லூசு நாணா

0
344

கதையில்  வராத பக்கங்கள் – 8

8.   லூசு நாணா

அவன் இயற்பெயர் லட்சுமி நாராயணன். ஆனால் அவனை ‘லூசு நாணா’ என்று தான் எல்லாருக்கும் தெரியும்.

அவனோடு எனக்கு 15 வருடப் பழக்கம் — என் 9 ஆவது வயது முதல் 24 வயது வரை.

அதற்குப் பின் எங்கள் கிராமத்தை விட்டு நாங்கள் பட்டணம் குடிவந்தாயிற்று. ஏனோ அப்புறம் பல வருடங்களுக்கு என்னால் எங்கள் கிராமத்துப் பக்கம் போக வாய்ப்போ, அவசியமோ, ஆர்வமோ வரவில்லை. அப்படிப் போன போது எனக்கு லூசு நாணாவைப் பார்க்கவேண்டும் என்று உள்ளூர ஆவல். அவன் பேரில் ஏதோ ஒரு ‘இது’. அது ஓர் பிரியமா, அவன் குணாதிசயத்தில் எனக்கு இருந்த ஒரு கவர்ச்சியா, விட்ட குறை தொட்ட குறையா, ஏதோ ஒரு அஞ்ஞானமா, இல்லை என்னுள் குடைந்துகொண்டிருந்த ஒரு கேள்விக்கு அவனிடம் நான் கேட்க ஆவலாயிருந்த விடையா?

அப்படிப் போனபோது லூசு நாணா தெருவில் இல்லை. ஏன், தெருவிலேயே நாங்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பல குடும்பங்கள் இல்லை. அப்படி இல்லாது, காணாது போன குடும்பங்களில் அவன் குடும்பமும் ஒன்று. அவன் உலகத்திலேயே இல்லை என்றும் சிலர் சொன்னார்கள். சட்டென்று நம்பத்தான் முடியவில்லை.

நான் ஒரு நெஞ்சு வறட்சிக் கேஸ். ‘செண்டிமெண்டல்’ பேர்வழியெல்லாம் இல்லவேயில்லை. அவன் செத்துப் போன செய்தி ஒன்றும் என் மனதைப் பிழிந்து ஒரு சொட்டுக் கண்ணீரைத் தருவிக்கவில்லைதான்.

ஆனாலும், என் வாழ்வில், எனக்கு லூசு நாணாவைப் பற்றிய நினைவுகள் நெஞ்சில் அவ்வப்போது சுற்றிச் சுற்றி வருவது ஓர் மறுக்க முடியாத சத்தியம். எனக்கென்னவோ அவன் மீது ஒரு அலாதி ஈர்ப்பு. அது ஏன்? என் மனைவியிடம் நான் லூசு நாணாவின் நினைவுகளைப் பகிரும்போது அவள் நமுட்டுச் சிரிப்புடன் சொல்வது போல “இனம் இனத்தோடு சேரும்” என்கிற விதத்திலோ? இருக்குமோ என்னவோ!

மண் சாலை முனை திரும்பி எங்கள் கிராமத்துத் தெருவுக்குள் நுழைந்தால் வலது சாரியில் இரண்டாவது வீடு அவனது. இடிந்து பாழாய்ப் போயிருந்த அந்த மூதாதையர் ஓட்டு வீட்டை நாணாவின் அப்பா, முழுதாய் மொட்டை மாடியுடன் கூடிய ஒட்டு வீடாய் மாற்றிக் கட்டி, தாம் ரிடையர் ஆனதும் பட்டிணத்திலிருந்து அந்த கிராமத்துக்கு ஏனோ குடிவந்தார்.

நாணா, அவன் தம்பி, அவன் அப்பா, அப்பாவின் சித்தியான ஒரு மொட்டைப் பாட்டி. அதுதான் குடும்பம். எங்கள் ஊருக்கு நிரந்தரமாய்க் குடிவரும்போது நாணாவுக்கு 20 வயது இருக்கும். நாணாவுக்குத் தாய் இல்லை. அவன் சின்னப் பையனாய் இருக்கும்போதே செத்துப்போய்விட்டாளாம். அவளே இரண்டாம் தாரமாம். மூத்த தாரப் பையன்களெல்லாம் வளர்ந்து பெரியவர்களாகி வடக்கே எங்கெங்கோ வேலையில் இருந்தார்கள். அப்பாவோடும் இரண்டாம்தாரப் பிள்ளைகளொடும் அவர்களுக்கு அதிகம் ஒட்டுதல் இல்லை.

சின்ன வயதில் அம்மா செத்ததில் நாணா பக்கென்று உள்வாங்கிவிட்டானாம். அப்புறம் படிப்பு வரவில்லையாம். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவன் தான்.

ஆள் ஐந்தடி ஒரு அங்குலம் தான் இருப்பான். சற்றே கூனிய ஒல்லி தேகம். குழிவிழுந்த, ஆனால், ஒளி வீசும் கண்கள். சப்பிய மாங்கொட்டைக் கன்னம். எப்போதும் பதினைந்து நாள் தாடி மீசை. எப்போதும் மடித்துக் கட்டிய நாலு முழம் வேட்டி; ஒரு பனியன், அல்லது ஒரு தொளதொள அரைக்கை சட்டை. (அண்ணன்காரன்கள் விட்டுவிட்டுப் போன சட்டைகள் என்பான்). ஆனால் சுத்தமாய் குளித்து பளிச்சென்று விபூதியிட்டு துறுதுறுவென்று தெருவில் சுற்றியபடியே இருப்பான்.

