ஒரு ரயில் பயணத்தில்…

0
299

கதையில் வராத பக்கங்கள் – 15

15.   ஒரு ரயில் பயணத்தில்…

பல வருடங்களுக்கு முன், நான் ஒருமுறை சென்னையிலிருந்து விசாகபட்டினம் இரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்புதான்.

நான் வந்த பெட்டியில், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பணி புரியும் சில ஊழியர்கள் (சுமார் 15-20 பேர்) ஒரு குழுவாக கொல்கத்தாவுக்கோ எங்கோ பயணித்துக் கொண்டிருந்தார்கள். நண்பர்களெல்லாம் இரைந்த குரலில் அரட்டை, சீட்டுக்கட்டு விளையாட்டு, வாய் ஓயாமல் ஏதாவது கொறிப்பது என்று குஷியாக வந்தார்கள்.

அதில் ஒரு 45 வயதுக்காரர்; என்னவோ பள்ளிக்கூடத்தில் அடைத்து வைத்து, பின் வீட்டிலும் பெற்றோரால் ஒடுக்கப்பட்ட ஒரு பிள்ளையை வெளியில் போய் இஷ்டம் போல விளையாட விட்டால் எப்படி கத்திக் கூப்பாடு போட்டுக் குதித்து தன் சுதந்திரத்தை அனுபவிப்பானோ அப்படி ஒரு ‘குஜாலில்’ இருந்தார்! பேசாத பேச்சு இல்லை! அடுத்தடுத்து பழைய கால எம்.ஜி.ஆர், சிவாஜி தமிழ் சினிமாப் பாடல்களை, தாளத்தோடும், ஆட்டத்தோடும் அபசுவரத்தில் கத்திப் பாடிக்கொண்டிருந்தார்.

அவரது ஆட்டத்தைப் பார்த்து அவரது நண்பர்களே நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர்! பாவம்! வீட்டில் பெண்டாட்டி கெடுபிடி அதிகம் என்று நினைக்கிறேன்!

இரவு வந்தது. நண்பர்கள் வட்டம் வட்டமாக உட்கார்ந்துகொண்டு பாட்டில்களை வெளியில் எடுத்தனர். பைகளிலிருந்து மிக்ஸர்களும், மட்டன் சிக்கன் சமாசாரங்களும் வெளியே வந்தன. ‘தண்ணி’ உள்ளே போகப் போக, அந்த அன்பரின் பாட்டும் கூத்தும் மற்றப் பயணிகள் முகம் சுளிக்கும் அளவுக்கு எல்லை மீறிப் போனது. எல்லாம் அடங்கி அவர் உறங்கும்போது மணி 12 இருக்கும். பெட்டியில் பலருக்கும் அவரால் தூக்கம் கெட்டது.

மறுநாள் காலை. மணி 9 ஆகியும் ஆசாமி படுக்கையிலிருந்து எழவில்லை. நண்பர்கள் ஒரு வழியாக அவரை எழுப்பி உட்கார வைத்தனர். தள்ளாடியவாறே எழுந்து கழிவறைக்குப் போக முயன்றவர், சட்டென்று குந்தி உட்கார்ந்து குபுக்கென்று எடுத்தார் வாந்தி! நாற்றம் மூக்கை முட்டுகிறது. அப்படியே சாய்ந்து விட்டார்.

பாவம் அவர் நண்பர்கள்!

ஒரு வழியாய் அவரை மீண்டும் படுக்க வைத்தார்கள். அவர் மேலெல்லாம் கூட வாந்தி. அவரையும் துடைத்து, தரையையும் துடைத்து சுத்தப் படுத்தினார்கள் அவரது நண்பர்கள்.

இந்தக் கூத்தில், முதல் நாள் சற்று நட்புறவாய்ப் பேசிக் கொஞ்சம் பழக்கமாயிருந்தார் அவரது நண்பர் ஒருவர். என்னைப் பார்த்து சங்கடத்துடன் புன்னகைத்து, “சாரி சார்! உங்களைப் போன்றவர்களுகெல்லாம் சங்கடம் கொடுத்துவிட்டோம்” என்றார். நான் புன்னகைத்தேன்.

ஆசாமி எழுந்து தெளிவாகி ஆகாரம் உட்கொள்ள மதியம் ஆகிவிட்டது. பெட்டிப் பாம்பாக உட்கார்ந்திருந்தார் இப்போது. நான் அவரது நண்பரிடம் மெதுவான குரலில், “இப்போது பாடலாமா, ஒரு பழைய பாட்டு ….”ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன…” என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல, நண்பர் குபுக்கென்று சிரித்தார்!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here