லா ச ராவுடன் ஓர் எதிர்பாரா சந்திப்பு

0
381

கதையில் வராத பக்கங்கள் – 14

14.   லா ச ராவுடன் ஓர் எதிர்பாரா சந்திப்பு

(ஆண்டு 1994/95/96)

நான் அவரைச் சந்தித்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். ஆகவே நினைவில் சேமித்து வைத்துள்ளதை இங்கே எழுதுகிறேன்.

அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது ஒலி பெருக்கியில் ஓர் அறிவிப்பு. “பிரபல எழுத்தாளர் லா.ச.ரா. (லா.ச.ராமாமிருதம்) தற்போது இன்ன பதிப்பகத்தின் (பதிப்பகத்தின் பெயர் இப்போது நினைவில்லை) ஸ்டாலில் வருகை தந்துள்ளார். விருப்பமுள்ள வாசகர்கள் சந்திக்கலாம்; அவரது புத்தகங்கள் வாங்குவோருக்கு அவர் கையொப்பம் இட்டுத் தருவார்”.

என் ஆதரிச எழுத்தாளர் அவர்; நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்கையில்தான் முதன் முதலில் அவரது “பாற்கடல்” கதையைப் படித்து உணர்ச்சிவசப் பட்டவன். அந்த வயதிலேயே அவரது எழுத்து என்னைப் பாதித்தது. பின்னர் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து கையில் காசு புரள ஆரம்பித்தபின் தான் (25 வயதுக்குப் பின்) அவரது சிறுகதைத் தொகுப்புகளை வாங்கிப் படித்து அவரது சொல் நயத்தின், உணர்ச்சிப் பிரவாகத்தின், விந்தையான கதையமைப்புகளின், உரையாடல்களில் வரும் கொச்சையான பிராமணத் தமிழின், உரைநடையா கவிதையா என்று புரியாத வகையில் குழப்பலாய் அவர் செய்யும் வார்த்தை ஜாலங்களின் மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டேன்.

என் 19-36 வயது கால கட்டங்களில் நானும் (பத்திரிகைகளில் பிரசுரமாகும் ஓர்) ஒரு சிறுகதை எழுத்தாளனாக உருவானதற்கு அவரின் எழுத்துகள் கண்டிப்பாக ஓர் உந்துதல் கூட.

அறிவிப்பைக் கேட்டதும் அவசர அவசரமாய் அந்த புத்தக் ஸ்டால் இருக்கும் இடத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் போனேன்.

தும்பையாய் நரைத்த தலை; பறங்கிப் பழ நிறம்; தீர்க்கமான கண்கள், இறுகிய, சிரிப்புக் குறைவான ஓர் அழுத்தமான முக வாகு; புத்தி சாலித்தனத்தைக் காட்டும் மூக்கு, நெற்றி, நரைத்த புருவங்கள். வெள்ளைச் சட்டை, வேட்டி. அவரை அடையாளம் காண்பது ஒன்றும் சிரமமில்லை.

ஸ்டாலில் கூட்டமொன்றும் இல்லை. நேரே போய் வணங்கி அறிமுகம் செய்து கொண்டேன். பாற்கடல் படித்த சிறு வயதிலிருந்தே நான் அவர் ரசிகன் என்றேன். “அப்படியா?” என்றார். நறுக்குத் தெரித்தது போன்ற பேச்சு அவரது.

பிறகு அவர் எழுத்தில் நான் மிகவும் ரசித்த ஓரிரு கதைகளின் பெயரைச் சொல்லிவிட்டு, பின்னர் என்னைப் பற்றிய அறிமுகமாக , “என்னையும் ஒரு சிறுகதை எழுத்தாளன்னு சொல்லிக்கலாம்” என்றேன் அடக்கமாக. அவர் புருவத்தை உயர்த்தி, “ஏன் சொல்லிக்கணும்னு சொல்றேள்? உங்க பேரில் நம்பிக்கையில்லையா?” என்றார் அவர் பாணியில், வெடுக்கென்று. பின் “என்ன பேரில் எழுதறேள்?” என்றார்.

“சாந்தீபிகா” என்றேன்.

“ஏதோ படிச்ச பேரா இருக்கே? எதிலே எழுதினேள்?”

