ஆ! சினிமா சினிமா!

0
282

கதையில் வராத பக்கங்கள் – 20

20.   ஆ! சினிமா, சினிமா!

அவன் பெயர் செந்தில். (பெயரை மாற்றியிருக்கிறேன்). அவன் என் அப்பாவிடம் 10 ஆம் வகுப்புக்கு டியூஷன் படிக்க வருகையில் அவன் வயது சுமார் 18. 19 இருக்கலாம்! (கீழ் வகுப்புகளில் பலமாக ஓரிரு வருடங்கள் தங்கித் தங்கிப் படித்து ‘அடிப்படையை பலமாக’ ஆக்கிக்கொண்டு வந்தவனாயிருக்கும்!)

ஆள் பார்க்கக் கருப்பாய், ஒல்லியாய் இருப்பான். மெல்லிய மீசை வைத்திருப்பான்; மற்றபடி ஒழுங்காய் ‘ஷேவ்’ செய்து, நல்ல சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து தினம் சைக்கிளில் 2 கி.மீயில் இருந்த டவுனிலிருந்து எங்கள் கிராமத்துக்கு அப்பாவிடம் டியூஷன் படிக்க வருவான். பேசினால் மூச்சில் பூண்டு வாடை அடிக்கும். குட்டிகூராவோ ஏதோ ஒரு பவுடர் வாசம் படு தூக்கலாய் கூடவே அடிக்கும்!

அப்போது நான் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். (ஆண்டு 1966 இருக்கலாம்). பார்க்கத் துறுதுறுவென்று சுட்டிப்பையனாய் (!?) இருப்பேன். டியூஷனுக்கு வரும் பையன்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பது என் வேலை. பையன்களில் குறிப்பாய் செந்தில் என்னிடம் ஏதேனும் பேச்சுக் கொடுப்பான்; விளையாட்டாய் சீண்டுவான். நானும் வெடுக் வெடுக்கென்று பேசுவேன்; செந்திலுக்கு ஏனோ என் மீது ஓர் இனம் புரியா ஈர்ப்பு!

செந்தில் அவ்வப்போது என்னை பேட்டி காண்பான்.டியூஷனுக்கு வந்தவர்கள் வீட்டு முற்றத்தில் அமர்ந்து படிக்கையில் சமையற்கட்டிலிருந்து கும்மென்று சாம்பார் மணமோ, ரசம் கொதிக்கும் மணமோ முற்றம் வரை வரும். மூச்சை இழுத்து அதனை ரசித்துவிட்டு, செந்தில் “ஏன் சீவீ, எல்லா வாசனையும் இப்பிடியே வெளிலே போயிருச்சின்னா, நீங்க சாப்பிடும்போது அங்கே ஒண்ணுமே வாசம் இருக்காதில்லே?” என்பான்!

அப்பா பாடம் கொஞ்சம் நடத்தி விளக்கிவிட்டு, அவர் குளிக்கப் போவதற்கு முன் போடச்சொல்லிக் கொடுத்துவிட்ட கணக்குகளை முனைப்பாய்ப் போடாமல், செந்தில் கூட இருப்பவர்களிடம் சினிமாக் கதை பேசிக்கொண்டிருப்பான். நான் தண்ணீர் கொடுத்துவிட்டு பெரிய மனிதன் போல், “கணக்கைப் போடுங்க, வெட்டியா சினிமாக் கதை  பேசாதீங்க!” என்பேன்!

“ஏன் சீவீ? நீ சினிமா பாக்கமாட்டியா?”

“பாப்பேனே? எப்பவாவது வருஷத்துக்கு ஒரு தடவை, மிஞ்சிப் போனா ரெண்டு தடவை!”

“அடப்பாவி! அவ்ளோ தானா? கடைசியா என்ன படம் பார்த்தே?”

“எப்போதும் சாமிப் படம் தான் பாப்போம்! கடைசியா பாத்தது திருவிளையாடல்!”

செந்திலின் முகத்தில் சோகம் அப்பியது. ஐயோ பாவம் இந்தப் பிள்ளை என்கிற கணக்கில்!

