நானும் ஒரு ‘தல’டா!

0
255

கதையில் வராத பக்கங்கள் – 19

19.   நானும் ஒரு ‘தல’டா!

நான் செய்த ஒரு சொதப்பலினால் எங்கள் பள்ளிக்குக் கிடைக்க வாய்ப்பு இருந்த ஒரு பரிசுக் கோப்பை  கிடைக்காமல் போன ஓர்  கதையைச் சொல்லுகிறேன்!

அது 1971 ஆம் ஆண்டு.

அப்போது நான் 10 ஆவது படித்துக்கொண்டிருந்தேன். தேசீய மாணவர் படை (NCC) இல் 2 வருடங்களாக இருந்தேன். நான் சோனி; பெரிய ஆளுமை ஏதும் இல்லாதவன். ஆனால் NCC Drills (விரைப்பாய் நடப்பது, கட்டளைகளுக்கேற்பத் திரும்புவது, சல்யூட் அடிப்பது இன்ன பிற) எல்லாம் நன்றாகவே செய்வேன். முந்தைய ஆண்டு ஒரு ‘கேம்ப்’ இல் பங்கு பெற்றிருந்தேன். இரு NCC பரிட்சைகளில் வேறு தேறியிருந்தேன். அதனால் அந்தத் தகுதிப் படியும், வேறு உருப்படியாக எந்தப் பையனும் தேறாததாலும் (!), எங்கள் பள்ளி NCC மாஸ்டருக்கு நான் சகாயமாக சில பல அலுவலக வேலைகளில் உதவியதால் அவருக்கு என்னைப் பிடித்துப் போனதாலும் என்னையே அவர் சார்ஜெண்ட்டாக நியமித்துவிட்டார்!

எனக்கே என் மீது ஆச்சரியம்! மற்ற பையன்களுக்கு சற்றே இளக்காரமான சிரிப்பு வேறு!

எப்படியோ, நானும் சார்ஜெண்டாகி, மாணவர்களுக்கு டிரில் செய்யக் கட்டளை இடுவது (“ரைட் டேண்”, “லெஃட் டேண்”, “அபௌட் டேண்”….) “லெப்ட், ரைட், லெப்ட்…..” சொல்லிக் கட்டளைப் படி எல்லாரும் ஒழுங்காய் நடக்கப் பழக்குவது எல்லாம் செய்து கொண்டிருந்தேன். ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நடக்க மட்டுமே தெரிந்த சில மாணவர்களை ஒழுங்காக, கட்டளைக்கொப்ப, எல்லாரையும் ஓரே மாதிரி வலது கால், இடதுகால் வைத்து நடக்கப் பழக்குவதற்கு நான் பட்ட பாடு! அப்பப்பா!

அந்த வருடம் அடுத்த ‘கேம்ப்’ வந்து விட்டது. அது வெளியூரில், எங்கோ செட்டிநாடு பக்கம் இருந்த ஒரு தொலை தூரப் பள்ளியில். எங்கள் மாஸ்ட்டர் அந்தக் கேம்ப்புக்கு ஏதோ ஒரு காரணத்தால் வர முடியவில்லை. அதனால், அவர் எங்கள் குழுவை எங்கள் ஊரிலிருந்து 5 கி.மீ. தள்ளியிருந்த மற்றொரு உயர் நிலைப் பள்ளியின் NCC மாஸ்டரிடம் ஒப்புவித்தார்.

அந்த மாஸ்டரின் பொறுப்பில் அந்தப் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து நாங்கள் ரயிலில் பயணித்து அந்த வெளியூர் பள்ளிக் கேம்ப்பில் போய் சேர்ந்தோம். ஒரு ஆளுமைத் திறனும் எல்லாத எனக்குத் தலைமேல் ஏகப் பொறுப்பு. ஒரே டென்ஷன்!

நிர்வாகத் திறன் ஏதுமில்லாவிட்டாலும் புத்திசாலி, திறமையான கேடட் என்று என்று அங்கு நடக்கும் வகுப்புகளில் பெயர் வாங்கினேன். 

பொதுவாக NCC கேம்புகளில் பங்கு பெறும் மாணவர்கள் துடிப்பாகச் செயல் படவேண்டும் என்று அங்கு பயிற்றுவிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் எதிர்பார்ப்பார்கள். எந்த ஒரு செயலைச் செய்ய வாலண்டியர்களை அழைத்தாலும் துடிப்பாய்க் கை உயர்த்த வேண்டும். ஒரு சாகசச் செயலைச் செய்யக் கூப்பிட்டால் முதலில் எழுந்திருக்க வேண்டும்.  இதெல்லாம் நான் முந்தின கேம்பில் கண்டு படித்தது.

