கிட்டிப்புள் ஆட்டம்

0
191

கதையில் வராத பக்கங்கள் – 23

23.  கிட்டிப்புள் ஆட்டம்

எங்கள் கிராமத்துத் தெரு விளையாட்டுகளில் பம்பரம், கோலிக்குண்டு, , டயர் உருட்டுதல், கபடி, பட்டம் விடுதல், பாண்டி, ஒளிஞ்சான் புடிச்சான் (அதாவது கண்ணாமூச்சி), பிள்ளையார் பந்து, நொண்டி, கிட்டிப்புள் இவையெல்லாம் பருவ மாற்றம் போல மாறி மாறி வந்து போகும். கிராமத்துக்கு லீவில் அவ்வப்போது பட்டணத்துப் பிள்ளைகளும் வரும்போது அவர்களுடன் பிற்காலத்தில் கிரிக்கெட்டும் வந்து சேர்ந்து கொண்டது. 

இவற்றிலேயே கொஞ்சம் டேஞ்சரான விளையாட்டு கிட்டிப்புள். அதை கில்லித்தாண்டு என்றும் சொல்லுவார்கள். 

அதில் சுமார் ஒண்ணேகால் அடி நீளமும் ஒரு இன்சு கனமும்  உள்ள ஓர் மரத்தடி இருக்கும். அதற்குப் பெயர் தான் கிட்டி, பின்னே சுமார் மூணு இன்ச்சு நீளமும் முக்கால் இன்ச்சு கனமும் உள்ள ஓர் சிறிய மரத்துண்டு இருக்கும். அதற்குப் பெயர் தான் புள்ளு. புள்ளின் இரு முனைகளும் பென்சிலைக் கூர் சீவியது போலக் கூராகச் சீவப் பட்டிருக்கும். கிட்டியைக் கொண்டு புள்ளை விதம் விதமாய் அடித்து விளையாட வேண்டும். எப்படி ஆடவேண்டும் என்று பல சட்ட திட்டங்கள் அந்த ஆட்டத்துக்கு உண்டு. 

கிட்டியைக் கொண்டு புள்ளை அடிக்கிறபடி அடித்தால் அது ஆகாயத்தில் விர்ரென்று பறக்கும். அதைக் கவனிக்காது எச்சரிக்கையின்றி  தெருவில் யாரேனும் நடந்தால், அதனால் அடிபட வாய்ப்பு உண்டு. அந்தப் புள்ளைக் காட்சு பிடிப்பதும் ஆட்டத்தில் ஒரு அங்கம்; அதனால் விளையாடும் பிள்ளைகள் கூட சமயத்தில் அந்தக் கூரான புல் தாக்கி அடிபட்டுக்கொள்வார்கள். 

ஊருக்கு ஒரு ஆளாவது புள்ளால் தலையிலோ, கண்ணிலோ அடிபட்டு ரத்தம் சிந்தாத கதை இல்லாமல் இருக்காது. அப்படி அடிபட்டால் தெருக்காரர்கள் திரண்டு வந்து, கிட்டிப் புள் ஆடும் பிள்ளைகளைக் கன்னா பின்னாவென்று என்று திட்டி, கிட்டியைப் பிடுங்கிக்கொண்டு ஆட்டத்துக்குத் தடை விதித்துவிடுவார்கள். அப்படி இந்த விளையாட்டு தெருவில் ஓரிரு ஆண்டுகளுக்குக் காணாது போய்விடும்.  பிறகு சத்தம் போடாமல் நைசாக மீண்டும் வந்து விடும்!

அப்படி 2, 3 ஆண்டுகள் காணாமற் போய், மீண்டும் எங்கள் தெருவில் ஒரு நாள் தலையெடுத்தது கிட்டிப்புள். தெருவுக்கு ஓரிரு பையன்களாவது வீட்டுக்கு அடங்காத   ‘ஹீரோ’க்களாக இருப்பார்கள். “அவன் பொறுக்கிப் பய, அவன் கூட சேராதே” என்று மற்ற பெற்றோர்களால் அச்சுறுத்தப் படுகின்ற விதத்தில் இருப்பார்கள் அந்தப் பையங்கள். அனேகமாக கிட்டிப் புல்லுக்குப்  புத்துயிர் கொடுத்து சீசனை ஆரம்பிப்பது அவர்களாகத் தான் இருக்கும். 

யாராவது “இதைச் செய்யாதே, கெடுதல் ” என்று பெரியவர்கள் சொன்னாலே அதை செய்து பார்த்துவிடவேண்டும் என்று சில பிள்ளைகளுக்கு அரிப்பு எடுக்கும். அப்படித்தானே?

அப்போது நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கிட்டிப் புல்  ஆட்டம் எனக்கு ரொம்பவுமே பிடித்துப் போயிற்று! என்ன அதிசயமோ தெரியவில்லை, நான் கிட்டிப் புள் ஆடப் போனபோது அவன் வீட்டில் “ஜாக்கிறதை, ஜாக்கிறதை” என்று எச்சரித்து அனுப்பினார்களே தவிர ஏனோ தடை செய்ய வில்லை. ஒருவேளை நான் ஆறாம் வகுப்புக்கு அதாவது மேல்நிலைப்பள்ளிக்கு போகிறேன் என்பதால், எனுக்கு பொறுப்பு உணர்வும் எச்சரிக்கையும் கொஞ்சம் கூடுதல் இருக்கும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ.

