என் எட்டாம் கிளாஸ் வகுப்பாசிரியர்

0
278

கதையில் வராத பக்கங்கள் – 13

13.   என் எட்டாம் கிளாஸ் வகுப்பாசிரியர்

அவர் என் எட்டாம் வகுப்பில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். அதற்கு முன்பும் பின்பும் நான் படித்த வகுப்புகளில் அவர் பாடம் எடுத்தது இல்லை.

ஆங்கிலம், கணிதம் இரண்டையும் கற்பிப்பதில் அவர் திறமை மிக்கவர் என்று பள்ளியிலேயே மாணவர்களிடையேயும் மற்ற ஆசிரியர்களிடையேயும் அவருக்குப் பெயர் இருந்தது.

அவரிடம் எட்டாம் வகுப்பில் படித்த புண்ணியத்தில்தான் என்னால் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி எழுத முடிகிறது என்பதை அடித்துச் சொல்வேன். அந்தக் கிராமத்துப் பள்ளியில், ஆங்கிலத்தைப் புரிந்து படிக்கும் திறன் மிகக் குறைவாகவே உள்ள சூழலில், ஒரு வித ‘விஞ்ஞான முறையில்’ (அதாவது சரியாக ஆங்கிலம் புரியாதவர்களும் தவறின்றி Direct speech, Indirect speech இவற்றை ஒன்றுக்கொன்று மாற்றியெழுதும்) ஒரு ‘டெக்னிக்’கை பையன்களின் மண்டையில் ஏற்றிவிடுவார்!

கணக்கில், கழித்தலை பெரிய எண்ணிலிருந்து சின்ன எண்ணைக் கழிப்பது, கடன் வாங்கிக் கழிப்பது இவற்றுக்குப் பதில், சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணுக்குக் ‘கூட்டல்’ முறையில் தவறின்றிச் செய்யும் முறை ஒன்றையும் மாணவர்கள் தலையில் திணித்து விடுவார். (கவனிக்க: 2 ஆம் வகுப்பில் கழித்தல் படிப்போம்; அதை எட்டாம் வகுப்பில் முறை மாற்றிச் சொல்லித் தந்து தவறைக் குறைப்பார்).

அவரைத் தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாகவே தெரியும். வீட்டில் அவர் தம் மனைவியுடம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மனைவிக்குப் பயந்தவர் என்றே தோன்றும். வீட்டில் அவர் மனைவியிடம் பேசும் போது பதற்றத்தில் வாய் குளறத்தான் பேசுவார்.

ஆனால், வகுப்பில் அவர் வேறு மனிதராய் இருப்பார்! கம்பீரமாக, நிறைய சுய நம்பிக்கையுடன் தெளிவாகப் பேசுவார்! மாணவர்கள் பெரிதும் மதிக்கும் ஆசிரியராய் இருந்தார் அவர்.

அவர் பல விதங்களில் வித்தியாசமான ஆசிரியர்.

அவர் வகுப்பில் நுழையும் போது, அக்கால வழக்கப் படி எல்லா மாணவர்களும் எழுந்து நின்று ஆளாளுக்கு விதவிதமான சுருதிகளில் (கத்தல்களில்) “வணக்கம் ஐயா” என்று சொல்லுவோம். முதல் ஓரிரு நாட்கள் போன பின் அவர், ” எதுக்காக இந்தக் கூப்பாடு? நான் வரும்போது, எனக்கு மரியாதை செய்யணும்னு தோனினால், அமைதியாக எழுந்து நில்லுங்கள் போதும்; அட, எதுக்கு எழுந்து நிக்கணும்னு தோனினாலும் பரவாயில்லே. உட்கார்ந்தே இருங்கள்; இந்த சத்தம் மட்டும் வேண்டாம்!” என்பார்!

அவர் வகுப்பு எடுக்கும் போது யாருக்காவது கழிவறை போகவேண்டும் என்று இருந்தால் அக்கால வழக்கப்படி எழுந்து ‘ஒருவிரல், இருவிரல்’ காண்பிப்போம்! “எனக்குப் பாடம் எடுக்கும்போது தொந்தரவு பிடிக்காது; உனக்கும் அடக்க முடியாது. வந்தால் நீயே எழுந்து போ; முடித்துவிட்டு நீயே திரும்ப உள்ளே வா; என் அனுமதியெல்லாம் தேவையில்லை” என்பார். அது வெறும் பேச்சல்ல. அப்படியே நடக்க உண்மையிலேயே அனுமதிப்பார்!

சில சமயங்களில் அடுத்த வகுப்புப் பையன்/பெண் இந்த வகுப்பில் படிக்கும் தன் தோழன்/ தோழியிடம் அவசரத்துக்கு ஏதோ நோட்டு, புத்தகம், ‘ஜாமெட்ரி பாக்ஸ்’ கடன் வாங்க வகுப்பு வாசலில் வந்து. “சார், கொஞ்சம், கிருஷ்ணமூர்த்தி வேணும் சார்” என்று நிற்பார்கள். பாதி வகுப்பில் இது ஒரு இடைஞ்சல். இதற்கு அவர் சொல்லும் வழி: உன் பக்கத்து வகுப்பு நண்பனின் தலை உன்னை நாடி வாசலில் தெரிந்தால், நீயே எழுந்து போ; அவனுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு என் அனுமதிக்காகக் காத்திராமல் திரும்ப உள்ளே வா” — அவ்வளவுதான்!

