ஒரு போலியான நண்பரின் கதை இது

0
142

கதையில் வராத பக்கங்கள் – 18

18. ஒரு போலியான நண்பரின் கதையிது  

இது நடந்து 38 வருடங்கள் ஓடியாயிற்று. அப்போது எனக்கு 24,25 வயது. வேலை பார்த்த கம்பெனியில் டிசைன் டிபார்ட்மெண்டில் ‘துடிப்பாக இயந்திர வடிவமைப்பு டிராயிங்’ வரையும் புதுப் பையன் என்று பெயர் எடுத்திருந்தேன்.

வயதில் மூத்த ஒரு ஃபோர்மேன் என்னிடம், “தம்பி, நம்ம கம்பெனிக்கு வெளியே ஒரு சின்ன ஃபௌண்டரி இருக்குது; அதிலே ஒரு சின்ன பழைய மெஷின் ஒண்ணைப் பார்த்து அதே மாதிரி புதுசா அவங்களே பண்ணி விக்கணும்னு பாக்கிறாங்க; அதைப் பிரிச்சுப் போட்டு டிராயிங் உண்டாக்குற இஞ்சினீயர் யாரும் கிடைப்பாங்களான்னு கேட்டாங்க; நீ வேணா பார்ட்டைம்லே பண்ணிக் கொடுத்துக் காசு பாக்கலாம்” என்று சொன்னார். ஆர்வம் காண்பித்த என்னை அவர் அந்தக் கம்பெனி மானேஜரிடம் அறிமுகமும் செய்து வைத்தார்.

அந்த மேனேஜர் முழுப்பெயர் இப்போது நினைவில்லை. ஆனால் பெயர் முடிவில் கரையாளர் என்று வரும் என்பதாக நினைவு. சுமார் 38 வயது இருக்கும். முன் வழுக்கை; அகல முகம்; நீட்டாக பாண்ட், சட்டை, பெல்ட்; கண்ணியமான தோற்றம். அமர்த்தலான, அசத்தலான தெளிவான, நல்ல தமிழும், ஆங்கிலமும் பேசும் திறன்; ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் லாகவம். சிரித்த முகம். நட்புடன் நிதானமாகப் பேசும் கம்பீரம்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. பெரிதாக என் திறமைகளைப் பற்றி நோண்டி ஏதும் கேட்டுத் தெரிந்துகொள்ளாமலேயே அவர் அந்த வரையும் பணியை எனக்குக் கொடுத்தார். நான் எதிர்பார்த்த தொகையை பேரம் ஏதும் பேசாமல் தர ஒப்புக்கொண்டார். (பிற்பாடு தான் தெரிந்தது அவர் ஒரு இஞ்சினீயர் அல்ல; டெக்னிக்கலாக ஏதும் அறிந்தவரல்ல; பீ ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பது!)

நான் தங்கியிருந்த ஒரு பிரம்மசாரிகள் மேன்ஷனைப் போலவே அதே புறநகர்ப் பகுதியில் ஒரு அரை கி.மீ. தள்ளியிருந்த மற்றொரு மேன்ஷனில்தான் அவரும் தனியே அறை எடுத்துத் தங்கியிருந்தது தெரிந்தது.

நான் அவரது ஃபவுண்டரி (இரும்பு உருக்குத் தொழிற்சாலை)க்கு அடிக்கடி போய் அந்த இயந்திரத்தைப் பிரித்துப் போட்டு அளவெடுத்தேன். அப்படி அடிக்கடி சந்தித்தோம். அவருக்குப் பேசப் பிடித்திருந்தது. ஏராளமான பொது அறிவு இருந்தது; சுவையாகப் பேசும் திறனும் இருந்தது; பகிர்வதற்குப் பல சுவாரசியமான சொந்த அனுபவங்கள் அவருக்கு இருந்தன.

