விடுமுறைக்குப் போன இரு வித்தியாசமான உறவினர் வீடுகள்

0
165

21.   விடுமுறையில் போன உறவினர் வீடுகள் — இரு வித்தியாசமான அனுபவங்கள்

வருடம் 1966

எனக்கு அப்போது ஐந்தாவது வகுப்பு முடிந்த கோடை விடுமுறை. அப்போது என் அண்ணனுக்குப் பள்ளி இறுதி முடித்த கோடை விடுமுறை. 

பொதுவாக விடுமுறைக்கு நாங்கள் அரிதாகவே தாத்தா பாட்டி வீட்டிற்க்கோ அல்லது வேறு நெருக்கமான பழக்கமுள்ள உறவினர்கள் வீடுகளுக்கோ சென்று சில நாட்கள் தங்குவது உண்டு;  என்றாலும், அந்த வருடம் எப்படியோ நானும் என் அண்ணனும் விடுமுறைக்கு இது வரை நாங்கள் சென்றே இராத இரு வேறு உறவினர் இல்லங்களுக்குக் சென்று சில நாட்கள் தங்கினோம்.

அது எப்படி, யாருடைய அழைப்பின் பேரில் நடந்தது என்றெல்லாம் இப்போது நினைவில்லை.

அதில் எங்களுக்குக் கிடைத்தது இரு வேறு முற்றிலும் வித்தியாசமான அனுபவங்கள்! அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? 

முதலில் நாங்கள் போனது என் தாய் வழி உறவினர் வீட்டுக்கு. அவர் மிகப் பெரிய சம்சாரி! அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள். (அதாவது உயிருடன் இருந்த பிள்ளைகள், பெண்கள் மட்டும்; பிறந்து செத்துப் போன குழந்தைகள்  இன்னும் 2, 3 அவர்களுக்கு உண்டாம்!

அடுத்து நாங்கள் போனது, பிள்ளை பாக்கியமே இல்லாத 60 வயதுக்கும் மேல் ஆகிய என் தந்தை வழி உறவினர் வீட்டுக்கு! 

முதலில் சென்ற சம்சாரிக் குடும்பம் ஒரு சிறு நகரத்தில் வாழ்ந்தது.  வாடகை வீடு. வீடு ஓரளவு பெரியதுதான். வாசலை ஒட்டிய இரு அறைகள், ஒரு நீண்ட கூடம், சமையல் அறை, பின் கட்டு, கிணற்றடி என்று நீண்டு இருந்த ஓர் ஓட்டு வீடு அது.

வீட்டில் அத்தம்பதியரின் மூத்த பையனுக்கு சுமார் 30 வயது இருக்கும். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  கடைக்குட்டிக்கோ சுமார் 4 வயது இருக்கும்.  மூத்த மகன் தொடங்கி அடுத்தடுத்து இரண்டரை முதல் 3 வயது வரை வித்தியாசத்தில் மற்ற பையன்கள் பெண்கள்!  மூத்த  இரு பெண்களுக்குத் திருமணம் ஆகியிருந்தது. அவர்களுள் மூத்த பெண்ணுக்கு 7  வயதில் ஒரு பெண்ணும் 4 வயதில் இன்னொரு பெண் குழந்தையும்  இருந்தது. இப்போது மூன்றாவது  பிரசவத்துக்காக அவள் தாய் வீடு வந்து இருந்தாள். 

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது, அந்தக் குடும்பத்தில் கடைசி இரு பிள்ளைகளின் சம வயதிலேயே இரு பேத்திகளும் இருந்தன என்பதை! இந்த விவஸ்தை கெட்ட நிலையைப் பற்றிப் பிற்காலத்தில், நாங்கள் பெரியவர்களாய் வளர்ந்த பிறகு,  அந்த வீட்டுப் பையன் ஒருவன் என்னிடம் தமாஷாகச் சொல்லியது இது: “எங்க அப்பாவுக்கு தன் மாப்பிள்ளைகளோடு ஒரு போட்டா போட்டி! ‘டேய் அடுத்தபடி பொண்டாட்டியை கர்ப்பமாக்கப் போறது நீயா நானா, பாத்துடலாம்டா; என் வயசு என்ன, அனுபவம் என்ன? எங்கிட்டையா மோதிப்பாக்குறே, ஹூம்!!” என்பதாக அவனது சொந்தக் கற்பனையில் அவன் அப்பா பேசுவதாக இவன் வசனம் பேசிச் சிரிக்க வைப்பான்! 