“லீவு எடுக்க வேண்டுமா? பேசாமல் எடுத்துக்கொள். லீவு லெட்டரெல்லாம் எதுக்கு? ஒரு காகிதம் வீண்— அவ்வளவே. கிளாஸ் டெஸ்ட்டுக்கு எதற்கு நல்ல காகிதத்தை வீணடிக்கிறாய்? எப்போதும் பையில் கொஞ்சம் பழைய ‘ஒரு பக்கக் காகிதங்களை’ வைத்துக் கொள். அதில் எனக்கு எழுதிக் கொடுத்தாலே போதும்.” — சிக்கனச் செம்மல்!

கொடி நாள், ஆண்டு விழா, வகுப்பாசிரியர் சிறப்பு விழா, அது இது என்று மாணவர்களிடம் வசூலிப்பது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது! அப்படி யாரேனும் வசூலுக்கு வந்தால் கடிந்து கொள்வார். ஆனாலும் கொடி நாள் வசூல் என்பது தலைமை ஆசிரியரே தலையில் கட்டுவது. தப்பிக்க முடியாது. அதனால் வேண்டா வெறுப்பாக கொடிகளை மாணவர்களிடம் தந்து “அப்பா அம்மாவை நச்சரித்துக் காசு வாங்காதீங்க; பெருமைக்கு “நான் அஞ்சு கொடி வாங்கினேன்; நீ எவ்வளவு வான்கினே?” என்றெல்லாம் உங்களுக்குள்ளேயே கிளப்பிவிடாதீங்க. ஆளுக்கு ஒரு கொடி, வாங்கிக்குங்க; அதுவே போதும்” என்பார்!

அந்த வருடம், கொடி நாள் சமயத்தில் அவர் என்னைக் கூப்பிட்டு, கொடியைக் கொடுத்து, “இந்தா, உங்க அப்பாவிடமிருந்து நாளைக்கு காசு வாங்கி வந்து கொடுத்திடு!” என்று எனக்கும் ஒரு கொடியைத் தந்தார். வகுப்பெல்லாம் கொல்லென்று சிரித்தது. நானும். “எனக்கு கொடி வேண்டாம் சார்; அப்பா காசு கேட்டா தரமாட்டார்!” என்றேன். மீண்டும் வகுப்பெல்லாம் ஒரே சிரிப்பு!

உடனே அவர், “ஏன் தரமாட்டார்? தருவார், தருவார்!” என்று சொல்லிப் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து கால் ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்து நோட்டில் என் பெயரை எழுதி வசூல் கணக்கும் எழுதிக்கொண்டார்!

எப்படி எனக்கு அந்த ஆசிரியரைத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்று ஆரம்பத்தில் சொன்னேன் என்று இப்போது விளங்குகிறதா?!

அவர் பெயர் வி .சக்ரவர்த்தி.

அவரைப் பற்றி எனக்கு மூத்த சகோதரி சொன்ன ஒரு சம்பவத்தோடு இந்த நீண்ட பதிவை  நிறைவு செய்கிறேன்:

என் கடைசி சகோதரி திருமணமாகி ஒரு சிறு நகரத்தில் வாழ்ந்துவந்தாள். ஓய்வு பெற்றபின் என் தந்தை அவள் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தார்.

“அப்பா, இந்த ஃப்ளாட்டுகளில் மேல் மாடியில் ஒரு டாக்டர் குடும்பம் இருக்கிறது; எப்படியோ பேசிப் பழகியதில், அவரும் நம் ஊரில், நம் ஸ்கூலில் படித்தவர் என்று தெரிய வந்தது; யாரு என்ன, என்று விசாரித்தால் அவர் உன்னிடம் படித்த மாணவராம்; நீ தான் என் அப்பா என்று தெரிந்ததும் ஏக மரியாதை; நீ வந்தால் சொல்லணும்; உன்னை வந்து பார்க்கணும் என்று சொல்லியிருக்கிறார்” என்றாளாம் என் அக்கா. “எதுக்கு இதெல்லாம்?” என்றாராம் என் அப்பா.

ஆனால், அன்று மாலையே, அந்த டாக்டர் கையில் ஒரு கூடை பழங்களுடன் தன் மனைவியையும் கூட்டிகொண்டு வந்து அப்பாவை விழுந்து வணங்கினாராம். “சார், என்னை ஞாபகம் இருக்கா? சுந்தரேசன்; ஏழாம் கிளாஸ் எட்டாம் கிளாஸ் உங்ககிட்டே படிச்சேன்; நான் இன்னிக்கி ஒரு டாக்டரா வந்திருக்கேன்னா அன்னிக்கி நீங்க போட்டுத் தந்த அடிப்படை, உங்க பிச்சை” என்றாராம்.

அதற்கு அப்பா, “தப்பா நெனச்சுக்காதேப்பா; எனக்கு எந்த ஒரு ஸ்டூடெண்டையும் பற்றி தனி ஞாபகம் எதுவும் கிடையாது. எல்லாப் பசங்களுக்கும் பொதுவா ஒரே மாதிரிதான் பாடம் சொல்லித் தந்தேன்; உன் வெற்றிக்கு நான் காரணம்னா, பின்னே ஒவ்வொரு கிளாஸ்லையும் படிக்காம ஃபெயிலாப் போன பசங்களுக்கும் நான் தான் காரணம்! இதெல்லாம் பெரிய வார்த்தை. நீ இன்னிக்கு டாக்டர்னா, அது உன் முயற்சி, உன் உழைப்பு. அதுதான் நெஜம்” என்று சொல்லிவிட்டாராம்!

அவர் எப்போதும் எதார்த்தவாதியாகவே இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here