நான் கேட்டது சரியா, சொல்லுங்கள்!

0
328

கதையில் வராத பக்கங்கள் – 17

17.  நான் கேட்டது சரியா, சொல்லுங்கள்!

சுமார் 36 வருடங்களுக்கு முன் நடந்தது இது. நான் அப்போது திருமணமாகாதவர்கள் தங்கும் ஓர் விடுதியில் வட சென்னையில் தங்கியிருந்தேன். நான் வேலை பார்க்கும் கம்பெனி, 3 கி.மீ தூரத்தில் இருந்தது. ஆகவே கிராமத்திலிருந்து என் சைக்கிளைக் கொண்டுவந்து விடுதியின் ஒரு மூலையில் வைத்திருந்தேன். அதில் தான் கம்பெனிக்குப் போய்வந்தேன்.

பிறகு வேறு கம்பெனிக்கு வேலை மாறினேன். அது மின்சார ரயிலில் அரை மணி நேரம் பயணப்படும் தூரத்தில். அந்த நிலையில், என் சைக்கிளுக்கு அவசியம் இல்லாது போய்விட்டது. அதனால் அது மூலையில் தூசி பிடித்துக்கொண்டு கிடந்தது.

யாராவது வேண்டியவர்கள் வேண்டுமானால் விலைக்கு வாங்கிக்கொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் விடுதியில் தங்கியிருந்த மற்றவர்களிடமும் சொல்லி வைத்திருந்தேன்.

விடுதியில், ஒரு பள்ளி ஆசிரியர் (என்னை விட 10 வயது மூத்தவர்) தங்கியிருந்தார். அவர், “தம்பி, நான் அந்த சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன்; தாம்பரத்தில் என் தம்பி ஒருவன் இருக்கிறான்; அவனுக்கு சைக்கிள் ஒன்று வேண்டும். எவ்வளவு எதிர்பார்க்கிறே?” என்றார்.

சொன்னேன். சிறிது பேரம் நடந்தது. ஒரு தொகைக்கு ஒப்புக்கொண்டோம். “தம்பி, நான் எடுத்துக்கொள்கிறேன்; ஆனால் 1 ஆம் தேதி சம்பளம் வந்ததும் தான் பணம் கொடுக்க முடியும்” என்றார். “சரி சார்! ஆனால் இன்று விற்றாயிற்று; நீங்களும் வாங்கியாயிற்று என்றே வைத்துக்கொள்ளலாம். இனி வேறு யாரும் வந்து விலைக்குக் கேட்டால் நான் மறுத்துவிடலாமில்லையா?” என்றேன். “கண்டிப்பாக” என்றார் அவர்.

ஒரு நாள் போயிற்று. நான் சைக்கிளைத் துடைத்து வைக்கப் போனபோது, அதில் இருந்த டைனமோவும், விளக்கும் திருட்டுப் போயிருப்பது தெரிந்தது! முதல் நாள் அவை இருந்தது எனக்கு ஞாபகம் இருந்தது. எனக்கு சற்று சங்கடமாகி விட்டது. நான் அந்த ஆசிரியிடம் போய், “சார்! சைக்கிளிலிருந்த டைனமோவை எவனோ திருடியிருக்கிறான். நீங்கள் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்; இல்லை உங்கள் தம்பியை உடனே எடுத்துப் போகச் சொல்லுங்கள். பொருள் உங்களது. ஆனாலும் எனக்கு கஷ்டமாக இருகிறது டைனமோ போனதால், அதற்காக ஒரு ஐம்பது ரூபாய் வேணுமானால் குறைத்துக் கொடுங்கள்” என்றேன். அவரும் சரி என்றார்.

அடுத்தவாரம் சைக்கிளையே காணவில்லை!

எனக்கும் அதிர்ச்சி; ஆசிரியருக்கும் அதிர்ச்சி! குடிகார வாட்ச்மேனைத் திட்டி என்ன பயன்?

“இப்போ என்ன செய்யறது?” என்றேன். ஆசிரியர் தலையை சொறிந்துகொண்டே, “தம்பி! போனது போயாச்சு; நான் வாக்குத் தவறக் கூடாது இல்லே? சம்பளம் வந்ததும் பேசியபடி, நான் பணம் கொடுத்திடறேன்; ஏதோ காசு தெண்டமாய்ப் போகணும்னு நேரம் போலிருக்கு” என்றார்.

சம்பள தினம் வந்து போயிற்று. நான் லேசாக நினைவுறுத்தினேன். “மறப்பேனா தம்பி? இந்தமாசம் ஊர்லே செலவு ஜாஸ்தி! அனுப்ப வேண்டியதாப் போச்சு; அடுத்த மாசம் தந்திடறேன்” என்றார்.

இப்படி 4 மாதங்கள் போயின.