“எம்ஜிஆர் படம் பாத்திருக்கியா? ஜெமினி படம்?” என்றெல்லாம் பேட்டியெடுத்து அவன் ‘நான் வாழ்வின் அர்த்தத்தையே இழந்துவிட்ட​’ சோகத்தை அதிகம் வெளிப்படுத்துவான்!

செந்திலுக்கு, அப்பாவிடம் மிகுந்த மரியாதை உண்டு. காரணம், அவரால் தான் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாவது கணக்கு, ஆங்கிலம், விஞ்ஞான பாடங்களில் அடிப்படையைப் புரிந்து கொண்டு பத்தாவது தேற முடிந்தது என்கிற நன்றி! எப்படியாவது கரணம் போட்டாவது ஒரு ‘SSLC பாஸ்’ என்கிற மரியாதையுடன் வேலை தேடிப் பட்டணம் போய்விட வேண்டும் என்பது அவன் முனைப்பு! 2,3 வருடங்களாக அவன் தொடர்ந்து டியூஷனுக்கு வந்ததாலும், அவனிடம் அடிப்படையாய் ஏதோ ஒரு வெள்ளந்தித் தனம் இருந்ததாலும் அப்பாவும் அவனிடம் தன் வாத்தியார்க் கண்டிப்பை தளர்த்தி, சற்று கூடுதல் இடம் கொடுப்பார். அவரிடமே அவன் சமயத்தில் உரிமையோடு பேசுவான்!

அப்பா, டியூஷன் பையன்களிடம் கராறாய் பணம் வசூலித்ததாய் சரித்திரமே கிடையாது. அவ்வகையில், செந்தில் எத்தனை ஒழுங்காய் டியூஷன் பணம் கொடுத்தான் என்பது எனக்குத் தெரியாது!

பதினோறாவது அரைப் பரிட்சை முடிந்து மார்க்குகள் வந்தபோது, செந்திலுக்கு ஒரே குஷி! பாஸ் மார்க்குக்கு மேலே 15-25 மார்க்குகள் கூடவே வாங்கியிருந்தான்!

“சார்! நான் இதைக் கொண்டாட, சீவீயை சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகப் போகிறேன்; சார் தடுக்கக் கூடாது!” என்றான். என்ன அதிசயமோ, அப்பா சிரித்துக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டார்! அதுதான் சம்மதத்துக்கு அறிகுறி என்று எடுத்துக்கொண்டு, செந்தில் அந்த ஞாயிறு டியூஷன் முடிந்ததும் என்னை அவன் சைக்கிளில் உட்கார்த்தி வைத்துக்கோண்டு டவுனில் இருந்த அவன் “வீட்டுக்கு” கூட்டிப் போனான்.

போனதும் தான் தெரிந்தது அது அவன் வீடு அல்ல; ஒரு வீட்டின் பின் கட்டில் இருந்த ஓர் ஒற்றை வாடகை அறை என்று! அந்த வீடு, என் அப்பா வேலை பார்த்த மேல் நிலைப்பள்ளிக்கு அருகிலேயே தான் இருந்தது. பள்ளிக்கு அடுத்துத் தான் சினிமா தியேட்டரும்!

செந்திலின் ஊர் 6 கி,மீ. தள்ளியிருந்த வேறொரு கிராமமாம். அங்கே அருகே உயர்நிலைப் பள்ளி இல்லாததால், பெற்றோர் இங்கே பிள்ளைக்கு இப்படி ஒரு வாடகை அறை பார்த்து தங்க வைத்து, சாப்பாட்டுச் செலவுக்குக் கைக்காசும் கொடுக்கிறார்களாம். பையன் அதை மிச்சம் பிடித்து வாரத்துக்குக் குறைந்தது 1,2 சினிமா! தவிர எம்.ஜி.ஆர் புதுப்படம் வரும்போது பஸ் பிடித்தோ சைக்கிள் மிதித்தோ  மாயவரத்துக்குப் போய்ப்  போய்ப் பார்ப்பது தனி!

