இவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது

0
289

கதையில் வராத பக்கங்கள் – 11

11.   “இவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது”

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் எனது நெருங்கிய உறவினர்களாகிய அந்த முதிர்ந்த தம்பதியினரை அவர்கள் பல வருடங்களாக வாழும் ஒரு சிறு நகரத்தில் போய்ப் பார்த்தேன். அவர்களோடு மகிழ்ச்சி நிறைந்த இரண்டு நாட்களைச் செலவழித்தேன்.

கணவருக்கு 83 வயது; மனைவிக்கு 73 வயது. அவர்களுக்கு இறைவன் பிள்ளைபேற்றைத் தரவில்லை. முதிர்ந்த வயதில், அந்த வயதுக்கே உரிய தளர்ச்சிகளோடும், அவ்வப்போது வரும் நோய்களோடும்,  தனியே, இறைவனின் கருணையைத் துணையாகக் கொண்டு, ஒரு சிறு அடுக்கக வாடகை வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இருவருமே அன்பு நிறை தம்பதியினர். அவர்களின் அன்பு அவர்களைச் சுற்றி வீசிக்கொண்டிருக்கும் காற்றிலும் இருப்பதால் அங்கே செல்பவர்களுக்கும் அந்த அன்பின் குளுமை கிடைக்கும்.

என் நாக்குக்கு வக்கணையாக வேளாவேளைக்கு அந்தப் பெண்மணி மகிழ்ச்சியுடன் எனக்கு சமைத்துப்போட்டார் என்பதைச் சொல்லவே அவசியமில்லை!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால், வாயோயாமல் பேசிக்கொண்டிருந்தோம். சம்பவங்களுக்கு மேல் சம்பவங்களாக அவர்கள் தமது வாழ்வில் நடந்துகொண்டிருப்பவைகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களோடு தொடர்பில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் இவர்களைப்பற்றியெல்லாம் — அவர்கள் பார்வையில் எல்லாருமே அத்தனை நல்லவர்கள்; தேவையரிந்து உதவிக்கு ஓடி வருபவர்கள்; பொருளாகவும், பணமாகவும், உடம்பால் செய்யும் சகாயமாகவும், மனதளவில் அன்பும் ஆதரவும் தருபவர்களுமாகவே அவர்கள் சொன்ன எல்லாருமே இருந்தார்கள்!

அது எப்படி? பொல்லாதவர்கள், விஷமக்காரர்கள், சுய நலமிகள் இப்படிப்பட்ட மனிதர்களை ஏன் இவர்கள் காணவில்லை?

நான் யோசித்ததில் எனக்குக் கிடைத்த விடை இதுதான்: “‘அவர்களின் இதயத்தில் நலலதே எப்போதும் இருப்பதால், அதன் அதிர்வுகள் அவர்களோடு தொடர்புகொள்பவர்கள் இதயத்திலும் ஒத்த அதிர்வை ஏற்படுத்தி, அவர்களுள்ளும் நன்மையைத் துளும்பச் செய்கிறது’ என்பது தான் அது.

இந்தத் தம்பதியினரோடு எனக்குள்ள உறவும் பழக்கமும் என் நினைவில் நிற்பவைகளை மட்டும் வைத்துக் கணக்குப்பார்த்தால் சுமார் 57 ஆண்டுகளாய் இருப்பது.

எனது நினைவில் தங்கியுள்ள மிகமிகப் பழமையான நினைவு இதுதான்: என் ஐந்தாவது வயதில், என் இந்த உறவுப் பெண்மணியுடன் (அப்போது அவள் 16 வயதுப் பெண்; அப்போது தான் திருமணமாகி இருந்தது) ஒரு மாட்டு வண்டியில், ஒரு கூட்டுக்குடும்பத்தில் முதன் முதலில் அவளது குடித்தனத்தை வைப்பதற்காக அவளது பெற்றோர்களுடன் சேர்ந்து நானும் அவர்களது கிராமத்து வீட்டுக்குப் போயிருந்த முதல் நினைவு. அதற்குப் பின், ஆண்டாண்டுகளாக, அடுக்கடுக்காக அவர்களைப் பற்றி எத்தனையோ மறக்கமுடியாத நினைவுப் பதிவுகள்.

