் கோவையில் ஆஸ்டலில் தங்கிப் படிக்கையில் கோவையிலிருந்து சபரி மலை யாத்திரை போகிறவர்கள் கண்ணில் படுவது சகஜமாகி விட்டது. அதற்கும் பிற்காலத்தில் சென்னையில் வாசம் செய்ய வந்த பிறகு அது இன்னும் பரவலாகக் கண்ணில் படலாயிற்று. இந்தக் கால இடைவெளியில், சபரிமலை ஐயப்பனின் புகழ் தென்னாடு முழுவதுமே மிகவும் பிரபலம் ஆகிவிட்டது; யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை எத்தனையோ பல மடங்குகள் கூடிவிட்டன. 

பொதுவாகவே சபரிமலை யாத்திரை செல்பவர்களின் தராதரம் பற்றி எனக்கு ஓர் இளைஞனாய் பல ஐயங்கள் இருந்தன.  ஒரு மண்டலம் சிரத்தையாய் விரதமிருப்பவர்கள் ஒரு புறம் இருக்க, ஒரு வாரம் மாலை போட்டுக்கொண்டு அவசரகதியில் ஐயப்பனைப் போய்ப் பார்ப்பவர்கள் பலரும் கண்ணில் பட ஆரம்பித்தார்கள்.

சபரி மலையில் ஓரிரு விபத்துகள் நடந்தன; பல பக்தரும் அங்கே மாண்டு போன செய்திகள் வர ஆரம்பித்தன.  இறைவனின் சான்னித்தியம் அங்கே குறைபட்டுக்கொண்டே போவதாகவும், சபரி மலை ஓர் குப்பைக் காடாக மாறி வருவதாகவும், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் சபரி மலை நிர்வாகிகளும் போலீசாரும் ஏதும் உருப்படியாய் செய்ய முடியாத சிரமங்களில் இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வரும்.

சிறு வயதில் அந்த மலை யாத்திரை மீது ஓர் கவர்ச்சி தோன்றினாலும், வயதாக ஆக மேற்கண்ட செய்திகள் மனதில்  எதிர்மறை எண்ண்ங்களையே தோற்றுவிக்க ஆரம்பித்தன.  இதெல்லாம் என்னமாதிரி  தெய்வபக்தி, அப்படி என்ன அந்த தெய்வத்திடம் ஓர் கவர்ச்சி என்றெல்லாம் தோன்றும்.

ஆக, நான் அடிப்படையில் சபரிமலை ஐயப்ப பக்தன் அல்ல. அதனால், இரு முடி கட்டி, விரதம் இருந்து சபரி மலைக்குப் போய்த்தான் பார்ப்போமே என்கிற எண்ணமும் தப்பித் தவறித் தோன்றியதே இல்லை.  

ஆனாலும், 2012 ஆம் ஆண்டும் 2013 ஆம் ஆண்டும் சபரி மலைக்குப் போய்வரும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு! அதன் பின்னே ஐயப்பனின் அருளும் என் குருவின் அருளும் இருந்தன! அது எப்படி?

சபரி மலை தேவஸ்தானக்காரர்கள் சபரி மலை வளாகத்தை மேலோட்டமாக அவ்வப்போது சுத்தம் செய்வது தவிர, பம்பை நதி தீரமும், மலை வளாகமும், வருடாவருடம் வந்து சேரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் பாதிப்பால், ஓர் மாபெரும் குப்பை மேடாக 25 -30 ஆண்டுகளாக ஆகியிருந்தது சபரி மலை பக்தர்கள் மாத்திரமே பரவலாக அறிந்த ஓர் உண்மை.

ஒரு கட்டத்தில், சபரிமலை ஒரு மாபெரும் ஆரோக்கியக் கேடுள்ள இடமாகக் கிட்டத்தட்ட ஆகிவிட்ட நிலையில், அது குறித்த வன்மையான விமரிசனங்கள் ஊடகங்களில் வர ஆரம்பித்ததும் 2012 ஆம் ஆண்டு கேரள அரசு, இந்தப் பிரச்சனையின் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொண்டது.