நாங்கள்  லீவுக்குப் போயிருந்த சமயத்தில் அந்த வீட்டு இரண்டாவது பெண்ணுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகியிருந்தது. லீவுக்கு அந்தப் பெண்ணும் அவள் கணவரும் வேறு அங்கே வந்திருந்தார்கள்.

ஆக, நானும் என் அண்ணனும் அங்கே விருந்தாளிகளாய் போயிருந்த சமயத்தில், ஏற்கனவே 17 பேர்கள் அந்த வீட்டில் இருந்தனர்! கிட்டத்தட்ட ஓர் சத்திரம் போல இருந்தது அந்த வீட்டு சூழல்!

நானும் என் அண்ணனும் அவர்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது கலகலவென்ற வரவேற்பு கிடைத்தது! சிரித்த முகத்துடன் வரவேற்று ஆளாளுக்கு வந்து நலம் விசாரித்தார்கள்,  சமீபத்தில் தான் என் மூத்த அக்காளின் திருமணத்தின் போது இந்தக் குடும்பத்தார் 4,5 பேர்களை சந்தித்திருந்ததால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல நல்லகாலமாக இல்லை. மற்றவர்கள் யார் யார், அவர்கள் வீட்டுப் பிள்ளைகளா அல்லது பேத்திகளா என்பதெல்லாம் பிடிபட நேரம் எடுத்தது!

எனக்கும் என் அண்ணனுக்கும் அவரவர் வயதில் பேசிப்பழக அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இருந்தார்கள்.

பெரிய வருமானம் இல்லாத நடுத்தரக் குடும்பம் தான் அது. ஆனால் பட்டினிப் பிரச்சனை இல்லை. நாங்கள்  போன உடன் இருந்த கலகலப்பு  மாறி பின்னர் அந்த சந்தைக் கூட்டத்தில் அவரவர்கள் அவரவர் பாட்டைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். யாரேனும் இருவர் மூவர் சேர்ந்து ஏதேதோ பேச்சு, அரட்டை, கூப்பாடு, சண்டை என்று இருக்கும். சள சளவென்று இரைந்த பேச்சுக்குரல்கள் சதா கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு புறம் ரேடியோ கத்திக்கொண்டிருக்கும்.

கூடவே  குழந்தைகளின் கத்தல்கள், அழுகைகள், கூப்பாடுகள் சதா கேட்கும். சிறுவர் சிறுமிகள் அவரவர் போக்கில் ஏதோ கூடி விளையாடிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பார்கள்.  அந்த வீட்டுப் பெரியவர்கள் யாரும் சிறுவர்களை அனேகமாகக் கண்டு கொள்ளவே இல்லை! 

வந்து சேர்ந்த அடுத்த நாள் குளிப்பதற்காகப் பின் கட்டுக்குப் போனேன். பாத்ரூமுக்குள் வாளி இருக்கிறதா என்று எட்டிப் பார்க்கையில், அங்கே அந்த வீட்டு 6 வயதுப் பையனும், 4 வயதுப் பேத்தியும் உட்கார்ந்து ஏதோ விளையாடிக்கொண்டிருந்தனர். பையன் கையில் ஒரு கோல்கேட் பேஸ்ட்டின் மூடி. இருவர் கையிலும் இரு சிறு ஈர்க்குச்சித் துண்டுகள்.

“என்ன பண்றீங்க இங்கே?” என்று நான் கேட்டேன்.