என் பணி முடிவடையும் சமயத்தில் அவர் அனேகமாக நெருங்கிய நண்பர் போலவே ஆகிவிட்டார். அவரது மேன்ஷனுக்குப் போய் அவர் அறையிலும் அவரைப் பார்த்ததுண்டு. ஒரு பெரிய்ய அலமாறி முழுக்கக் கணக்கற்ற புத்தகங்கள்! அவருக்கு ஒரு intelectual தோரணை இருந்தது.

“தகழியின் இந்த கதையைப் படித்திருக்கிறீர்களா? நீல. பத்மநாபன் படித்ததுண்டா? கார்ல் மார்க்ஸ் படித்ததுண்டா?” என்றேல்லாம் புத்தகங்களை எடுத்துக் காண்பித்துக் கேட்பார். நான் வாயைப் பிளப்பேன்! “ரஸ்ஸலின் Marriage and Morals படித்திருக்கிறீர்களா? வேண்டாம். அதைப் படித்தால் கல்யாண ஆசை போய்விடும்!” என்பார்.

அவருடன் சேர்ந்து நடைப் பயிற்சி போவேன். சேர்ந்து எப்போதாவது ஓட்டலில் சாப்பிடுவோம். நான் தான் பில்லுக்குப் பணம் கொடுப்பேன்.

என் வேலையை முடித்துத் தந்த பின்னும் 2 மாதங்கள் பணம் தர வில்லை! பிறகு ஒரு 1000 ரூபாய் பாக்கி வைத்து விட்டு மீதம் தந்தார்.

அவரது ஃபவுண்டரி நஷ்டத்தில் ஓடுகிறதாம். அதன் சொந்தக்காரர் இவரது நெருங்கிய நண்பராம். “இந்தக் கம்பெனியை நீ நிர்வகித்து லாபத்துக்குக் கொண்டுவா; உன்னைப் பார்ட்னர் ஆக்கி விடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறாராம். அதற்காக இவர் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறாராம். இவர் வந்தபின் பல புதிய ஆர்டர்கள் பிடித்துள்ளாராம். நான் வரைந்து தந்த இயந்திரத்தை தாமே தம் ஃபவுண்டரியில் உண்டாக்கி விற்பது என்னும் எண்ணம் கூட வருமானத்தைக் கூட்டும் முயற்சியில் ஒன்றாம்.

இவர் அதற்கு முன், கேரளத்தில் மேனேஜராக வேலை பார்த்த ஒரு கம்பெனியில் முதலாளியின் மகன் ஒரு ‘தொழிலாளிப் பெண்ணுடன்’ தகாத உறவுவைத்திருந்த கதை ஒன்று சொன்னார். கோடவுனில், பட்டப்பகலில் பஞ்சு மூட்டைகள் மீது படுத்து உடலுறவில் ஈடுபட்டிருந்தைக் கையும் களவுமாகப் பிடித்தாராம்! அப்பிரச்சனையில் இவர் தொழிலாளிப் பெண்ணுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் திடீரென்று இவரை வேலை நீக்கம் செய்து விட்டார்களாம். அப்போது தான் நெருங்கிய நண்பர் இப்படி உதவிக்கரம் நீட்டினாராம்.

இங்கு புதிய கம்பெனியை ஒரு மாதிரி நேர் செய்த பின், மனைவி, குழந்தையை ஊரிலிருந்து கூட்டி வந்து இங்கே குடித்தனம் வைக்கும் எண்ணத்தில் இருந்தார். .

எங்கள் நட்பு தொடர்ந்தது. பண விஷயத்தில் நான் விடாக்கண்டன்! எப்படியோ முக்கி முக்கி அந்த பாக்கி ஆயிரம் ரூபாயையும் வசூல் செய்து விட்டேன்.

அவர் தம் பேச்சு சாமர்த்தியம் ஒன்றையே முதலாக வைத்து ஒரு பெரிய கம்பெனியிலிருந்து ஆர்டர்கள் தொடர்ந்து பிடித்தார். எப்படி அந்தக் கம்பெனியின் பர்ச்சேஸ் மானேஜரைத் தம் சாமர்த்தியமான பேச்சால் வளைத்து, அவருக்கு லஞ்சம் கொடுத்து ஆர்டர் பிடித்தார் என்று பெருமையாகத் தம் திறமையை என்னிடம் விவரிப்பார்!

