சிறு வயதில் நம்பிய சில பொய்கள்!

0
131

கதையில் வராத பக்கங்கள் – 16

16.  சிறு வயதில் நம்பிய சில பொய்கள்!

 1. புத்தகத்தில் வைத்துள்ள மயிற்பீலித்துண்டு குட்டி போடும் என்பது. (அக்காலத்தில் அதை நம்பாத குழந்தைகள் உண்டோ?!)
 2. 2 ஆவது படிக்கையில் என் நண்பன் ஏகப்பன் தான் ஆட்டுக்குழம்பு சாப்பிட்டுவிட்டு வந்ததை சொல்லி, “அயிரு பாப்பான்” ஆன என்னை பயமுறுத்தப் பார்த்தது. நான் தைரியமாக, அந்தக் குழம்பு எப்படி செய்வீர்கள் என்று கேட்க அவன் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது “குழம்பு கொதிக்கயிலே, ஒரு ஆட்டை அப்பிடியே வெட்டி, அதன் தலையை குழம்பிலே லபக்கென்று போட்டுவிடுவோம்; அவிஞ்சப்புறம் தின்னா அம்புட்டு ருசியாயிருக்கும்!” . அந்த வயதில் நான் அந்த சமையற்குறிப்பை நம்பினேன்!
 3. நாலாவது வாத்தியார் (ஒரு பிராமணர்) ஏதோ ஒரு பாடத்தில் “உடும்புப்பிடி” என்று வந்தபோது, உடும்பு ஒன்றைப் பிடித்துக்கொண்டால் விடவே விடாது என்று விளக்கி விட்டு, கூடவே ‘ரொம்பத் தெரிந்ததுபோல்’ ஒர் தகவலை எடுத்து விட்டாரே பார்க்கலாம்! அதாவது, உடும்புக்கறி தின்றால் உடம்பில் நன்றாக ஒட்டுமாம்! . ஆனால் ஒரு விஷயம் — பிடிக்காமல் சாப்பிட்டு வாந்தியெடுத்தாலோ, அது உள்ளே போய் பசையாய்ப் பிடித்துக்கொண்டு, வாந்தி எடுக்கும்போது வயிறு, குடல் எல்லாவற்றையும் விடாப் பிடியாய்ப் பிடித்து வெளியே கொண்டு வந்து விடுமாம்! ஆள் அப்புறம் அம்போதான்! அந்த வயதில் நான் அதை நம்பினேன்!

 4. அப்போது நான் நான்காவதோ என்னவோ படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் குடியிருந்த எங்கள் வீட்டுக் கூடம், வராந்தா, முற்றம் எல்லாம்  நல்ல பெரிதாய் இருக்கும். ஊர்க்காரர்கள் சிலர் பணம் வசூலித்து ஊரில் ராதா கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லாரும் கூடி வேடிக்கை பார்க்க எங்கள் வீடு விசாலமாக இருக்கும் என்பதால் அப்பாவிடம் கேட்கவே அப்பாவும் ஒப்புக்கொண்டார்.
Radha kalyanam

முதன் முதலாக நாங்கள் ராதா கல்யாணம் அப்போது தான் பார்த்தோம். ஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர ஐயர் என்கிற பிரபலமான பாகவதரின் குழுதான் அதை நிகழ்த்தியது. புல்லாங்குழல், ஆர்மோனியம், மிருதங்கம், டோலக் இவைகளுடன் அருமையான சங்கீதத்தில் பஜனைகள், அஷ்டபதி, பாகவதர் ஆடும் நடனம் எல்லாம் ஆச்சரியமான அனுபவங்கள்!  பாகவதர், ஆஜானுபாகுவாய் நல்ல சிவப்பாய், களையாய் இருந்தார். அவர் விரலில் ஓர் பெரிய வைர மோதிரம் ஜொலித்தது. 

ராதா கல்யாணம் முடிந்து அடுத்த 2,3 நாட்களுக்கு எங்கள் வீட்டிலும் அந்த புதிய அனுபவத்தைப் பற்றித்தான் சுற்றிச் சுற்றிப் பேச்சு.

பெரிய அக்காவோடு நான் தனியே எதோ பேசிக்கொண்டிருக்கையில் அவள் “அந்த பாகவதரின் கையில் போட்டிருந்த மோதிரம் எப்படி ஜொலிச்சுது பாத்தியோ?” என்றாள்.  பார்வையாளர்கள் பலரும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டது என் காதில் விழுந்திருந்ததால் நானும் கவனித்திருந்தேன். “ஓ பார்த்தேனே?” என்றேன். அவர் ஜால்ரா தட்டிக்கொண்டு பாடுகையில் அதிலிருந்து பளபளவென்று வைரப் பொடிகள் தரையில் விழுந்ததைப் பார்க்கலையோ?” என்றாள்.

“அப்படியா? கவனிக்கலையே?” என்றேன். அக்கா “நான் கவனிச்சுட்டேன்; ராத்திரி பஜனை முடிந்ததும் நான் தான் கூடத்தைப் பெருக்கினேன். அப்போ ஒரு கை நிறைய வைரப் பொடி அங்கே நட்சத்திரன்ங்கள் போல மின்னிண்டு தரிஅயிலே கிடந்தது; அப்படியே ஒரு பேப்பர்லே தெரட்டி வெச்சுட்டேன்” என்றாள்.

” அப்படியா? எங்கே காட்டு?” என்றேன். 