“ஐஸ் கிரீம் விளையாட்டு” என்று அலட்சியமாய்ச் சொன்ன பையன், அவன் காரியத்தில் மும்முரமாய் இருந்தான். ஈர்க்குச்சித் துண்டை பேஸ்ட்டு மூடிக்குள் செறுகி,  நோண்டி,  உள்ளே ஒளிந்திருந்த பேஸ்ட்டின் ஒரு துளியை வெள்ளையாய் வெளியே எடுத்தான். அந்தப் பெண்ணிடம் “ஆ காட்டு?” என்று சொல்லி அந்தக் குச்சியில் இருந்த பேஸ்ட்டை அவள் வாயில் வைக்க, அந்தக் குட்டிப் பெண் ஆவலாய் அந்த “ஐஸ் கிரீமை” சப்பிச் சுவைத்தது. “இப்போ எனக்கு” என்றவாறே பையன் அந்தப் பெண்ணிடம் மூடியைக் கொடுக்க, அது தன் குச்சியால் நோண்டி சிறிது பேஸ்ட்டை எடுத்து இந்தப் பையனுக்கு ஊட்டிவிட்டது!

“டேய்! பல் தேய்க்கிற பேஸ்ட்டையெல்லாம் முழுங்கக் கூடாதுடா” என்று நான் சொன்னதையெல்லாம் அவர்கள் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. கற்பனை ஐஸ்கிரீமை சுவைப்பதில் மும்முரமாய் இருந்தார்கள்!

வீட்டில் வேளா வேளைக்கு கூடத்தில் சோற்றுக் கடை அரங்கேறும். வரிசையாய்த் தட்டுகள் போட்டு ஆண்களும் குழந்தைகளும் சாப்பிட உட்காருவார்கள். வீட்டுப் பெண்கள் பரிமாறுவார்கள்.  ஏதாவது குழந்தை சாப்பிட வராமல் இருந்தால் கண்டு பிடித்து சாப்பாடு போடுவார்களா என்கிற ஐயம் எனக்கு இருந்ததால் நான் டாணென்று பந்தியில் ஆஜராகிவிடுவேன்!

வெளியூருக்கு நீண்ட நாள் போவதால் எனக்கு ஒரு புதுச் செறுப்பு வீட்டில் வாங்கித் தந்திருந்தார்கள். அந்தத் தோல் செறுப்பு என் ஒரு காலில் நன்றாகக் கடித்தது. அங்கே தோல் வழண்டு போய், அழுக்கு சேர்ந்து புண்ணாகிப் பின் சீழ் கோர்த்துக்கொண்டு விட்டது. என் காலில் ஒரே வலி. இந்தக் கூட்டத்தில் யாரிடம் போய் என்ன சொல்வது?

இரவு சீழ் கோத்த புண்ணுடனும் வலியுடனும் படுத்ததில் எனக்கு சுரம் வந்து விட்டது. காலையில் தலையே  தூக்க முடியாமல் எனக்கு சுரம் அடித்தது. மணி ஏழறை ஆகியும் நான் பாயிலிருந்து எழவில்லை. நான் படுத்திருந்த அறையில் மூன்று நான்கு குழந்தைகள் தாறுமாறாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தன. என் அண்ணன் எங்கு படுத்துத் தூங்கினான் என்பது எனக்குத் தெரியாது.

நான் விழித்துக்கொண்டு போர்த்திய படியே படுத்திருந்தேன். யார் யாரோ பெரிய பையன்கள், பெண்களெல்லாம் அந்த அறைக்குள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். எங்கள் வீட்டில் காலையில் ஆறேகாலுக்குள் எழுந்திராவிட்டால் அம்மாவோ, அக்காக்களோ அண்ண்ணனோ வந்து திட்டி, அதட்டி எழுப்புவார்கள். இங்கே என்னடாவென்றால் யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. இந்த வீட்டில் குழந்தைகள் மெதுவே எழுந்தால் பிரச்சனை இல்லை போலிருக்கிறது.

சுமார் எட்டு மணிக்கு என் அண்ணன் என்னைக் காணோமே என்று தேடிக்கொண்டு வந்தான். நான் படுத்திருப்பதைப் பார்த்து அவனுக்குக் கோவம் வந்தது. “என்னடா? எருமை மாடுமாதிரி இன்னும் படுத்திருக்கே?  எழுந்திரு, எழுந்திரு” என்று அதட்டினான்.