“ரத்ன மஞ்சரி”

எல்லாம் செந்தில் என்னிடம் சொன்னது தான்.

பின்பக்கம் போய்க் கிணற்றடியில் முகம் கழுவி, துடைத்து, குட்டிக்கூராவை அப்பிக்கொண்டு, வேட்டி சட்டையை மாற்றிக்கொண்டு கிளம்பினான் செந்தில். என்னை மீண்டும் சைக்கிளில் உட்கார்த்தி வைத்து உள்ளூர் கொட்டகையில் மேட்னி அழைத்துக்கொண்டு போய், அவன் செலவில் தரை டிக்கெட் எடுத்து, பார்த்த முதல் படம் “ரத்ன மஞ்சரி!” எனும் விட்டலாச்சார்யா (தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் ஆன) படம்! பேய், பூதங்கள், ஆகாயத்தில் நெருப்பைக் கக்கிக்கொண்டே போய் அடித்து விழும் அம்புப் போர்கள்! செந்திலின் உபயமில்லாமல் என் வாழ்ணாளில் அந்த வயதில் அப்படி ஒரு படம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை!

“படம் எப்பிடி?” – செந்தில்.

“ஆகா பிரமாதம்!”

“அடுத்த லீவு வரட்டும்; இன்னொரு படத்துக்குக் கூட்டிப் போறேன்!” என்றான். ஆகா, நீயல்லவா என் கண்கண்ட தெய்வம்!

சாயந்திரம் படம் முடிந்ததும் சைக்கிளில் வீட்டில் கொண்டு விட்டுப் போனான். அடுத்த ஓரிரு நாட்கள், என் அண்ணா, அக்காமார்களிடம் சினிமாக் கதையைச் சொல்லிச் சொல்லி அவர்களின் பொறாமையைக் கிளப்பி விட்டேன்! “ரத்ன மஞ்சரியாம்! அப்படி ஒரு படமே தமிழ்லே கிடையாது! தெலுங்கிலே டப்பாவிலே போன படமாயிருக்கும்; ரொம்பத் தான் ஆடாதே” என்றான் அண்ணன்!

தெய்வத் திருமகள் படத்திலிருந்து!

முழுப்பரிட்சை லீவு வந்ததும் செந்தில் தன் கிராமத்துக்குத் திரும்பும் முன், மீண்டும் என் அப்பாவை வற்புறுத்தி என்னை அடுத்த ஒரு மாட்னி ஷோவுக்குக் கூட்டிப் போனான். படம் “தெய்வத் திருமகள்”. அசோகன், சந்திரகாந்தா நடித்தது.

“படம் எப்பிடி?” – செந்தில்.

“ஆகா பிரமாதம்!”

வீட்டில் பெருமையாய்ச் சொன்னபோது அண்ணன், “இது சரியான குப்பைப் படம்னு விகடன்லே 3 மாசம் முன்னாடி விமர்சனத்திலே கிழி கிழின்னு கிழிச்சிருந்தான்! அதுக்குள்ளே நம்ம ஊரு தியேட்டருக்கு வந்தாச்சுன்னா பின்னே அதன் யோக்கியதை தெரியாதா?” என்று வெறுப்பேற்றினான். “எவ்ளோ நன்னாத் தானே இருந்தது?” என்றேன் நான் ஆதங்கத்தோடு!

என்ன ஆனால் என்ன! குடும்பத்தில் எல்லாருமாய்ப் பார்த்த இரு சாமிப் படங்களோடு சேர்த்து, நான் ஒரு வருடத்தில் பார்த்தது நான்கு படங்கள் என்று கின்னஸ் ரெக்கார்டில் போட்டுக்கொள்ள வேண்டிய பெருமையை என் குடும்பத்தில் நான் மட்டுமல்லவா அன்று பெற்றிருந்தேன்!

செந்தில் அப்புறம் என்ன ஆனான்? அதை, கடைசியில், இந்தக் கட்டுரைக்கு சுபம் போடுமுன்பு சொல்கிறேன்.