ஆனால், 25 ஆண்டுகளாக, ஆயிரக் கணக்கான டன்களாகக் குவிந்திருந்த குப்பைகளைக் களைவது என்பது சாமானியமா என்ன? அதற்கு எத்தனை மனித முயற்சி தேவை!

அப்போது அரசாங்கத்தில் இருந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி, தேவஸ்தான போர்டுடன் கலந்தாலோசித்தபின் ஓர் அதி புத்திசாலித்தனமான தீர்மானம் எடுத்தார். அது என்ன தெரியுமா? மாதா அமிர்தானந்த மயி (அம்மா) அவர்களின் உதவியைக் கோருவது என்கிற தீர்மானம் தான் அது!

அந்தக் கால கட்டத்தில் மாதா அமிர்தானந்த மயி அவர்கள், தம் மடத்தின் மூலம் ‘அமலபாரதம்’ என்னும் துப்புறவு இயகத்தைத் துவங்கி இருந்தார். மடத்து வாசிகள், பக்தர்கள், மடத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இவர்களை ஊக்குவித்து, தன்னார்வத் தொண்டாக சுற்றுப்புறங்களைத் தூய்மை செய்ய ஊக்குவிக்கும் ஓர் முனைப்பு அது. (இந்த அமலபாரதம் திட்டமே, பிற்காலத்தில் பிரதமர் மோதி தொடங்கிய ‘சுவச்சா பாரத்’ தூய்மைத் திட்டத்துக்கு முன்னோடி என்றால் அது மிகையில்லை).

கேரள அரசாங்கத்தின் வேண்டுகோளை உடனடி ஏற்ற அம்மா, தமது ஆசிரமவாசிகளையும் (பிரம்மசாரி, பிரம்மசாரிணிகள், இல்லற வாசிகள் — வெள்ளைக்கார ஆசிரமவாசிகள் உட்பட) அமிர்தா கல்லூரி மாணவர்களையும் மற்ற ஆர்வமுள்ள மடத்து பக்தர்களையும் சபரிமலையைச் சுத்தம் செய்யும் மாபெரும் பணியை ‘அமல பாரதம்’ திட்டத்தின் கீழ் ஓர் தன்னார்வத் தொண்டாகச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

உடனே அசுர வேகத்தில் காரியங்கள் நடந்தன. மடத்தில் ஆயிரக்கணக்கான குப்பை சேகரிக்கும் பைகள், விளக்குமாறுகள், குப்பைத் திரட்டிகள், கூடைகள் மற்ற தேவையான சாதனங்கள் வாங்கப்பட்டு, சுமார் 3200 தொண்டர்கள் சபரிமலைக்குப் பயணப் பட்டனர். (நவம்பர் 6, 7ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டு).

அந்தக் குழுவினரில் ஒருவனாக, மடத்துவாசியான நானும் பயணப் பட்டேன். ஆசிரமக் கல்லூரிகளின் பஸ்கள் எங்களைப் பம்பா வரை கொண்டு போய்ச் சேர்த்தன. அங்கிருந்து உற்சாகத்துடன் சாமி சரணம் பாடியவாறே, பம்பை வழி மலை ஏறினோம்.

கால் வலியும், மூச்சுத் திணறலும், சோர்வும் வருகையில் “சாமியே சரணம் ஐயப்பா”என்று முழங்கும்போது படியேறப் புதுத் தெம்பு வருவதை நான் கண்கூடாகக் கண்டு அனுபவித்த ஓர் உண்மை!

வந்தவர்களுக்கு மூன்று வேளையும் உணவு, தங்குவதற்கான இடங்களை தேவஸ்தானம் வழங்கியது. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தொண்டர்கள் மலைக் கோவில் வளாகம், அதன் சுற்றுப்புறங்களில் குப்பை அள்ளும் பணியைத் துவங்கினோம். உண்மையில் நாங்கள் கண்டது ஓர் புனிதத் தலமல்ல; எங்கும் பரவலாகப் பல்கிப் பெருகியிருந்த, அருவருக்கத்தக்க மாபெரும் குப்பைக் காடு!

