வெளி நாட்டில் ஓர் விமானப் பயணம்

0
214

கதையில்  வராத பக்கங்கள் – 10

10.   ஓர் விமானப் பயணம்!

நான் முதலும் கடைசியுமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது, எனது அலுவலகம் என்னை ஒரு பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு 30 வருடங்கள் முன்பு அனுப்பியபோது. பயிற்சி முடிந்து, அமெரிக்க சிறு நகரம் ஒன்றிலிருந்து நியூயார்க்கிற்கு நானும், பயிற்சிக்கு உடன் வந்திருந்த ஒரு நண்பரும் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

நியூயார்க்கில் JFK, லா கார்டியா என்று இரு விமான நிலையங்கள் இருந்தன. நாங்கள்போகவேண்டியது JFK விற்கு. 30 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் இருந்த பயணி விமானங்களின் எண்ணிக்கை, போக்குவரவு நெரிசல் உண்டாக்குமளவுக்கு அத்தனை அதிகமாக இருந்தது!

எங்கள் விமானம் JFK விமான நிலையத்தின் ஆகாயப்பகுதியை எட்டியாயிற்று. இதோ இறங்கப்போகிறது என்று அறிவிப்பும் வந்துவிட்டது. ஆனால் விமானமோ அரைமணி நேரம் நிலையத்தைச் சுற்றிச்சுற்றியே பறந்துகொண்டிருந்தது! மெதுவாக விமானி, “இங்கே JFK இல் ஏதோ காரணம் கொண்டு இறங்க ஓடுதளம் கிட்டாத நெரிசல் உள்ளதால், தற்காலிகமாக லா கார்டியா விமான தளத்தில் போய் இறக்கிவிட்டு, பின் ஓடுதளம் சரியானதும் JFK திரும்பும்” என்று அறிவித்தார்.

என் உடன் வந்த அன்பருக்கு குஷியாகிவிட்டது! காரணம், அவர் அடுத்து கனடா பயணிக்க பதிவு செய்திருந்த விமானத்தைப் பிடிக்கவேண்டியது லா கார்டியாவில் தான்!

லா கார்டியாவிலும் நெரிசலுக்கு குறைவில்லை! அங்கேயும் ஆகாயத்தைச் சுற்றிவிட்டு ஆற அமர எங்கள் விமானம் தரை இறங்கியது.

அதனை விமான நிலையத்தின் ஒரு கோடி மூலைக்கு ஓட்டிச் சென்று நிறுத்தினார்கள். உடன் வந்த நண்பரைப்போலவே மற்றும் 7,8 பேர்கள் தாங்கள் லா கார்டியாவில் இறங்கிக்கொண்டு அடுத்த விமானத்தைப் பிடிக்கவேண்டும் என்று எழுந்தார்கள்.

“அது சாத்தியமில்லை; பாதுகாப்பு விதிகளின் படி அதற்கு அனுமதி இல்லை; விமானம் தற்போது நிறுத்தியுள்ள இடத்திலிருந்து இறங்கி எங்கும் போக அனுமதியும் கிடையாது, போக எந்த போக்குவரத்தும் கிடையாது!” இதுதான் விமான ஊழியர்கள் தந்த பதில்! காச்சுமூச்சென்று அமெரிக்கர்கள்கூட (நம் ஆட்களைப்போல!) சண்டை போட்டுப் பார்த்தார்கள்! ஒன்றும் பயனில்லை.

ஒரு மணி நேரம் இப்படியே போனது; உள்ளே AC குறைந்த சக்தியில் ஓடியதால் புழுங்க ஆரம்பித்தது. குழந்தைகள் வீறிட்டு அழுதன. பயணிகள், “பசிக்கிறது; உணவு தாருங்கள்” என்று நெருக்க ஆரம்பித்தார்கள்! “விமானப் போக்குவரத்து சட்டப்படியும் அவர்களது நிர்வாகத்தின் நியதிப்படியும், இப்படி எதிர்பாராத சூழலில் விமானம் மாற்றிடத்துக்கு தற்காலிகமாக திருப்பப்பட்டு பின் தன் இலக்கை அடையும் வரையில் கூடுதல் உணவு வழங்க வழியொன்றும் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள் பணிப்பெண்கள்! போனால் போகிறதென்று தண்ணீர் மட்டும் (அதையும் அலட்டிக்கொண்டே) கொடுத்தார்கள்!

இன்னும் அரை மணி போனபின்னர், ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி, மீண்டும் JFK வந்து, மீண்டும் ஆகாயத்தில் அரை மணி சுற்றிய பிறகு ஓடுதளம் ஒருவழியாய்க் கிடைத்து, கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரத் தாமதத்துக்குப் பிறகு இறங்கினோம்!

நண்பர் அவசர அவசரமாக மீண்டும் லா கார்டியா போக டாக்ஸி பிடிக்க, நான் (அப்போது இரவு 12 மணி) விமான நிலையத்தை ஒட்டியே இருந்த, முன்பே பதிவு செய்திருந்த ஓட்டலைத் தேடிப் போனேன். இந்தியா வர எனக்கு அடுத்தநாள் இரவு தான் விமானம்.

கதை இத்துடன் முடியவில்லை.

காலையில், ஓட்டலின் உணவகத்தில் காலை உணவு சாப்பிடுவதற்காகப் போய் உட்கார்ந்தேன். அங்கே யாரோ என் முதுகைத்தட்டவே திரும்பிப்பார்த்தால், நண்பர்! அவர் லா கார்டியா போய்ச் சேர்ந்த போது அவரது அடுத்த விமானத்தின் ‘செக் இன்’ நேரம் முடிந்துவிட்டதாம்! வேறு அடுத்த விமானம் உடனடி இல்லாததால், மதியம் செல்லும் ஒரு விமானத்திற்கு டிக்கெட் எடுத்துவிட்டு இரவு இரண்டரை மணிக்கு அவரும் எப்படியோ நான் வந்து சேர்ந்த ஓட்டலுக்கே வந்து விழுந்திருக்கிறார்!

என்ன! இப்படி எல்லாம் தாறுமாறாய் நடந்த அந்த சமயத்தில் எரிச்சல் எரிச்சலாய் வந்தாலும் உள்ளூர ஒரு அற்ப சந்தோஷம்! அட! நம் ஊரில் சாலையில் ‘டிராஃபிக் ஜாம்’ பிரச்சனை என்றால், அமெரிக்காவில் ‘விமான ரன்வே’யில் அதே பிரச்சனை! நம் ஊரில் ரயில், பஸ், அரசாங்க ஊழியர்கள்தான் ‘ரூல்’ பேசி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள் என்றால் அங்கே விமான ஊழியர்கள் அதைத்தான் செய்தார்கள்!

நம் நாடு ஒன்றும் அத்தனை மோசமில்லை என்று தோன்றிற்று!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here