அடுத்து என் பாம்பே சித்தியா! (சித்தியின் கணவரை எங்கள் பக்கங்களில் சித்தியா என்று அழைப்போம்).

பம்பாயில் வாழ்ந்த எங்கள் சித்தி (அம்மாவின் தங்கை) குடும்பத்துடன் 2,3 வருடங்களுக்கு ஒரு முறை ஊர்ப்பக்கம் வருவார். அப்போது கண்டிப்பாக எங்கள் கிராமத்துக்கும் ஒரு விசிட் உண்டு.

சித்தியா சந்தோஷமாய், குழந்தைகளுடன் கலந்து பழகுபவர். என் மீது அவருக்கு கூடுதல் பிரியம்! அவர்கள் வந்து விட்டால் சமையற்கட்டில் வெங்காய பஜ்ஜியும், கேசரியும், முருங்கை சாம்பாரும் மணக்கும். சித்தியா எங்களையும் அவரது மூன்று பெண் பிள்ளைகளையும், ஆற்றங்கரை, வயல் வெளி, பார்க்கு என்று வாக்கிங் கூட்டிப் போவார்; பம்பாய்ப் பிள்ளைகள் ‘நெல்லுக்காய்ச்சி மரம்’ வேடிக்கை பார்ப்பார்கள்! அது என்ன நெல்லுக்காஇச்சி மரம் என்று கேட்கிறீர்களா? பட்டணத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் கிராமத்துக்கு வந்தால் கிராமத்துப் பெரியவர்கள் அவர்களிடம் விளையாட்டாக, “உனக்கு அரிசி எப்பிடிக் கிடைக்குதுன்னு தெரியுமா?” என்று வம்புக்கிழுப்பார்கள். “தெரியும்; நெல்லிலிருந்து!” என்று சொல்லிவிட்டால், “நெல்லுக்காச்சி மரம் பாத்திருக்கியா?” என்று அடுத்து கேட்பார்கள்! பட்டணப் பிள்லைகளுக்கு நெல்லு செடியில் காய்க்குமா, மரத்தில் காய்க்குமா என்று தெரியாதாம். அதற்கான கிண்டல்  கேள்வி இது.  போகட்டும்.

சித்தியா வரும் சமயம் திருவிழா மாதிரி எங்களுக்கு! கண்டிப்பாகத் தவறாமல் ஒரு சினிமா நிச்சயம்!

பொதுவாக எங்கள் குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து சினிமா போனால் அதில் ‘பொருளாதார வர்ணாசிரம பேதம்’ குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உண்டு! நானும் என் அண்ணனும் தரைட் டிக்கெட்டு தான்; (படம் முடிந்து வந்து 2 மணி நேரமாவது சட்டையில் தரைட்டிக்கெட்டுக் காரர்கள் விட்ட பீடிப் புகையின் வாடையும், குதப்பி மண் தொட்டியில் துப்பிய வெற்றிலை,புகையிலை வாசமும் வீசும்!). மூன்று அக்காமார்கள் பெண்கள் பகுதியில் பத்திரமாய் பெஞ்ச் சீட்டில். அம்மாவும் அப்பாவும் அவர்களுக்கு நேர் பின்னே காவலாய் இரண்டாம் வகுப்பில் நாற்காலியில்!

ஆனால் பாம்பே சித்தியா வந்துவிட்டால் சமத்துவ சமுதாயம் தான்! காசை அள்ளி விடுவார்! நண்டு சிண்டு உட்பட எல்லாருக்கும் அவர் தயவில் முதல் வகுப்பு சோஃபாதான்! அதில் உட்கார்ந்து வாயெல்லாம் பல்லாக, கீழே பெஞ்சியிலும் தரைச் சீட்டிலும் இருக்கும் மக்களை அற்பப் பதர்கள் போல நோட்டம் விட்டுக்கொண்டு இறுமாப்போடு அமர்ந்திருப்போம்! தப்பித் தவறி அந்தக் சினிமா காட்சிக்கு என் பள்ளிக்கூட நண்பர்கள் யாரேனும் தரை டிக்கெட்டில் கண்ணில் பட்டுவிட்டால் என் முகத்தில் ஒரு கூடுதல் களை கட்டும்!