கோவில் வளாகத்தைச் சுற்றிலும் பக்தர்கள் எறிந்துவிட்டுப் போன கழிவுகளிலும், கோவில் பிரசாத உற்பத்தி, உணவுக் கூடம் இவற்றிலிருந்து தூக்கியெறியப்பட்ட உணவுக் கழிவுகளையும் உணவுக்காக நம்பியே சுற்றிச் சுற்றி வரும் காட்டுப் பன்றிகள்! அவைகள் இட்டுப் போகும் மலக் கழிவுகள்; மகா மோசமான நிலையில் கிடந்த பல பொதுக் கழிப்பிடங்கள்!

குப்பைகளை அள்ளி, நெகிழி சாதனங்கள், கண்ணாடிக் குப்பிகள், எரிக்கக் கூடிய காகித, இலை, செடி, மரக் கழிவுகள், வீணாக்கிய உணவுப் பொருட்கள் என்று தரம் பிரித்தோம். எரிக்கக் கூடிய சாதனங்கள் வளாகத்திலேயே இருந்த சூளைகளுக்கு (incinerators) அனுப்பப் பட்டு எரியூட்டப் பட்டன. லட்சக்கணக்கில் இருந்த (பிளாஸ்டிக்) தண்ணீர்க் குப்பிகளையும், பிற சாதனங்களையும் ஆயிரக்கணக்கான கருப்பு நிற நெகிழிச் சாக்குகளில் திரட்டினோம். (சுமார் 50,000 சாக்குபைகள் நிறையக் குப்பைகள் அள்ளப்பட்டன!) நிர்வகத்தினர் ஏற்பாடு செய்திருந்த 10 டிராக்டர்கள் மாற்றி மாறி இந்த சாக்குகளை ஏற்றிக்கொண்டு அடிவாரத்துக்கு இட்டுச் சென்றன. (பின்னர் மறு சுழற்சிக்காக ஒப்பந்ததாரர்களிடம் நெகிழிகளை விற்பதற்காக).

கீழே பம்பை ஆற்று வளாகத்தைச் சுத்தம் செய்யப் பெரும்பாலும் பெண்கள் குழுக்கள் (சுமார் ஆயிரம் பேர்) களமிறங்கினர். ஆற்றின் படுகையில் தண்ணீருக்கடியில் பக்தர்கள் விட்டுப்போன துணிகள் ஆயிரக் கணக்கில் நோண்டி எடுக்கப் பட்டு நீக்கப் பட்டன. இப்படி இரண்டு நாட்கள் அசுர வேகத்தில் சுத்தீகரிப்பு நடந்தது; கோவில் வளாகம் புதுப் பொலிவு பெற்றது!

மீண்டும் மடம் அடுத்த ஆண்டும் (2013) சபரி மலை சீசன் துவங்குமுன்பு மற்றோரு சுத்தீகரிப்பை ஏற்றெடுத்தது. அப்போதும் நான் போனேன். அம்முறை சுவாமி ஐய்ப்பனைக் கண நேரம் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது!

இப்போது வளாகம் பெருமளவு சுத்தமாகிவிட்டது; நிர்வாகமும் கூடுதல் (நெகிழி உபயோகம் இன்னபிற) விஷயங்களில் பக்தர்களுக்கு சில தடைகளை விதித்துள்ளது. ஆயினும் வருடா வருடம் (தொடர்ந்த 7 ஆண்டுகள்) மாதா அமிர்தான மடத்தினர் போய் ஒரு சுத்தீகரிப்புப் பணியை செய்து வருகின்றனர். எனக்கு வயது ஏற, தெம்பும் உற்சாகமும் குறைந்ததால், பிற்பாடு போவதை நிறுத்திவிட்டேன்.

ஆக, ஒரு மகானின் சங்கல்பம் இருந்தால் இப்படிப்பட்ட அற்புதங்கள் நிகழும். அதுவே உண்மை. கூடவே இருந்து பார்க்கும் போது, பெரிய பெரிய நிர்வாக இயந்திரங்களோ, professional திறன் வாய்ந்த ஆளுமைகளோ ஏதுமின்றி, எப்படி இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பணிகள் நடக்கின்றன என்பது என்னைப் போன்ற ஆசிரம வாசிகளுக்கு ஓர் நிரந்தர ஆச்சரியமாக எப்போதும் இருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here