“அதுவா, அதை மேஜை டிராயர்லே வெச்சிருந்தேன்; அடுத்த நாள் எடுத்துப் பார்த்தா எல்லாம் கரிப்பொடியாய் ஆயிருந்தது; சீன்னு தூக்கிப் போட்டுட்டேன்” என்றாள். நானும் அதை நம்பினேன். அப்புறம் பெரிய கிளாஸ் போகையில் வைரமும் ஒரு வகைக் கரிதான் என்று படத்தில் போட்டிருந்தது. அதை வைத்துக்கொண்டுதான் அக்கா என்னிடம் புருடா விட்டாள் போலிருக்கிறது!

 1. “வாழ்ந்து கெட்ட குடும்பம்” என்று ஓர் அனுபவத்தை ஏற்கனவே இந்தக் ‘கதைகளில் வராத பக்கங்களில்’ எழுதியிருந்தேன். அதில்  ஓர் ரயில் டிக்கெட் பரிசோதகரின் குடும்பம் பற்றி வரும். அவரது பிள்ளைகளில் ஒருவனான மூர்த்தி  என் வகுப்புத் தோழன்.

  அந்தக் குடும்பத் தலைவர் தம் 45 ஆவது வயதில் அகால் மரணம் அடைந்தார். அந்த திடீர் சாவும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, அதைப் பற்றி வீடு தோறும் பேச்சுகள், அதனால் சிறு வயதில் வரக்கூடிய சாவு பற்றிய பயம் கலந்த கற்பனைகள் எல்லாம் சிறுவர்களுக்கிடையிலும் உண்டு.

  தெருப் பையன்கள் கூடிக் கூடி அந்த சாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் எத்தனை மணிக்கு செத்துப் போனார் என்று ஏதோ பேச்சு வந்தது. மணி என்கிற பையன் அப்போது முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக்கொண்டு சொன்னான்:

  “அவர் செத்துப் போன போது மணி சாயந்திரம் 5 இருக்கும். நான் என் வீட்டுத் திண்ணையிலே உட்கார்ந்திருந்தேன். அவங்க வீட்டிலேர்ந்து பெரிய குரலில் எல்லாரும் அழுகிற சத்தம் கேட்டது. அப்போ எதேச்சையா நான் ஆகாயத்திலே பார்த்தேன். அவங்க வீட்டு வாசல்லேர்ந்து புகை மாதிரி ஒண்ணு வெளியே போய் ஆகாயத்திலே கிளம்பிச்சு. நேரே மேலே போய் அது ஒரு மேகமா மாறிச்சு; அந்த மேகம் அப்படியே அச்சு அசலா, செத்துப்போனவரோட முகம் போலவே இருந்துச்சு!  நான் யாரையாவது கூப்பிட்டுக் காட்டலாம்னு வீட்டுக்குள்ளே ஓடினேன். என் அண்ணன் கிச்சாவைக் கூட்டிக்கிட்டு வாசலுக்கு ஓடி வந்தா அதுக்குள்ளே அந்த மேகம் கலஞ்சு வேறு டிசைனா மாறிப் போச்சு!” என்றான்.  கேட்ட நாங்கள் எல்லாருமே நம்பினோம்!
 2. இதுவும் என் 8-9  வயதில் நடந்தது. எங்கள் கிராமத்து வீட்டுக் கொல்லைப்புறம் வேலியில் ஒரு படல் (கதவு போல் திறக்கும் முள்வேலி) இருக்கும். அதைச் சாதாரணமாய் ஆட்டிவிட்டால், ‘ஸ்ப்ரிங்க்’ போல சிறிது நேரம் ஆடிக்கொண்டே இருக்கும். காற்று பலமாக அடித்தாலும் அது அதிர்ந்துகொண்டே இருக்கும்.

  என்னைவிட 5,6 வயது மூத்த என் அண்ணனுக்கு ‘அறிவியல்’ ஆர்வம் கூடுதல். இப்படித் தானே அசைந்துகொண்டே இருக்கும் ஒன்றிலிந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனின் ஒரு ‘கண்டுபிடிப்பு’ ! ஓரு டார்ச் லைட் பல்பு, இரண்டு ஒயர்கள் வைத்து, அந்தப் படலில் சொறுகி, விளக்கு எரிகிறதா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பான்! ஒரு நாள் அவன் என்னிடம் “இன்னிக்கு லைட்டு நிஜமாவே எரிஞ்சுது!” என்றான்! கூட இருந்த என் அக்கா (என்னைவிட 3 வயது பெரியவள்) “ஆமாம்! நானும் பார்த்தேன்!” என்றாள்!

  ” எஙகே காட்டு பார்க்கலாம்?” என்றேன்.

  படலில் பல்பு ஒயரோடு தொங்கிக்கொண்டிருந்தது. “படலை அவ்வப்போது ஆட்டிவிடு; நிற்கக்கூடாது; கொஞ்சநேரம் சார்ஜ் ஆனதும் பல்பு எரியும் பாரு” என்று சொல்லிவிட்டு அவன் விளையாடப் போய்விட்டான்.

  அரை மணி கண் இமைக்காமல் பல்பையே பார்த்துக்கொண்டு படலை ஆட்டிவிட்டுக் கொண்டிருந்தேன். திரும்பிவந்து என் அக்காளிடம் சண்டை போட்டேன், “நீ ஏண்டி அவன் சொன்ன பொய்க்கு ஜால்ரா போட்டாய்?”

  “பின்னே? நான் மட்டும் அரை மணி ஆட்டிப்பாக்கலையா என்ன? நான் மட்டும் ஏமாந்தா எப்படி?” என்றாளே பார்க்கலாம்!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here