ஆனால், அவருக்கு வார்ப்பு இரும்பு உருக்கு, அதன் சூட்சுமங்கள், அதிலுள்ள பல தரவரிசைகள், அதற்காக மூலப்பொருள்களில் செய்ய வேண்டிய மாறுதல்கள் என்று டெக்னிகலாக ஏதும் தெரியாது; தெரிந்துகொள்ளவும் அவர் முயற்சி எடுக்கவில்லை. அங்கே வேலை பார்த்த, படிப்பறிவு குறைந்த, ஆனால் அனுபவம் மிகுந்த ஒரு ஃபோர்மேனைத்தான் அவர் எல்லா டெக்னிகல் காரியங்களுக்கும் முழுவதும் நம்பியிருந்தார்.

இப்போதுதான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி  ஐயங்கள் எழலாயின. ஆனாலும் அவர் மீது எனக்கு (அந்த இரண்டும் கெட்டான் வயதில்) ஒரு பெரிய உயர்வு நவிர்ச்சி இருந்தது. அவர் பேச்சுத் திறமையில் நான் பெரிதும் மயங்கியிருந்தேன்.

எப்படியோ என் பாக்கிப் பணத்தை ஒருவழியாய்  செட்டில் செய்த அடுத்த  15 ஆவது நாள் அவர் என்னிடம் திறமையாகப் பேசி 2000 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டார்!

புதிய ஆர்டர்கள் அடுத்தடுத்து வாங்க ஆரம்பித்ததும் அவர் மேன்ஷனை காலி செய்து விட்டு வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டார். ஊரிலிருந்து மனைவியை வரவழைத்து விட்டதாகச் சொன்னார்.

எங்கள் சந்திப்புகள் பெரிதும் குறைந்தன. நான்அவரைத் தொலை பேசியில் விளித்துப் பணத்தைக் கேட்க ஆரம்பித்தால் அவர் சாக்கு போக்கு சொல்லி நழுவுவார்!

பிறகு ஒரு நாள் அவரை நேரிலேயே சந்தித்த போது,  ஓர் உண்மையைச் சொன்னார். அவர் பெரிதாய் ஆர்டர் பிடித்த கம்பெனி எல்லா ஆர்டர்களையும் கேன்ஸல் செய்து விட்டதாம். சோகக் குரலில், காரணமும் சொன்னார்.

வார்ப்பு இரும்பு கிரேட் 20 இல் தான் அவர் ஆரம்பத்தில் பொருள்கள் செய்து கொடுத்தாராம். பிறகு அதிக வலு கூடிய, விலையும் கூடுதலான கிரேடு 30 க்கான இரும்பிலான வேறு வார்ப்புகளுக்கான ஆர்டரும் பேசி வாங்கினாராம்.

இரண்டு கிரேடுகளுக்குமான வித்தியாசங்களை இவரும் படிக்கவில்லை; இவர் ஃபோர்மெனும் அறியார்! ஆக, சாமர்த்தியமாக, ஒரே உருக்கைக் காய்ச்சி இரண்டு கிரேடுகளுக்கும் அதையே ஊற்றி சப்ளை செய்தாராம். பயனாளர் கம்பெனியின் தரக் கட்டுப்பாடு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து வாயை அடைத்தாராம்!

ஆனால் பயனாளர் கம்பெனியின் சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்களில் அந்த பாகம் அடிக்கடி உடைந்து போய்ப் பிரச்சனை வந்துதால், மீண்டும் தரக் கட்டுப்பாடு சோதனை செய்தபோது, குட்டு வெளிப்பட்டு விட்டதாம்! அதனால் புதிய ஆர்டர்களோடு சேர்த்து பழைய ஆர்டர்களையும் கேன்சல் செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அவரது கம்பெனியையும் ‘பிளாக் லிஸ்ட்’ செய்து விட்டார்களாம். அவரிடம் முன்பு இருந்த தன்னம்பிக்கையும், கம்பீரமும் பெரிதும் அடி வாங்கிவிட்டது போலத் தோன்றியது எனக்கு.