நானோ, மத்தியதர வர்க்கம். நேர்மை, சிக்கனம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்றே வளர்ந்த கேஸ். காசு போனால் போகட்டும் என்கிற தாராள மனமெல்லாம் கிடையாது! கணக்கு என்றால் கணக்கு! அந்த இளமைக் காலத்தில் நான் இன்னும் “அடாவடி நேர்மை” உணர்வு கூடுதல் உள்ளவனாய் இருந்தேன். ”என்ன மனுஷன் இவரு? சொன்ன வார்த்தையைக் காப்பாத்த வேணாமா? எப்போ வாய் வழி பேசி அவர் வாங்கிட்டாரோ, அப்போ பணம் கொடுத்துத் தானே ஆகணும்? சைக்கிள் திருட்டுப் போனதுக்கு நான் என்ன செய்யமுடியும்?” என்று நினைத்துக் கோபம் கோபமாக வரும்.

இன்னும் 3 மாதங்கள் போயின; நான் மேன்ஷனை விட்டுக் காலி செய்து தென் சென்னையில் ஒரு வாடகை வீட்டுக்குக் குடி பெயர்ந்தேன்.

அடுத்த ஓரிரு மாதங்களில் ஏதோ ஒரு நினைப்பில் எனக்கு அந்த ஆசிரியர் மீது திடீரெனக் கோபம் பொங்கி வந்தது. விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினேன். அதில் அவர் நேர்மையற்ற நடத்தையைச் சற்றே வன்மையாகச் சாடி, அவர் ஒரு நம்பிக்கைத் துரோகியாக நடந்துகொண்டுவிட்டார் என்றும் ஒரு ஆசிரியராக அவரது நடத்தை ஏற்புடையதல்ல என்றும் எழுதியிருந்தேன். முழுத்தொகையும் அனுப்ப விருப்பம் இல்லையென்றால் குறைந்தது பாதித் தொகையாவது அவர் அனுப்பினால் தான் அவரிடம் கொஞ்சமாவது நேர்மை இருக்கிறது என்று பொருள் என்றும் எழுதினேன்! அப்போதுதான் என் மனது அடங்கியது!

ஒரு பத்து நாட்களுக்குள் ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதமும் காசோலையும் வந்தன. கடிதத்தில் அவர், “நீ உன் சொற்களால் என்னை மிகவும் புண்படுத்திவிட்டாய்; எனக்கு உன்னை ஏமாற்றும் எண்ணம் இருக்கிறது என்று எப்படி நீ கற்பனை செய்து கொள்ளலாம்? என் நேர்மையைப் பற்றி தீர்ப்பு சொல்ல நீ யார்? நம் நட்புக்கே நீ களங்கம் உண்டாக்கிவிட்டாய்” என்று பதிலடி கொடுத்திருந்தார்!

அவர் அனுப்பியிருந்தது (நான் என் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி) பாதித் தொகை மட்டுமே!

ஆனாலும் இப்போது குற்ற உணர்வு என்னைப் பிடித்துக்கொண்டது! ஐயோ, உண்மையிலேயே நல்ல எண்ணம் உள்ள ஒருவரைப் புண்படுத்தி விட்டோமோ? ஒருவேளை அவர் காலம் கடந்தாவது தாமே பணத்தை அனுப்பியிருந்திருப்பாரோ? அவசரப்பட்டுக் குத்திக் காயப்படுத்திவிட்டோமோ? என்றெல்லாம் குழம்ப ஆரம்பித்துவிட்டேன்.

ஒருவேளை இது எனக்கு நஷ்டம் ஆகவேண்டியதாக இறைவனின் இச்சை இருந்ததோ? நான் தான் வலுக்கட்டாயமாக வரக்கூடாத ஒன்றை வரவழைத்துக்கொண்டேனோ என்று தத்துவ விசாரம் வேறு!

சரி. இப்போது என்ன செய்ய? அவர் அனுப்பிய தொகையில் ஒரு பாதியை நான் வைத்துக்கொண்டேன். இன்னொரு பாதியை நான் முன்பே அறிந்திருந்த ஒரு அனாதை ஆசிரமத்துக்கு அந்த ஆசிரியரின் பெயரில் நன்கொடையாக அறிவித்து, அதன் ரசீதை அவர் பெயருக்கு நேரே அனுப்பிவிடச் சொல்லி காசோலை ஒன்றை அனுப்பினேன்.

ஆசிரியருக்கும் என் மன்னிப்பைக் கோரி, அவர் பெயரில் நான் கொடுத்துள்ள தானத்தையும் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி, நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.

இந்த எல்லாப் பிரச்சனைகளும் என் எதிர்ப்பார்ப்பினால் வந்த வினையன்றி வேறென்ன?

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here