இப்படி சித்தியா உபயத்தில் பார்த்த முதல் முதல் சிவாஜிப் படம் ‘புனர் ஜென்மம்’. அது ஒரு அழுமூஞ்சிப்படம். (“ஆனாலும் நன்னாத்தான் இருந்துது”). அடுத்த படம் ஏ பி நாகராஜனின் ‘வா ராஜா வா’ என்று நினைவு.

– – – – –

நான் வாழ்க்கையில் முதன் முதலாய்ப் பார்த்த எம் ஜி ஆர் படம், ஒன்பதாவது படிக்கையில், ஒரு NCC கேம்பில் காண்பித்த ‘காவல் காரன்’!  இதை வெளியே  சொன்னால் எம் ஜி ஆர் ரசிக மாணவர்கள் என்னை அற்பப் புழுவைப் போலப் பார்ப்பார்கள் அக்காலத்தில். 

———

பின் கல்லூரி நாட்களில் ஆஸ்டல் வாசம். ஆகவே சுதந்திரம். கல்லூரி ஆடிட்டோரியத்திலேயே, வாரா வாரம் சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒரு சினிமா போடுவார்கள். இப்படிப் ஐந்து வருட கல்லூரிக் காலத்தில் பார்த்த நல்ல, சுமாரான, பாடாவதிப் படங்கள் ஏராளம். கூடவே இரண்டு வாரத்துக்கொருமுறையேனும் கோவை நகருக்குள் தியேட்டரில் போய்ப் பார்க்கும் படங்கள் தனி!

இதிலும் தமாஷுகள் உண்டு; முதலாமாண்டு மாணவர்களாய் ‘ராகிங்’ எல்லாம் முடிந்து, இரண்டாவது செமெஸ்டரில் கொஞ்சம் தைரியமாய் வெளியே தியேட்டருக்குப் போய் பெஞ்சு டிக்கெட்டில் உட்கார்ந்து படம் பார்க்கையில், தரை டிக்கெட்டில் சில சீனியர்கள் கண்ணில் படுவார்கள்! கையில் பீடியுடன்! இடைவேளையில் கக்கூசுக்கு அருகில் எங்களைப் பிடித்து “இன்னாடா, அப்பங்காசை சினிமா பார்த்து அழிக்கிறியா? நீ கெட்ட கேட்டுக்கு பெஞ்சி சீட்டா? மவனே, அடுத்த தடவ ஒழுங்கா மரியாதையா தரை சீட்டில் தான் படம் பாக்கணும்; புரியுதா?” என்று மிரட்டுவார்கள்!

இந்தக் கால கட்டத்தில் நான் தியேட்டரில் பார்த்த முதல் இந்திப் படம், ராஜேஷ் கன்னா நடித்த ‘அஜ்னபி’. முதல் தெலுங்குப் படம், ‘ஜெகன் மோகினி’; முதல் ஆங்கிலப் படம் ‘Ten commandments’; முதல் மலையாளப் படம் ‘சுவன்ன சந்தியகள்’.

இந்தக் கால கட்டத்தில்தான் சினிமாவை ரசனையோடும், விமரிசனக் கண்ணோடும் பார்த்துத் தர நிர்ணயம் செய்யும் அறிவு வந்தது. ‘யார் டைரக்டர்?’ என்று கேட்டுப் படம் பார்ப்பது வந்தது. (பாலச்சந்தரா, ஸ்ரீதரா, தேவராஜ்-மோகனா, கே எஸ் கோபால கிருஷ்ணனா, திரிலோகசந்தரா, புதிதாய் வந்த பாரதி ராஜாவா?).

பின் வேலை, சுய சம்பாத்தியம் என்று வந்த பின், எப்போதும் பத்திரிக்கையில் படத்தைப் பற்றிய விமர்சனங்களைப் படித்து ஓரளவு பேர் வாங்கிய படங்களை மட்டுமே பார்ப்பது என்கிற பழக்கம் வந்து விட்டது.