“எனக்கு, எனக்கு… ஜொரமாயிருக்கு; காலிலே புண்ணு வலிக்குது!” என்று அழுகையைக் கூட்டினேன். அவன் தொட்டுப் பார்த்துவிட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு வீட்டுக்குள் பெரியவர்களிடம் சொல்ல ஓடினான்.

வீட்டின் இரண்டாவது மூத்த பிள்ளை என்னை சைக்கிளில் ஏற்றி மிதித்துக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு டாக்டரின் கிளினிக்குக்குக் கூட்டிப் போனான். ஏதோ மாத்திரை கொடுத்தார். நான் கத்தக் கத்த கால் புண்ணை அமுக்கிச் சீழை எடுத்துவிட்டு ஒரு நர்ஸ் மருந்து போட்டுப் பிளாஸ்திரி போட்டு விட்டாள்.  நான் லீவுக்குப் போனதின் பலனாய் அந்தப் பெரிய சம்சாரக் குடும்பத்திற்கு டாக்டருக்கு செலவழிக்க வேண்டிய ஒரு தெண்டச் செலவு இப்படி வந்து விடிந்தது.

அந்த வீட்டுப் பெண்கள் சதா சமையலறையில் மும்முறமாய் இருந்தார்கள். இத்தனை பேருக்கு சமைத்துப் போடுவது என்றால் சும்மாவா? வேலை பெண்டு நிமிறும். என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் நான் சமையற்கட்டுக்குள் போவேன். அங்கே அந்த வீட்டுப் பெண்கள் சளசளவென்று ஏதோ பேசியவாறும், வாக்குவாதம் செய்தவாறும் இருப்பார்கள். இல்லை யாராவது கண்ணைக் கசக்கிக்கொண்டு யார் பற்றியாவது குற்றம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அல்லது புகுந்த வீட்டுக் கதைகள்.

அந்த வீட்டில் இருந்த ஓர் அக்காவுக்கு என்னைக் கண்டால் ரொம்பப் பிரியம். அது ஏன் எப்படி என்று எனக்குக் காரணம் தெரியவில்லை. அடுப்புக்குப் பக்கத்தில் என்னையும் உட்கார்த்தி வைத்துக்கொண்டு அன்பாகப் பேச்சுக் கொடுப்பார்.  நாங்கள் கிளம்பும் சமயம் வந்ததும் அந்த ஒரு அக்கா தான், “நீ ஏன் அதுக்குள்ளே போகணும்? இங்கேயே ஜாலியா எல்லார் கூடவும் ஒரு மாசம் இருக்கலாமே? நான் உன்னைப் போக விடமாட்டேன்; உங்க அம்மாவுக்கு நான் லெட்டர் போட்டுடறேன்” என்றெல்லாம் சொன்னார். எனக்கு ஒரே ஆச்சரியம். இப்படிக் கூடப் பிரியமாய் அக்காமார்கள் இருப்பார்களா என்ன?

ஆனால் எனக்கோ எப்போதடா இந்த சந்தைக் கூட்டத்திலிருந்து தப்பித்துப் போகலாம் என்று தான் இருந்தது!

 எல்லாரிடமும் விடை பெற்றுக்கொண்டு நானும் என் அண்ணனும் பஸ் ஸ்டாண்டுக்குப் போனோம். அங்கே இங்கே விசாரித்து, சரியான  பஸ் பிடித்து நாங்கள் போகவேண்டிய அடுத்த ஊருக்குப் பிரயாணப்பட்டோம். அடுத்த முக்கால் மணியில் நாங்கள் போய்ச் சேரவேண்டிய கிராமம் வந்து விட்டது. பஸ் நிறுத்தத்திலிருந்து ஊருக்கு 2, 3 கிலோ மீட்டர் லொங்கு லொங்கு என்று நடக்க வேண்டியிருந்தது.