ஒரு நாள் கேம்ப்பில் ஏதோ வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில அதிகாரிகள் வந்து, ‘ரைபிள்” துப்பாக்கி  சுடும் போட்டி நடக்கப் போகிறது; “யார் யாருக்கு குறிபார்த்து சுடும் திறமை உண்டு?” என்று கேட்டார்கள். நான் துடிப்பாய்க் கை தூக்கினேன்! (உண்மையில் எனக்கு துப்பாக்கியைத் தூக்குவதே சிரமம்!) என் கூடவே மற்ற ஒரு சில மாணவர்களும் கை தூக்கினார்கள். இப்படி ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு மூன்று  பேரைக் கூட்டிக்கொண்டு, மெஸ்ஸுக்கு அழைத்துப் போய் காலைச் சாப்பாட்டை சீக்கிறமே சாப்பிடவைத்து, ஒரு ஆர்மி லாரியில் ஏற்றி 3 கி.மீ தள்ளியிருந்த துப்பாக்கி சுடும் தளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.

என் சி சி வகுப்புகளில் அந்த நீண்ட, கனமான ரைபிள் துப்பாக்கியை எப்படித் தூக்குவது, அதை வைத்துக்கொண்டு எப்படி சில உடற்பயிற்சிகள் முறைப் படி செய்வது; எப்படிப் போர்க்களத்தில்  படுத்துக்கொண்டு சுடுவார்களோ அப்படிப் படுத்துக்கொண்டு துப்பாக்கியை கையில் பிடித்து, அதன் அடிப் பகுதியை தோள் பட்டையில் அழுத்தி வைத்துக்கொண்டு, முழங்கையை மண் தரையில் ஊன்றி கனமாய்க் கனக்கும் துப்பாக்கியைத் தாங்கிக் குறிபார்ப்பது என்றெல்லாம் முன்னரே பயிற்சி தந்திருந்தார்கள். நானும் முந்தைய கேம்பிலேயே அவற்றைப் பயின்றேன்.  நோஞ்சானான எனக்கு துப்பாக்கியை முழங்கையால் தரையில் ஊன்றி பிடிக்கும் போதே, கை வெடவெடவென்று ஆடும்! குறியாவது பார்ப்பதாவது! 

போன கேம்பிலேயே துப்பாக்கி சுடப் பயிற்சி தந்திருந்தார்கள். அப்படிச் சுட்டதில் ஒரு குண்டு கூட டார்ஜெட் இருக்கும் பலகையில் படவில்லை! என் யோக்கியதை இப்படி இருக்கையில் நானும் இதோ போட்டிக்கு வந்தாயிற்று!

எதிர்பார்த்தபடியே, கை நடுக்கம், குறி தப்பல் என்று ஆகி, அவர்கள் தரும் துப்பாகி ரவைகள் எட்டோ பத்தோ ஒன்று கூட நான் சுட்ட அழகில் டார்ஜெட் வைத்திருந்த பலகையின் அக்கம் பக்கம் கூடப் போக வில்லை!

அதை “வாஷ் அவுட்” என்பார்கள். என் கூட வந்திருந்த என் பள்ளிப் பிள்ளைகளில் ஒருவன் மட்டும் 2 ரவைகள் பலகையின் ஓரத்திலாவது  படுமாறு அடித்திருந்தான். (ஆனால் டார்ஜெட்டில் அல்ல!).

இப்படி அங்கு போன பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்களில் ஓரளவு சுமாராய்க் குறி பார்த்து அடித்தவர்கள் 4, 5 பேர் இருந்தார்கள். அவர்களை மட்டும் அடுத்த ரவுண்டு போட்டிக்கு இருக்குமாறு சொல்லிவிட்டு என்னைப் போன்ற வாஷவுட் கேசுகளை “திரும்பி கேம்ப்புக்குப் போங்க” என்று சொல்லிவிட்டார்கள்.  “கூட்டிப் போக லாரி எங்கே?” என்று கேட்டோம். “லாரியா, அதெல்லாம் ஒண்ணூம் கிடையாது; நடந்தோ ஓடியோ உங்கள் வசதிப் படி திரும்பிப் போங்கள்” என்று சொல்லிவிட்டார்கள். படை படைக்கும் மத்யான வெய்யலில் 3 கி மீ தூரம் லொங்கு லொங்கென்று நடந்துவந்தோம்! 

ஆக இப்படி உற்சாகமாய்க் கைத்தூக்கியதில், அப்படித் தூக்காத, ஆனால் ஓரளவு சுடும் திறமை உள்ள பலசாலியான வேறு மாணவர்கள் போட்டிக்குப் போவதைக் கெடுத்த புண்ணியத்தை நான் செய்தேன்!

கேம்பில் என் ஸீஸீ குழுவினருக்கான சிறப்பான நடைப் பயிற்சிகள் உண்டு. அவற்றிற்கெனப் போட்டிகளும் வெள்ளிக் கோப்பை பரிசுகளும் உண்டு.