ஒரு நாளும் ‘பிடித்த ஹீரோ’ என்று படம் பார்த்ததில்லை; படம் ரிலீசான உடனே என்று ஒரு படமும் பார்த்ததில்லை; கருப்பு டிக்கெட் எடுத்துப் படம் பார்த்தே இல்லை; ஒரே படத்தை மீண்டும் மீண்டும் தியேட்டரில் போய்ப் பார்த்ததில்லை; கேள்விப்படாத படம் எதையும் திடீரென்று போய்ப் பார்த்ததில்லை.

தொலைக்காட்சி வந்தபின் தியேட்டரில் போய்ப் பார்ப்பது என்பது (திருமணமான பின்) அபூர்வமாயிற்று. தொலைக் காட்சியிலும் முழுப்படத்தை உட்கார்ந்து பொறுமையோடு பார்ப்பது குறைந்து கொண்டே போனது. பிள்ளைகள் பிறந்து வளர்ந்ததும் அது இன்னும் குறைந்து போயிற்று.

பிள்ளைகளுக்கும் தியேட்டரில் போய் சினிமா பார்ப்பதில் பெரும் கவர்ச்சி ஒன்றும் இல்லாதிருந்தது வசதியாயிற்று.

பிற்காலத்தில், என் மகளுக்கும் மகனுக்கும் அவர்கள் பள்ளி/ கல்லூரிக் காலங்களில் ஹாரி பாட்டர் கதை படிப்பதில் தீவிர நாட்டம் வந்தபின், என்னையும் அக்கதைகளைப் படிக்கச் சொன்னார்கள். நானும் அவற்றைப் படித்து ரசித்தேன். என் மனைவிக்கும் மகள் அக்கதைகளைச் சொல்வாள்.

ஆக, அந்த ரசனையின் விளைவால், ஒவ்வொரு ஹாரி பாட்டர் படம் வெளிவந்ததும் மொத்தக் குடும்பமாய் தியேட்டரில் போய்ப் பார்ப்பது என்கிற ஒரு ‘சம்பிரதாயம்’ என் மகள் வீட்டில் கொண்டு வந்தாள்! அப்படி 7 படங்களையும் பார்த்தோம்.

3டி படமான, மிகப் பெயர்பெற்ற ‘அவதார்’ குடும்பத்துடன் பார்த்தோம். ஹாரி பாட்டர் கடைசி படம் முடிந்த பின் தியேட்டரில் படம் பார்ப்பது என்பது அனேகமாக முடிவுக்கு வந்தது.

மீண்டும் செந்தில் பற்றி….

செந்தில் 11 ஆம் வகுப்பை முதல் முயற்சியிலேயே பாஸ் செய்து விட்டான். ஒரு தட்டு நிறைய வாழைப்பழம் வெற்றிலையுடன் வந்து என் தந்தையின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, வேலை தேடிப் பட்டணம் போனான். 3 மாதங்கள் கழிந்து திரும்பிவந்து மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்தான்.

“சார்! மெட்ராஸிலே ஒரு சொந்தக்காரர் சிபாரிசிலே, கோடம்பாக்கத்தில் ஒரு சினிமா கம்பெனியில் வேலை கிடைச்சிடிச்சி! நடிகர் நடிகைகளுக்கு கால்ஷீட் கொடுக்கிற வேலை சார்!” என்றான் வாயெல்லாம் பல்லாக!

அப்பா, “சரியாப் போச்சு போ! உனக்கு அதிருஷ்டம் தான்; நீ சினிமா சினிமான்னு அலஞ்சதுக்கு ஏத்த மாதிரி உனக்குக் கெடச்சுப்போச்சா! நல்லது தான் போ!” என்று ஆசீர்வதித்தார்!

“சீவீ, நீ மெட்ராஸ் வந்தா உன்னை சினிமா செட்டுக்கெல்லாம் கூட்டிப் போய் நடிகர் நடிகையெல்லாம் நேரிலேயே காட்டுறேன்” என்றான். 

நான் பரவசமாகி நின்றேன்!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here