வழியும் விலாசமும்  விசாரித்துக்கொண்டு அந்த உறவுக்காரரின் வீட்டு வாசலில் நாங்கள் போய்ச்சேர்ந்த போது அவர் வாசல் குறட்டில் ஈசி சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார், எங்களைப் பார்த்ததும் முகத்தில் எந்த ஒரு பிரசன்னமும் இல்லை.  “வா” என்றார், “ஏய், யாரு வந்திருக்கா பாரு” என்று உள்ளே குரல் கொடுத்தார், அவரது மனைவி எட்டிப் பார்த்தார். அவர் முகத்திலும்  சிரிப்பு ஏதும் இல்லை, “உள்ளே வா” என்றார்! 

எங்கள் இருவருக்கும் என்னவோ போல் இருந்தது. அப்போ வேண்டாத விருந்தாளிகள் தானா நாங்கள்? அடக் கஷ்டகாலமே!

போன அடுத்த நொடியிலிருந்து ஒரு மகா ‘போர்டம்’ எங்களைப் பிடித்துக்கொண்டது போல இருந்தது.  வீட்டில் கிழங்கள் இவர்கள் இருவர் மட்டுமே. வீட்டினுள் மயான அமைதி! 

வீட்டுத் தலைவர்  பள்ளி ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வூதியம் வந்து கொண்டிருந்தது. பிள்ளை குட்டி கிடையாது என்று முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா? ; இருவரும் உலக மகா சிக்கனப் பேர்வழிகள் — பயங்கரப் பொருத்தமான ஜோடி!

சத்தம் சந்தடியற்ற கிராமம். பொழுது போக்குக்கு என்று எதுவுமே கிடையாது. வீட்டில் ரேடியோப் பெட்டியும் கூடக் கிடையாது.

காலையில் பெண்மணி எங்களுக்கு பழைய சோறைப் பிசைந்து போடுவார். தொட்டுக்கொள்ள ஓர் மாவடு. இரண்டும் ஓரு வித ஊசல் நாற்றம் அடிக்கும்! வாய் திறவாமல் சாப்பிடுவோம்.

பகலில் புதிய சோறு. குழம்பு, ரசம், மோர். அது, காரம், உப்பு, மணம், ருசி ஏதும் இல்லாத ஓர் உணவு! மோரில் நிரந்தரமாய் ஒரு நாற்றம்!

மாலையில் ‘கொரிக்க’ என்ன தருவார் தெரியுமா? வாழைப்பழ வற்றல்! முன்னே பின்னே இப்படியொன்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அவர்கள் வீட்டுக் கொல்லையில் தாராளமாய் வாழை விளையும். அது ஏராளமாய்ப் பழுக்கும் சீசனில் மற்றவரோடு பங்கு வைக்கும் மனம் இல்லாததால், தாம் தின்றது போக, எஞ்சியிருக்கும் வாழைப் பழங்களை அவர்கள் பட்டப் பகலில், மொட்டை மாடி வெய்யிலில் காய வைத்து நீரை வற்ற வைத்து வற்றலாக்கி விடுவார்களாம்! பின்னர் வீட்டில் பானையில் சேகரித்து வைத்துக் கொள்வார்களாம்! கரும் பழுப்பு நிறத்தில் அசட்டுத் தித்திப்பு, லேசாய் ஒரு புளிப்பு, சருகு நாற்றம் இவற்றுடன் பல்லில் ஜவ்வு போல் சிக்கும் அந்தக் காய்ந்த பழத்தை “நாங்கள் கண்டு பிடிச்சது இது!” என்று சொல்லிப் பெருமையோடு தின்னக் கொடுப்பார்கள்!

எண்ணையில் பொரித்து எந்தப் தின்பண்டமும் செய்ய மாட்டார்கள். வீட்டில் ஒரு பழைய இரும்பில் செய்த Baking Oven ஒன்று வைத்திருந்தார்கள். அதில் கரியைப் போட்டுப் பற்ற வைத்து, பெண்மணி கோதுமை மாவையும் வெல்லச் சக்கரையும் சேர்த்துப் பிசைந்து தட்டையாய் பிஸ்கெட் போலத் தட்டி, அந்த ஓவனில் (எண்ணைய் எதும் இல்லாமல்) சுட்டுத் தயாரித்து வைப்பார். அதை நொறுக்குத் தீனியாகத் தருவார்!