அவள் பிறந்த வீட்டில் வறுமை என்று இல்லாவிட்டாலும், பெரும் சம்சாரத்திலுள்ள பற்றாக்குறைகள் எப்போதுமே இருந்தன. அவளுக்கு, சின்ன வயது வாழ்க்கை சந்தோஷமாகவே இல்லை. அவளை விட மூத்த சகோதரிகள் அவளோடு எப்போதும் பொறாமை கொண்டிருந்தார்கள்; அவளை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார்கள்; அதிகாரம் செய்தார்கள்; ஒடுக்கினார்கள்.

‘எப்போதடா கல்யாணம் செய்துகொண்டு இந்த வீட்டை விட்டுத் தப்பித்துப்போவோம் என்றே எனக்கு அப்போதெல்லாம் தோன்றும்!’ — என்று அவள் தன் பழைய கால நினைவுகளை என்னோடு பிற்காலத்தில் பகிர்ந்துகொண்டதுண்டு.

ஆனால், அவளது துரதிருஷ்டம் அவளைத் தொடர்ந்தது. அவள் போன புகுந்த வீடும் ஒன்றும் வசதி வாய்ப்பாய் இல்லை. உண்மையில், போதாக் குறையிலிருந்து வறுமைக்குத் தள்ளப்பட்டதாகவே அவளது திருமண வாழ்க்கை அமைந்துவிட்டது. அவளது கணவருக்கு உண்மையில் உருப்படியான உத்தியோகம் இல்லை. அதனால், கூட்டுக்குடும்பமாய் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. பெரிய சம்சாரம். பரம்பரைச் சொத்து முழுவதையுமே அனேகமாக் குந்தித் தின்றே தீர்த்துவிட்டிருந்தார்கள் — வெளியே அதிகம் தெரியாமல்! கூட்டுக் குடும்பத்தில், போதாக்குறைக்கு ஒரு மன நிலை பாதித்த பெண்மணியும் இருந்தார்!

ஆனால், நமது பெண்மணிக்கு ஒரு மிகப் பெரும் விஷயம் புகுந்த வீட்டில் கிடைத்தது: அது, அவள் மீது அவர்கள் எல்லாரும் காட்டிய, அன்பு, அனுசரணை, முக்கியத்துவம்! அவளை தங்களில் ஒருவராக சுவாதீனமாக ஏற்றுக்கொண்டார்கள்; கூட்டுக் குடித்தனக் குழந்தைகள் எல்லாம் அவளிடம் ஒட்டிக்கொண்டன.

பிறந்த வீட்டில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் இங்கு (வறுமையோடு கூடவே) கிடைத்ததிலேயே அவள் திருப்தியுற்றாள், குடும்பத்திற்காக சலிக்காமல் உழைத்தாள்– சமைத்தாள்; வீட்டைப் பெருக்கினாள்; நிர்வாகம் செய்தாள்; வயதானவர்களுக்கு சேவை செய்தாள்.

பெருங் குடும்பத்தில், சம்பாதிப்போர் குறைவு, சம்பாத்தியமும் குறைவு; நிறைக்க வேண்டிய வயிறுகளோ கூடுதல். விளைவு? அவள் சீதனமாய்க் கொண்டுவந்த நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் அடகுக்குப் போயின; பின்னர் சத்தமில்லாமல் விற்பனைக்கும் போய்விட்டன! அவள், அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, தன் வேதனைகளையெல்லாம் முழுங்கிக்கொண்டு தியாக வாழ்வைத் தொடர்ந்து வாழ்ந்தாள்!

பின் இறையருளால் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவள் புகுந்த வீட்டுப் பெரியவர் ஒருவர் மிக முயன்று அவள் கணவனுக்குப் பக்கத்தில் இருந்த சிறு நகரில் ஒரு வேலை வாங்கித் தந்தார்; தம்பதிகளைக் கட்டாயமாகக் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரித்து, அந்த சிறு நகரில் தனிக்குடித்தனம் வைக்க ஏற்பாடு செய்தார்.