நான் இடது கைக்காரன் வேறு; எனுக்கு அந்த ஆட்டத்தை மிக லாகவமாக ஆடும் திறமையும் இருந்தது. அதனால் மற்ற பயல்கள்  நான் ஆடுவதை வியப்பாய்ப் பார்ப்பார்கள்! எங்கள்  ஊரில் அந்த ஆட்டத்துக்கு பல வித ‘டெக்னிக்குகள்’ உண்டு. புள்ளை உள்ளங்கையிலிருந்து, புறங்கையிலிருந்து, முழங்கையிலிருந்து, துடையிலிருந்து, பாதத்திலிருந்து என்று விதவிதமாய்த் தூக்கிப் போட்டு அடிக்கும் முறைமைகளும் அவற்றிற்கான  கிரமான சட்டதிட்டங்கள் உண்டு!

அன்று ஒரு நாள் நான்  தெருவில் கையில் கிட்டியுடன் மற்ற பிள்ளைகள் சூழ முதன்மை ஆட்டக்காரனாக ஆடுகையில், எங்கள் உள்ளூர் பள்ளியில் எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராயிருந்த ரங்கு சார் தெருவில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். “டேய், நிறுத்திக்கோ, சார் போயிடட்டும்” என்றான் அருகில் இருந்த பெரிய பையன். கப் சிப்பென்று எல்லாரும் ஓரமாய் ஒதுங்கி நின்றோம். ரங்கு  சார் எல்லாரையும் நோட்டம் விட்டவாறே, கடந்து சென்று இரண்டு வீடுகள் தள்ளி சைக்கிளை நிறுத்தி “டேய் சீ வி , இங்க வா!” என்று கூப்பிட்டார்.

நான் கிட்டியைக் கீழே போட்டுவிட்டு, பதை பதைக்க அவரிடம் ஓடினேன். அருகில் போய் நின்றதும், ரங்கு சார் என்னைக் கூர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஏண்டா,  நீயுமா இத ஆடறே? மூணு வருஷம் முன்னாடி தான், நடுவீடு சீனு மாமாவுக்கு நெத்தியிலே அடிபட்டு, தையல் போட்டுது; அவர் கண்ணு தப்பிச்சது பகவான் புண்ணியம். இந்தத் தறுதலைப்  பயலுக தான் என்ன சொன்னாலும் கேட்காம ஆடுவானுக. அவனுகளுக்கு சொன்னா மண்டையிலே ஏறாது; ஆனால் நீயுமா?”

இப்படிச் சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்த படி ரங்கு சார் போய்விட்டார்.

நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். போன வருடம் நான் ஆரம்பப் பள்ளியில் ரங்கு சாரிடம் தான் ஐந்தாம் வகுப்பு படித்தேன்.  நான், அவரது  வகுப்பில் படிக்கையில் அவருக்குச் செல்லப் பிள்ளையாக இருந்தேன்.  நான் நல்ல புத்திசாலி, ரொம்ப நல்ல பையன் என்றெல்லாம் அவர் அபிப்பிராயம் வைத்திருந்தார் எனபது எனக்குத் தெரியும்.  இப்போது அவரது கணிப்பில் நான் கீழே விழுவதா?

திரும்பி நண்பர்கள் ஆடிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்தேன். “நான் ஆட்டத்துக்கு வர்லடா” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். பயல்கள் கொக்கரித்தார்கள்; “டேய், பார்ரா பயந்தாங்குள்ளி, இவன் எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியாருக்கு இன்னமும் பயப்படுறான்” என்றெல்லாம் கேலி பேசினார்கள்.

ஆனால் அன்று அன்று ஆட்டத்தை விட்டவன் தான். அப்புறம் நான் கிட்டியைத் தொட்டதில்லை. 

ஆனாலும் எனக்கு அந்த சின்ன வயதில் தான் ஏதோ ஒரு மாபெரும் தியாகத்தை அனாவசியமாகச் செய்ததுவிட்டது போல சோகமாய் இருந்தது! வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தூரே மற்ற பயல்கள் ஆனந்தமாகக் கூச்சலிட்ட படியே கிட்டிப்புள் ஆடுவதை ஏக்கத்துடன் பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன்.

அடுத்த சில மாதங்களில்  அவ்வப்போது நான் பிரமாதமாய் கிட்டிப்புள் ஆடுவது போல ராத்தூக்கத்தில் கனவுகளெல்லாம்  வந்துகொண்டிருந்தது!

ஆனாலும் நாளாக ஆக,  மன முதிச்சி வந்துவிட்டது. ஏக்கமும் போய்விட்டது. நான் எடுத்தது சரியான தீர்மானம் தான் என்று  கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது.

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here