விடுமுறைக்கு வந்த பிள்ளைகளை அபூர்வமாய்க் கூட ஒரு சினிமா, தெருக்கூத்து என்று எங்கும் கூட்டிச் செல்லும் வழக்கமெல்லாம் கிடையவே கிடையாது. மாலையில் அவர் அருகிலுள்ள டவுனுக்கு நடந்து போகையில் எங்களையும் கூட்டிச் செல்வார். அங்கேயுள்ள பெரிய சிவன் கோவிலுக்கும், கடைத் தெருவுக்கும் (அவருக்கு சில்லறை மளிகை சாமான் ஏதும் வாங்கப்) போவோம். தப்பித் தவறி ஒரு புளிப்பு மிட்டாய், கடலை மிட்டாய், வறுத்த பட்டாணி? ஊகும்! பேசப்படாது!

இரவுச் சாப்பாடு ஆனதும் முன்னிரவில் தூங்கப் போவதற்கு முன் வாசலில் வெறுதே உட்கார்ந்திருப்போம். வீட்டினுள்ளே கோடைப் புழுக்கம் தாளாது என்பதால் வாசலில்.   மெல்லிதாய் எப்போதாவது காற்றடிக்கும்;  மரங்கள் சல சலக்கும். 

எங்கள் சூம்பிய முகத்தைப் பார்த்துப் பாவப்பட்டு, பெண்மணி கணவரிடம், ” சின்னப் பசங்க, பொழுதே போகாமல் உட்கார்ந்திருக்குகளே, ஏதேனும் கதை சொல்லுங்கோளேன்” என்று சிபாரிசு செய்தார்.

“என்னத்த சொல்றது” என்றார் கிழவர் உற்சாகமில்லாமல். பின் “சரி, கேளுங்கோ” என்றவாறே இந்திரனின் ஐராவதம் யானை இரவில் கரும்புத் தோட்டத்துக்கு வந்த கதை ஒன்று சொன்னார்.  அவர் உற்சாகமே இல்லாது சொன்னாலும் கதை நன்றாகத் தான் இருந்தது. எப்படியோ ஓர் அரை மணி நேரம் பொழுதைப் பிடித்துத் தள்ள முடிந்ததே!

வந்த மறு நாள் கொல்லைப்புறம் பல் தேய்க்கையில் அண்ணனிடம் ” நாம் இன்னிக்கே ஊருக்குப் போயிடலாமா?” என்றேன்.  அண்ணன், “அப்பா சொல்லியபடி, இங்கே இன்னும் நாலு நாள் பல்லைக் கடிச்சிண்டு தங்கித்தான் ஆகணும்; வாயை மூடிண்டு இரு” என்று எரிந்து விழுந்தான்!

ஒரு நாள். காலை பழைய சோறு தின்றபின் வாசலில் வெட்டியாய்த் தெருவை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம். “ஊர் கோடியிலே, வயலிலே கரும்பு அருவடை செய்யறான்; கரும்பு சாறு பிழிந்து வெல்லம் காய்ச்சுவானுகள்; அதெல்லாம் பார்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் பெரியவர். “பார்த்ததில்லையே?” என்றோம்.

கூட்டிக் கொண்டு போனார்.

பெரிய பெரிய உருளைகளுக்கு இடையே கருப்பங்கழிகளை வைத்து நசுக்கி சாறு எடுப்பதைப் பார்த்தது நான் அது தான் முதல் முறை. சற்றுத் தள்ளிப் பிரம்மாண்டமான ஓர் பெரிய அண்டாவில் சாறைக் காய்ச்சி வெல்லமாக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

பெரியவர், சாறு பிழிபவர்களிடம் ஏதோ ஜாடை மாடையாய் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் தம் வேலையில் முனைப்பாய் இருந்தனர். “ஊர்லேந்து சின்னப் பையங்க லீவுக்கு வந்திருக்காங்கடா! கொஞ்சம் கவனீங்கடா! ஒண்ணும் கொறஞ்சுபோயிட மாட்டீங்க!” என்ற ரீதியில் அவர்களிடம் அவர் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார்.