ஒருவழியாகத் தம்பதியினர் தப்பித்து, கையில் அனேகமாக ஒன்றும் இல்லாமல், ஒற்றை அறைக் குடித்தனம் ஒன்றை ஒரு பெரும் வீட்டில் ஒண்டு குடித்தனமாகத் தொடங்கினார்கள். அந்த ஒற்றை அறையின் ஒரு மூலை தான் சமையலுக்கும்!

இப்போது மூன்று வேளை சாப்பிட முடிந்தது. ஆனாலும், வாடகை கொடுப்பதும் சிரமம் தான் என்கிற நிலைமை. அந்த சமயத்தில் அதே ஊரில் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்த அவள் கணவனின் உறவினர், தமது வீட்டில் பின் பகுதியில் ஒரு ஒண்டுக்குடித்தனம் வைக்க வழி உண்டாக்கித் தம்பதியினருக்கு அங்கே இடமளித்தனர். அந்த வீட்டில் அவர்கள் வரவேற்கப் படவில்லை, ஆனால் ஒரு மனித நேய உதவியாக (அலட்சியத்தோடு கூடியேயாயினும்) இது செய்யப்பட்டது. அதற்கு நன்றியாக நம் பெண்மணி அவர்கள் வீட்டிலும் போய் வீட்டு வேலைகளில் உதவினாள்; நாள் கிழமைகளில், வீட்டுத் திருமணங்களில் மாடாய் உழைத்தாள்.

அந்த உறவினரின் பெண்கள் இந்தத் தம்பதியினரோடு பிரியமாய் நெருங்கிப் பழகினர். பின் கல்யாணம் செய்து கொண்டு போயினர்; அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்தன; அந்தக் குழந்தைகளைத் தம்பதியினர் கொஞ்சிச் சீராட்டினர். அவை சிறு பிள்ளைகளாய் வளர்ந்து இவர்கள் குடித்தனத்தில் வந்து விளையாடும்; அரட்டை அடிக்கும்; புராணக் கதைகள் சொல்லக் கேட்கும்; தம் பாட்டி வீட்டில் சோறு போட நேரம் ஆனால் இவர்களோடு உட்கார்ந்து சாப்பிடும்; அது வெறும் ‘ரசம் சாதமாக’, தொட்டுக்கொள்ள ஒரு சுட்ட அப்பளமாக இருக்கட்டுமே! அவர்களது அன்பில் அது தேவாமிருதமாய் ருசிக்கும்; பணம் படைத்த அந்தக் குழந்தைகளுக்கு இங்கே கிடைக்கும் அற்பமான வறுத்த கடலை, வெல்லம் கூடத் தின்னத் தின்ன ஆனந்தம் தான்!

இப்படி சில வருடங்கள் ஓடிய பிறகு, கணவனின் வருவாய் சிறிது சிறிதாகக் கூடியது. இப்போது, கொஞ்சம் பெரிதாய், ஒரு சமையற்கட்டு, கூடவே வசிக்க ஒரு முன் அறை உள்ள வேறு ஒரு போர்ஷனுக்கு, கூடுதல் வாடகை தந்து குடிபோக முடிந்தது. சிறு நகரத்தில் அவர்கள் இப்படிப் பல முறை குடித்தனம் மாறினர்.

தனியாய்ப் போனதும், கணவரது வயதான தாயாரை மற்ற பிள்ளைகள் பார்த்துக்கொள்வது சிரமமாகிவிட்டதால், அவரும் இவர்களோடு வந்து தங்கி விட்டார்! நல்ல காலமாக, அவருக்கு, அவரது கணவர் இறந்த பிறகும் அரசாங்கப் பென்ஷனாக ஒரு சிறு தொகை வந்து கொண்டிருந்தது; மறுமகளுடன் ஒட்டுதலாய்ப் பழகும் அரிய குணமும் இருந்தது.

தன் வயதான மாமியாரைப் பிரியத்துடன் பார்த்துக்கொண்டார் நம் பெண்மணி. மாமியார் முதிர்ந்த வயதில் (கிட்டத்தட்ட 95 வயது!) காலமானார். அதுவரை — சுமார் 15 ஆண்டுகள் இவர்கள்தான் பொறுப்புடன் கவனித்துக்கொண்டார்கள்!

