ஐயோ, அதை சத்தமா சொல்லிட்டேனா?

0
298

கதையில்  வராத பக்கங்கள் – 12

12.  “ஐயோ, அதை சத்தமா சொல்லிட்டேனா?”

 இப்போது நினைத்துக்கொண்டாலும் தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும் தருணம் அது!

நான் சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் போயிருந்தன. ஒரு புதிய வாடிக்கையாளரைச் சந்திக்க அழைப்பின் பேரில் போயிருந்தேன். ஓரளவு பெரிய கம்பெனியின் பொது மேலாளர் அவர். அவரது தொழில் உற்பத்தியைக் கூட்டுவதற்கு, புதிதாய் வடிவமைக்கப்பட்ட சில சிறப்பு எந்திரங்கள் அவருக்குத் தேவையாயிருந்தன.

நான் வெறும் வடிவமைப்பு மட்டும் செய்யும் வல்லுநர் என்பதால் அது மட்டும் செய்து தர முடியும் என்றேன், அவரோ, அந்த இயந்திரங்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்த கம்பெனிக்காரரோடு நான் கூட்டாக வேலை செய்து உண்டாக்கிக் கொடுத்தால் ஆலோசிக்கலாம் என்கிறார்.

எனக்கு முன்பே அறிமுகமாகி, அந்த வடிவமைப்பில் இயந்திரங்கள் செய்த அனுபவமுள்ள ஒரு தொழிற்சாலையின் நிர்வாகியோடு நான் பேசிவிட்டு, அவரை மறுநாள் மீண்டும் வந்து சந்திப்பதாகச் சொன்னேன். அவரும் காலையில் சந்திக்க நேரம் கொடுத்தார்.

மறுநாள், வீட்டிலிருந்து 1 மணிப் பிரயாணத்துக்குப் பின், அதே தொழிற்பேட்டையில் இருந்த அந்த மற்றொரு தொழிற்சாலையின் இயக்குனர் அலுவலகத்திலிருந்து, “நாங்கள் இருவரும் சந்திக்க வரலாமா?” என்று அவரிடம் (ஒரு முன்னறிவிப்பாக) தொலை பேசியில் கேட்டேன்.

அவர் அப்போது உத்சாகம் காட்டவில்லை; தாம் அப்போது ‘பிஸி’யாக இருப்பதாகவும் மற்றோரு சமயம் பார்க்கலாம் என்றும் சொன்னார். “நீங்கள் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் முன்னரே கொடுத்திருந்ததால் தான் நான் இந்த கம்பெனிக்காரரின் அப்பாயிண்ட்மெண்டும் முன்கூட்டி வாங்கிக்கொண்டு உங்களை சந்திக்க இருவருமாய் வருவதற்குத் தயாராகக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்” என்றேன். நான் அப்படி அழுத்திச் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை போலும். (காலையில் சந்திப்பதற்கு பதிலாக) மதியம் வேண்டுமானால் பார்க்கலாம் என்றார் சற்றே எரிச்சலாக.

நான் “சற்று இருங்கள், நான் இவருடைய வசதியைத் தெரிந்துகொண்டு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, (தொலை பேசியின் வாயை மூடியதாய் நினைத்துக்கொண்டு அதன் காதுப் பகுதியை மூடியவாறே!) எனது பழைய வாடிக்கையாளரான கம்பெனி மேளாளரிடம், “சார்! அப்போ அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துட்டு இப்போ அலட்டராரு! மத்தியானத்துக்கு மேலே தான் சந்திக்க முடியுமாம்; உங்களுக்கு இதில் சிரமம் உண்டா?” என்றேன். அவர், “பரவாயில்லை; நாம் மதியம் போய்ச் சந்திக்கலாம்” என்றார்.

பின் புதிய வாடிக்கையாளரிடம் தொடர்ந்து பேச தொலைபேசியில், “சார்..” என்றதும் அவர், ” ஹலோ, “நான் ஒண்ணும் அலட்டவில்லை! உண்மையிலேயே நான் ரொம்ப பிஸி…”என்றார் ரோசத்தோடு! அசடு வழிய மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்!

பி,கு.:

மதியம் போய்ச் சந்தித்தோம்; ஆசாமி, இறுக்கமாய்த்தான் இருந்தார்; நேரில் மீண்டும் ஒருமுறை மன்னிப்பைக் கோரினேன். கடைசியில் வியாபாரம் ஒன்றும் தகையவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here