3 மாதம் போயிற்று. ஆசாமி கண்ணிலேயே படவில்லை. அவர் வீட்டு முகவரி எனக்குத் தெரியுமாதலால் ஒரு நாள் தேடிப் போனேன். வீடு பூட்டியிருந்தது. பிற்பாடு அடுத்தடுத்துப் பல முறை போய்ப் பார்த்தபோதும் பூட்டியே இருந்தது. மாடியில் இருந்த வீட்டு சொந்தக்காரரை விசாரித்தேன்.

“என்ன தம்பி, கடன் கிடன் கொடுத்திருக்கியா?” என்று கேட்டார்! “எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்றேன். “உன்னை மாதிரி 4,5 பேர் வாரா வாரம் வந்து என் கதவைத் தட்டிக் கழுத்தை அறுக்கிறார்களே! எல்லார் கிட்டையும் கடன் தானாம்! எனக்கும் 3 மாசமாய் வாடகை பாக்கி. எல்லாம் என் தலையெழுத்து!” என்றார்!

ஆக நான் 4000 ரூபாய்க்கு செய்து கொடுத்த டிசைன் வேலையில் அவருக்குக் கொடுத்த வாராக் கடன் போக எனக்கு மிஞ்சியது 2000 ரூபாய் மட்டுமே. கூடவே இழந்தது அவருடன் அவர் பேசிய intellectual விஷயங்களை வாய் பிளந்து கேட்டு நான் இழந்த கணக்கற்ற மணி நேரங்கள்..

கதை இன்னும் முடியவில்லை.

எனக்குத் திருமணம் ஆயிற்று. மனைவியுடன் ஒரு நாள் ஆட்டோவில் ஒரு உறவினர் திருமணத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். வழியில் எதிர் சாரியில் ஒரு பேருந்து நிலையத்தின் நிழற்குடையில் ‘பழைய நண்பர்’ நிற்பதைப் பார்த்தேன். ஆட்டோவை நிறுத்தி, விடுவிடுவென்று சாலையைக் கடந்து அவர் முன்னே போய் நின்றேன். திகைத்தார்; அசட்டு ‘லுக்கு’ கலந்த ஆச்சரியப் புன்னகை! “ஹல்லோ, வாட் அ சர்ப்ரைஸ்!” என்றார்.

இளைத்திருந்தார்; நரைத்திருந்தார். அருகில் சற்றே வறுமைச் சாயலுடன் மனைவி.

கல் நெஞ்சனான நான், நட்புணர்வோ, சிரிப்போ ஏதும் முகத்தில் காண்பிக்காது எடுத்த எடுப்பில், “என் பணம் என்ன ஆச்சு?” என்றேன். இப்படியொரு எதிர்த்தாக்குதலை அவர் தமது தகிடுதத்தம் மிகுந்த சாமர்த்தியமான  வாழ்நாட்களில் நீண்ட நாட்கள்  நட்பாயும் சுமுகமாயும் கௌரவமாயும் பழகிய ஒரு படித்த நாகரீகமான இளைஞனிடமிருந்து எதிர் பார்த்திருக்கவே மாட்டார்தான்!

அவர் முகம் இறுகியது. “மறப்பேனா? கண்டிப்பாகத் தருவேன்” என்றார் ரோஷத்தோடு. பேருந்து நிழற்குடையில் இருந்த ஐந்தாறு பேர் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

“நீரே வைத்துக்கொள்ளும் அந்தப் பணத்தை” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டேன் நான். ஆட்டோவில் திரும்ப ஏறுகையில் அவர் தம் மனைவியிடம் கூசிக் குறுகி ஏதோ விளக்கமளிப்பதைப் பார்த்தவாறே “ஆட்டோவை எடுப்பா!” என்றேன்.

“என்ன ஆச்சு? ” என்றாள் என் மனைவி.

அன்றைய போதுக்கு அவளுக்கு சொல்ல ஒரு நெடிய நிஜ அனுபவக்கதை கிட்டியது!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here