இத்தனை ஆண்டுகளில் ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறையேனும் நான் அவர்கள் வீட்டில் போய் ஒரிரு நாட்கள் தங்கியிருக்கிறேன். அவர்கள் இருந்த எல்லா ஒண்டு குடித்தனங்களுக்கும் போயிருக்கிறேன். போன இடங்களிலெல்லாம் உறவினர்களின் சிறு பிள்ளைகளோ, அல்லது அக்கம் பக்கம் உள்ள குடித்தனங்களிலுள்ள சிறு பிள்ளைகளோ சகஜமாக அவர்கள் வீட்டில் வந்து விளையாடுவார்கள். ரசம் சாதமோ, கூட்டு சாதமோ கிடைப்பதை விரும்பிச் சாப்பிடுவார்கள்; அரட்டை அடிப்பார்கள்.

காலம் அதன் போக்கில் ஓடியது; வருடங்கள் கடந்தன. சிறு பிள்ளைகள் வளர்ந்து, ஊர் மாறி, பெரிய படிப்பெல்லாம் படித்தார்கள்; சிலர் வெளிநாடுகளில் வேலைக்குப் போனார்கள். திருமணம் செய்து கொண்டார்கள்.

“நாங்கள் மேட்டுத் தெருவில் குடியிருந்த காலத்தில், கேசவன் என்கிற பையன், அவன் அக்காவுடன் விளையாட வருவான்; ஒருவேளை, நீ கூட எங்களைப் பார்க்க வரும்போது அந்தக் காலத்தில் பார்த்திருக்கலாம்; ஒல்லியாகத் துருதுருவென்று இருப்பான்…” என்றாள் பேச்சுவாக்கில் பெண்மணி என்னிடம்.

“எனக்கு நினைவில்லை; ஒரு வேளை பார்த்திருப்பேனாயிருக்கும்; அவனுக்கு என்ன?” என்று கேட்டேன்.

“மூணு வருஷம் முன்பு, திடீரென்று ஒரு இளைஞன், ஆறடி உயரம் இருந்தான்; இங்கு இந்த வீட்டுக்கு திடீரென்று வந்தான்; “மாமீ! நான் யாரு தெரியறதா? சொல்லுங்கோ பார்ப்போம்” என்கிறான்….”

“யாரு? கேசவனா?”

“ஆமாண்டா! அதேதான்! நான் முழிப்பதைப் பார்த்துவிட்டு, “மாமீ! தெரியலையா? நான் தான் கேசவன்! நானும் என் அக்கா சீதாவும் உங்கள் வீட்டில் வந்து விளையாடுவோமே? மாமா சாப்பிட உட்கார்ந்தால் நாங்களும் கூட உட்கார்ந்துகொண்டு விடுவோமே?” என்றான்! நான் வாயைப் பிளந்து, “டேய்! கேசவா! நீயாடா? என்னடா இப்படி வளர்ந்திருக்கே? படவா? எப்பிடிடா எங்களை ஞாபகம் வெச்சிண்டிருக்கே?…” என்றேன்!”

“மேட்டுத் தெரு வீட்டுக்கப்புறம், நீங்கள் 2,3 வீடு மாறிவிடவில்லையோ? எப்படிக் கண்டுபிடித்து வந்தான்?” கேட்டேன்.

“அதான் பாரேன் ஆச்சரியம்! இங்கே அவனுடைய உறவுக்காரர் கல்யாணம் ஒன்றிற்கு நான் போயிருந்தேன்; அந்தக் கல்யாண வீடியோவை, அவன் அமெரிக்காவில் பார்த்தானாம்! அதில் நான் ஆரதி எடுப்பதைப் பார்த்து விட்டு, “அட நம்ப மாமீ!” என்று சொன்னானாம்; ராத்திரி பூரா, எங்க நெனைப்பு தானாம்; இங்கே வந்து எங்கள் கூட தாயக்கட்டம் விளையாடியது, ரசம் சாதம், சுட்ட அப்பளம் சாப்பிட்டது, பகாசுரன் கதை கேட்டது என்றெல்லாம் நினைப்பு சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருந்ததாம்; அதான் இந்தியா வரும் போது தெரிந்தவர்களிடம் விசாரித்துக்கோண்டு திடீரென்று வந்து நின்றுவிட்டான்!”