வெகு நேரத்துக்குப் பிறகு, ஒருவன் வேண்டா வெறுப்பாய் ஓர் குவளையைக் கொண்டு வந்து எங்கள் மூவருக்கும் ஆளுக்கு ஒரு குவளை கரும்புச் சாறு ஓசியில் கொடுத்தான்! அவன் முகத்தில் தென்பட்ட எரிச்சலும் அலட்சியமும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது!

புளியோதரை!

ஒரு நாள் மாலையில் உள்ளூர் பெருமாள் கோவிலில் ஏதோ உற்சவம். பெரியவர் எங்களைக் கிளப்பிக் கூட்டிக்கொண்டு போனார். கோவிலில் கோஷ்டி, ஆராதனை எல்லாம் முடிந்ததும் எல்லோரையும் உட்கார்த்தி வைத்துப் புளியோதரைப் பிரசாதம் வழங்கும் சமயம். பெரியவர் எங்கள் இருவரையும் அவருக்கு அடுத்து உட்கார்த்தி வைத்துக் கொண்டார்.

பிரசாதம் வழங்குபவர், ஆளுக்கு ஒரு தொன்னை வீதம் பிரசாதம் கொடுத்துக்கொண்டே போகையில், பெரியவர் எங்கள் இருவரையும் கை காட்டி, “தேசாந்திரி, தேசாந்திரி” என்று சொல்லியவாரே மீண்டும் கை நீட்டினார்! பிரசாதம் தருபவர், வெறுப்பு எரிச்சலும் முகத்தில் தெரிய, பெரியவரிடம் இன்னும் இரண்டு தொன்னை கூடுதல் பிரசாதத்தைத் தந்துவிட்டுப் போனார்! “ஆச்சு! ராத்திரி சாப்பாட்டுக்காச்சு!” என்று திருப்தியுடன் எழுந்தார் பெரியவர்! என் அண்ணன் கூனிக் குறுகிப் போனான்!

அது என்ன தேசாந்திரி?

பொதுவாக வைணவக் கோயில்களில் தேசாந்திரிக் கட்டளை என்கிற ஒரு மரபு இருந்தது. ஊர் ஊராகத் திரிந்து கோவில் குளம் தரிசிக்க வரும் சாதுக்களுக்கும், நாடோடிகளுக்கும், பக்தர்களுக்கும் இலவசமாய் உணவு கிடைக்க வசதி செய்யும் வகையில் யாரேனும் தனவான் கோயிலுக்கு ஒரு சொத்து அந்தக் காலத்தில் எழுதி வைத்திருப்பார். அதன் படி, பிரசாதத்துக்கென உணவு சமைக்கையில் சற்று கூடுதலாய் சமைக்கவேண்டும் என்பது முறை — தேசாந்திரிகளுக்கு அன்னமிடுவதற்காக. (அப்படி யாரும் வரவில்லை என்றால் அந்த அளவு அன்னத்தை அர்ச்சகரோ, இல்லை கோயில் சிப்பந்திகள் யாரேனுமோ தங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்).

ஆக, எங்களையும் (கிட்டத் தட்டப் பிச்சைக் காரர்கள் போல) ஆக்கிவிட்டதற்காகத் தான் என் அண்ணனுக்கு முகத்தில் அத்தனை கடுப்பு!

ஒரு வழியாய் நாலு நாட்களைப் பிடித்துத் தள்ளி விட்டுக் கிளம்பினோம். எங்களுக்கு எப்படா கிளம்புவோம் என்று இருந்தால் அவர்களுக்கோ எப்படா இந்தப் பயல்கள் இடத்தைக் காலி செய்வானுகள் என்று இருந்திருக்குமாயிருக்கும்!

ஊருக்கு வந்து சேர்ந்து அம்மா கையால் நல்ல மோர் சாதமும், கருவேப்பிலைத் துவையலும் சாப்பிடுகையில் “இது தாண்டா சொர்க்கம்” என்று இருந்தது!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here