“கல்கி, விகடன், மங்கையர் மலர், சாவி இதிலெல்லாம் வந்திருக்கு…”

சற்று யோசித்தவர் போல், “படிச்சிருக்கலாம்; கேட்ட பேரா இருக்கு; ஆனா நினைவில்லே” என்றார்.

உடன் வந்திருந்த தம் மகனை அறிமுகப் படுத்திவைத்தார். “இவர் சிறுகதை எழுத்தாளராம்டா. சாந்தீபிகான்னு எழுதராராம்.” என்றார். அவர் மகன் நட்பாய்க் கை குலுக்கினார். (அவர் சேகரா, சப்தரிஷியா என்று இப்போது நினைவில்லை).

“சார், ஒரு புத்தகம் எடுத்துக்கிறேன்; கையெழுத்துப் போட்டுக் குடுங்கோ” என்று சொல்லி, அலமாரியை நோட்டம் விட்டு, இதுவரை என்னிடம் இல்லாத ஓர் புது சிறுகதைத் தொகுதியை எடுத்து அவரிடம் நீட்டினேன்.

அவர் அதை நோட்டம் விட்டு விட்டு, “இதுவா? இது கொஞ்சம் சுமாரான தொகுதிதான்” என்றார்!

“மத்ததெல்லாம் எங்கிட்ட அனேகமா இருக்குன்னு நினைக்கிறேன்” என்றேன்.

“எடுத்துக்குங்கோ, எடுத்துக்குங்கோ! இதுவும் விக்கணுமில்லையா?” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே கையெழுத்து போட்டுத் தந்தார். கவுண்டரில் பணம் கட்டியதும் அவரை வணங்கி விடை பெற்றேன்.

அவர் மகனும், அவர் நண்பர் ஒருவரும் என் கூடவே நடந்து வந்தனர் — வேறு ஒரு ஸ்டாலுக்குப் போவதற்காக. மிகவும் பழகிய நெடுனாள் நண்பர் போலவே மகனும் பேசிக்கொண்டே வந்தார். நானும், “உங்கப்பாவின் கதைகளிலே சுற்றி சுற்றி எப்படியோ தம் மகன்கள், மற்ற உறவுகள் பற்றிய கேரக்டர்கள் வந்துவிடுமல்லவா? அதனால் நீங்கள் எனக்கு முன்பே பரிச்சயமானவர் போலவே தோன்றுகிறது!” என்றேன்.

“வீட்டில் அவர் அப்பாவாக எப்படி? நீங்களெல்லாம் அவர் கதையைப் படித்து விமர்சிப்பீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இது.

“அப்பாவை நாங்கள் பெரிய எழுத்தாளர் என்று ஒன்றும் அதிகப் படியாய் ரசித்ததில்லை. ஏன்? கிண்டல் கூடச் செய்வோம். என் தங்கை ஒருத்தி இருக்கிறாள்; அவள் சொல்வாள்: “ஒரு சிறுகதையை அப்பிடியே பக்கம் பக்கமாய் படிச்சிண்டே போறச்சே, அடுத்த பக்கத்தைத் திருப்பினால், அங்கே கதை இருக்காது; ‘அட! போன பக்கத்திலேயே முடிஞ்சு போச்சு போலிருக்கு’ அப்படின்னு இருந்தா அதுதான் அப்பா எழுதின கதை” என்பாள்! ” என்றார்.

எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம்! மகனிடமும் விடைபெற்றேன்.

லா ராவைப் படித்து ரசிப்பது என்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அவர் எழுத்து ஓர் புதிர்; அனுபவம்; கிளர்ச்சி. அதில் மானுடம், அதன் சோகங்கள், மரணங்கள், காயங்கள், வேதனைகள், சிரிப்புகள், அற்புதங்கள், நம்பிக்கைகள் எல்லாமே இருக்கும். அதில் எப்போதும் ஓர் ஆன்மீகம் பூடகமாய் ஒளிந்திருக்கும்.

என்னாலானது என் மகளுக்கு லா ராவின் எழுத்தை அவளது இளம் வயதிலேயே அறிமுகம் செய்து வைத்தேன். அவளும் அவர் வலையில் விழுந்தாள். இன்று அவளிடம் அவர் எழுதிய எல்லாக் கதைகளின் தொகுப்பும் இருக்கிறது. நான் ஊருக்குப் போகும் சமயங்களில் மீண்டும் அவரைப் படித்து ‘ஆஹா’காரம் செய்ய முடிகிறது.

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here