எங்கள் பள்ளிக் குழு, நடைப் பயிற்சிகளில் மற்ற பள்ளிகளை நோக்குகையில் பெரும்பாலும் சிறப்பாகவே செய்தனர். எங்களுக்குப் பொறுப்பாய் இருந்த அந்த மற்றறொரு பள்ளியின் மாஸ்டர், என் பேரில் நல்ல அபிப்பிராயம் கொண்டார். “நீங்களெல்லாம்  முயன்றால் உங்கள் பள்ளிக்குழு ‘நடைப் பயிற்சி’ப் போட்டியில் முதலில் கூட வரக்கூடும்” என்று உற்சாகப் படுத்தினார். “நீ நல்ல சார்ஜெண்ட் தான்; நன்றாகப் பயிற்சி பண்ணு; எல்லாரையும் பழக்கு” என்றார் என்னிடம்.

நிறையப் பயிற்சி செய்தோம். அதில் பல வித நடைகள், வலது இடது பக்கத் திருப்பங்கள், 180 டிகிரி சுற்றிப் பின்பக்கம் திரும்பும் ‘எபௌட் டேண்” இந்தப்பக்கமும் அந்த்ப் பக்கமும் விறைப்பான நடை, ஒன்றுக்குப் பிறகு அடுத்தது என்று முறையோரு செய்யும் அசைவுகள் எல்லாம் அடக்கம். சார்ஜெண்ட் தானும் முன்னின்று கம்பீரமாய் நடந்து, குழுவுக்கும் கட்டளை இட வேண்டும். பின் மொத்தக் குழுவும் நடையைப் பார்வையிடும் மேலதிகாரி இருக்கும் திசையைப் பார்த்து ‘அட்டேன்ஷனி’ல் நிற்கையில் நான் விரைப்பாய் நடந்து போய் அவருக்கு சல்யூட் அடித்து என் அணியைப் பற்றிய தகவலை இறைந்து அறிவிக்க வேண்டும்.

போட்டி நாளும் வந்தது. எனக்கு வடிவேலு மாதிரி “பில்டிங்கு ஸ்டிராங்கு; பேஸ்மெண்டு வீக்கு” என்று காலையிலிருந்தே பயத்தில் கால்கள் வெட வெட!

எங்கள் அணியின் முறை வந்தது. சும்மா சொல்லக்கூடாது; என் பையன்கள் நன்றாகப் பயிற்சி செய்திருந்ததால் சிறப்பாவே நடந்தார்கள். இதோ, அனேகமாக எல்லாம் முடியும் தருணம். கடைசியாக ஒரு ‘லெப்ட் டேண்’ கட்டளை இட்டு, மொத்தக் குழுவையும் மேலதிகாரியை நோக்கித் திருப்பிய பின் நான் மட்டும் ‘எபௌட் டேண்’ செய்து அதிகாரியை நோக்கி நடக்கவேண்டும்.

அப்போதுதான்…

எனக்கிருந்த படபடப்பில், அந்த கடைசி ‘லெப்ட் டேண்’ கட்டளையை இட மறந்து போனேன். குழுவினர் தலைவரை நோக்காமல் பக்கவாட்டில் நோக்கியவாறு நின்றிருந்தார்கள். நான் எனது ‘எபௌட் டேண்’ அடித்தேன். அப்போது என் கண்ணில் பட்டது, எங்களுக்குப் பயிற்சி அளித்த ஒரு மாஸ்டர் “ஐய்யையோ” என்று முகம் சுளித்து “கெடுத்தானே” என்கிற ரீதியில் கையை உதறியதை!

அதைப் பார்த்ததும்  தான் எனக்கு உறைத்தது நன் ஒரு கட்டளையை விட்டுவிட்டேன் என்று! உடனே மீண்டும் ஓர்  ‘எபௌட் டேண்’ அடித்து,  என் அணியை நோக்கி, “லெஃப்ட் டேண்” கட்டளையை இட்டு விட்டு, மீண்டும் ‘அபௌட் டேண்’ அடித்து மேலதிகாரியை நோக்கி நடந்தேன். அவர் முகத்திலும் அருகில் இருந்த பலர் முகத்திலும் கேலிப் புன்னகை!

இப்படியாக, என் டென்ஷனினால் சொதப்பி, என் அணிக்குப் பரிசு வரும் வாய்ப்பைக் கெடுத்தேன்!

அன்று இரவு எல்லாரும் கிளம்ப வேண்டும். குற்ற உணர்வில் எனக்கு ஜுரம் வந்து விட்டது. ஊருக்கு வந்து சேர்ந்ததும் நான்கு நாள் ஜுரத்தில் படுத்துவிட்டேன்!

சில விஷயங்களுக்கு சிலர் லாயக்கில்லை என்பது அப்போது என் மண்டையில் ஏறியது!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here