பெண்மணி, வீட்டிலிருந்த இரண்டு புதிய பிளாஸ்டிக் நாற்காலிகளை எனக்குச் சுட்டிக் காண்பித்து, “முன்பு ஒரு பழைய பிளாஸ்டிக் நாற்காலிதான் எங்களிடம் இருந்தது; கேசவன் அதில் தொப்பென்று உட்கார்ந்ததில் கால் சற்று ஒடிந்துவிட்டது; உடனே அவனே பக்கத்தில் கடைத்தெருவுக்குப் போனான்; ரெண்டு நாற்காலியை வாங்கித் தானே தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டுவந்து போட்டுவிட்டான்! அமெரிக்காவில் எத்தனை பெரிய உத்தியோகத்தில் இருக்கிறான் தெரியுமா, ஆனாலும் எவ்வளவு எளிமை! ஆச்சரியம்தான்! எங்கள் கூட இரண்டு நாள் தங்கினான்; மாமீ, குணுக்கு செய்து தாங்கோ; அந்தக்காலத்தில் செய்வீர்களே, அந்த அரிசி கொழுக்கட்டை செய்யுங்கோ என்று தனக்குப் பிடித்ததைச் செய்யச்சொல்லிச் சாப்பிட்டான்!”

“அப்புறம்?” நான் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

” கிளம்பு முன் கட்டாயப் படுத்தி இவரது பாங்க் அக்கவுண்ட் நம்பரை வாங்கிக்கொண்டு போனான்; இப்போது வருடம் இரண்டு முறையாவது பெரிய தொகை ஒன்று எங்கள் கணக்கில் போட்டுவிடுகிறான்; ‘வேண்டாமடா கேசவா’ என்றால் கேட்கவே மாட்டேன் என்கிறான்!” என்றாள்.

தொடர்ந்து, “தன் அக்காளிடம் தான் வந்து போன கதையெல்லாம் சொல்லியிருக்கிறான்! அவள் பெங்களூரில் பெரும் பணக்காரி; காரும் பங்களாவுமாக இருக்கிறாள். அவள் அடுத்த இரண்டாவது மாசம் எங்களைப் பார்க்க ஓடி வந்துவிட்டாள்! அத்தனை ஒட்டுதலாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவளும் இப்போ வருஷா வருஷம் எங்களுக்குப் பணம் அனுப்ப ஆரம்பித்துவிட்டாள்! என்ன தடுத்தாலும் சரி, கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்! “ஏராளமாய் பணம் காசு வரது; நாங்கள் வெட்டி செலவு செய்யும் பணத்தைக் கணக்கு போட்டால், இதெல்லாம் ஒண்ணுமே இல்லை மாமி, நீங்க சும்மா வாயை மூடிண்டு இருங்கோ!” என்று அதட்டுகிறார்கள்!எத்தனை தங்கமான குழந்தைகள் பாரு!”

இப்படி நான் அவர்களிடம் இன்னும் எத்தனையோ நல்லவர்களின் கதையைக் கேட்டேன். அதில் அவர்களது டாக்டர் கதையும் ஒன்று. அவர் அவ்வூரிலேயே மிகவும் பெயர் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர். பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்த அவர், தமது கடும் உழைப்பினால் முன்னுக்கு வந்தவர். பெரிய ஆஸ்பத்திரியில், எப்போதோ இவர்கள் அவரிடம் வைத்தியத்துக்குப் போனபோது பரிச்சயம் ஏற்பட்டு விட்டது. கிழவருக்கு அவசியம் செய்ய வேண்டி வந்த ஒரு அறுவை சிகிச்சை அவர் தான் செய்தாராம். அப்படித்தான் பழக்கம்.

பின்னர் அவர் இவர்களிடம் வாங்கிக்கொள்ளும் ‘பீஸ்’ என்ன தெரியுமா? மாமி செய்யும் இட்டலி, மிளகாய்ப்பொடி, வடகம், மாவடு இவைகள் தானாம்! குறுகலான தெருவொன்றில் இவர்கள் குடியிருந்தபோது, எப்படியோ அதில் கார் ஓட்டிக்கொண்டு வந்து வாசலில் ஹாரன் அடிப்பாராம். இவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள், டானிக்குகள் கொடுத்துவிட்டு, இவர்கள் வீட்டில் செய்த தோசை, சட்டினியைப் பொட்டலம் கட்டி எடுத்துக்கொண்டு பிளாஸ்கில் அவருக்கு உயிரான ‘டிகாக்ஷன் காப்பி’யையும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போவாராம்!

அந்த டாக்டர் ஒருமுறை ‘ஹார்ட் அட்டாக்’ வந்து, இவர்கள் வீட்டுக்கு அருகிலிருந்த மருத்துவமனையில் சேக்கப்பட்டு ICU இல் இருந்த போது, நம் முதிய தம்பதியினர் அவருக்குக் கஞ்சி, ஹார்லிக்ஸ், காப்பி, இட்டலி எல்லாம் வேளாவேளைக்குச் செய்து கொண்டு போய்க் கொடுத்து அவர் தேறி வீடும் திரும்பும் வரை கவனித்துக்கொண்டார்களாம்! அவர் இப்போது உயிரோடில்லை என்று கண்கலங்க அவரது நல்ல குணங்களைப் பாராட்டிச் சொன்னார்கள்!

இரண்டு மூன்று மாதங்கள் முன்பு கிழவருக்கு உடம்பு சரியில்லாமல் போய் மருத்துவமனையில் சேர்க்கும் படி ஆகிவிட்டது. அடுக்ககத்தில் உடன் குடியிருந்தவர்கள் துணைக்கு வந்து சேர்த்து விட்டார்களாம். அதே சமயத்தில் சென்னையிலிருந்து எங்களது மற்றொரு உறவினர் ஏதோ சொந்தக் காரியமாய் இவர்கள் ஊருக்கு வந்து, இவர்கள் வீட்டிற்கு வந்த போது தம்பதிகள் மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப்பட்டாராம்; உடனே அங்கே வந்தாராம். தாம் வந்த வேலையை விட்டு, மருத்துவமனையில் இரவு துணைக்குப் படுக்க, மற்ற உதவிகள் செய்ய உடன் தங்கி விட்டாராம். 3 நாட்களில் குணமாகி வீடு திரும்புகையில் அந்த உறவினரே ஆஸ்பத்திரி செலவு எல்லாவற்றையும் கட்டி விட்டாராம்! “அப்பாடி! எத்தனை நல்ல மனசு பாரு!” என்று உருகினார்கள் தம்பதியினர்.

இப்படி மேலும் மேலும் சம்பவங்கள்!

கிழவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்: “பகவான், எத்தனை கிருபையோடு எப்படி எங்களைப் பாத்துக்கிறான் பாரு! பிள்ளை குட்டி பெத்தவர்களுக்குக் கூட இத்தனை பாக்கியம் கிடைக்காது! எங்கள் வாழ்க்கையில் தரித்திரம், பணக் கஷ்டம் எல்லாம் போயே போயாச்சு! இத்தனை நல்ல மனசு உள்ளவர்கள் புண்ணியத்தில் இப்போ தாராளமாய் வசதியாய் இருக்கோம்! ஒரு குறைவும் இல்லை! பாரு, நம் முரளியும் (எங்களது மற்றொரு உறவினன்) இப்போது டிரான்ஸ்வர் ஆகி இந்த ஊருக்கே திரும்பி வந்துவிட்டான்! 8-10 வருஷம் முன்னாடி அவன் இங்கே இந்த ஊரிலேயே இருந்தபோது அவன் இருந்தது எங்களுக்கு பெரிய பலமாய் இருந்தது; எவ்வளவு உதவியாய் இருப்பான், உனக்கே தெரியுமே? இப்போ எங்களுக்கு வயதாக வயதாக, அவனை திரும்ப எங்களுக்காவே பகவான் இங்கே மாற்றல் கொடுத்துக் கொண்டு வந்துவிட்டார் என்று தோன்றுகிறது! எங்களுக்கு ஏதாவது ஒன்றுகிடக்க ஒன்று ஒன்று என்றால் அவன் சகாயத்துக்கு ஓடி வந்துவிடுவானே!”

நான் ஊர் திரும்பினேன்; மனமெல்லாம் நிறைந்து பொங்கியது; இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கு வரை உலகம் அழியவே அழியாது என்று தைரியம் வந்தது.

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here