லூசு நாணாவுக்கு தெருவில் எல்லாருமே ஃபிரண்டுகள் தான்! கிழங்கள், பாட்டிகள், மாமாக்கள், மாமிகள், இளைஞர்கள், பள்ளிப் பிள்ளைகள், நண்டு சிண்டுகள் — எல்லாருமே! எல்லாரோடும் பேச அவனுக்கு ஏதோ விஷயம் இருக்கும். அவனோடு பேசி அவன் வாயைப் பிடுங்கிவிட்டு, அவன் அந்தண்டை போனதும் “சரியான லூசு” என்பார்கள் பாதிப்பேர்!

என் சிறு வயதில் கோலி, பம்பரம் ஆடுகையில், தாடி வைத்த நாணாவும் எங்களோடு சேர்ந்து ஆடினான். பட்டம் விட்டபோது அவனும் விட்டான்; சைக்கிள் ஓட்டப் பழகியபோது, சீட்டைப் பிடித்துக்கொண்டு கூட ஓடி வந்து சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தான். நாங்கள் வளர்ந்து தெருவில் கிரிக்கெட் ஆடியபோது அவனும் மட்டை பிடித்து ஆடி, போலிங்கும் செய்தான். கேட்சுகளைக் கோட்டை விட்டு, அவனைவிட எட்டு பத்து வயது சிறிய பயல்களிடம் திட்டும் வாங்கினான்!

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பெரியவர்களுக்கு ஏதேனும் சகாயம், எடுபிடி செய்யவேண்டுமானால் செய்வான். பெரியவர்கள், மாமிகள், பெண்களிடம் மிக மிக மரியாதையாய்ப் பேசுவான். அவர்கள் முன் மடித்த வேட்டியை சட்டென்று இறக்கிவிட்டு, ஒருவித கூனலுடன், வெறும் கையால் தலைமீது தடவித் தலை முடியை சரி செய்தவாரியவாரே “சார், மாமா, மாமீ, அம்மா” என்று வரிக்கு வரி விளிமொழி சேர்த்துத் திக்கித் திக்கித்தான் பேசுவான்!

ஆனாலும் யாராவது தன் சகாய குணத்தை தம் சுயநலத்துக்காக உபயோகிக்கிறார்கள் என்று புரிந்துவிட்டால், பிறகு அவர்கள் பக்கம் போகவே மாட்டான்!

அவனுக்கு எந்த வேலையும் தெரியாது; எந்த வேலையும் தேவையில்லை. தேடவுமில்லை; அவனுக்கு சம்பளமும் வேண்டாம். அவனைத் தெண்டச் சோறு என்று வீட்டில் யாரும் சொன்னதில்லை. சொன்னாலும் கவலைப்படும் ஆளும் அவன் இல்லை!

அவனுக்கு சாப்பாடு, டீ, காபி, நொறுக்குத்தீனி என்று எந்த சபலமும் கிடையாது. யார் வீட்டினுள்ளிலும், திண்ணையைத் தாண்டிப் போக மாட்டான். தின்பதற்குப் பகிர்ந்துகொண்டால் அனேகமாகத் தவிர்த்து விடுவான். வருடத்துக்கு ஒரு செட் வேட்டி, பனியன், அண்டர்வேர், துண்டு என்று தீபாவளிக்கு அவன் அப்பா வாங்கிக்கொடுப்பதைத் தவிர அவனுக்கு வேறு ஆடைத் தேவை இருந்ததில்லை. தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க மாட்டான். எந்த ஓட்டலிலும் சாப்பிடமாட்டான். சாமி படம் ஏதேனும் வந்தால் பார்ப்பான் (திருவிளையாடல், கந்தன் கருணை என்று). மற்ற படி சினிமா ஆசையும் கிடையாது.

ஓசிப் பேப்பர், குமுதம், கல்கி, ஆனந்த விகடன் என்று வீடு வீடாய் போய் வாங்கிப் படித்துவிடுவான்! அரசியலை அலசுவான்; எல்லாரும் ஆதரிக்கும் கட்சிக்கு எதிராய்ப் பேசுவான். ஈ வே ரா பெரியார் என்றாலே அவனுக்கு அடிவயிற்றிலிருந்து கோவம் வரும்!

பத்திரிக்கைகளில் வரும் போட்டிகள் மீது அலாதிப் பைத்தியம்! அது துணுக்குப் போட்டியோ, கவிதைப் போட்டியோ, ஓவியப் போட்டியோ, கார்ட்டூன் போட்டியோ, சிறுகதைப் போட்டியோ, குறுக்கெழுத்துப் போட்டியோ, “யார் இந்த நடிகர்/நடிகை” என்று கண்டுபிடிக்கச் சொல்லும் புதிர் போட்டிகளோ — ஒன்றையும் விடமாட்டான். தான் போட்ட படத்தை, எழுதிய கவிதையை எங்களிடம் பெருமையாய்க் காட்டிவிட்டுத்தான் தபாலில் சேர்ப்பான்! அவன் அப்பா, மாதா மாதம் அவனது இந்த தபால் செலவுகளுக்காகவே ஒரு தொகை அவனுக்குக் கப்பம் கட்டிவிடுவார்.

பத்திரிகையிலிருந்து பரிசு வரும், வரும் என்று ஆவலாய்ப் எதிர்பார்த்து ஏமாந்துகொண்டிருந்தாலும் விடமாட்டான்! ஒரு பெரிய சரித்திர நாவல் போட்டி ஏதேனும் வந்தால் எழுதியனுப்பத் தன்னிடம் கல்கி, சாண்டில்யனைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் ஒரு சரித்திரக் கதை ஸ்டாக் இருக்கிறது என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பான். நான் சற்றே காதைத் தரத் தயாராயிருந்தால், அந்தக் கதையின் கதா பாத்திரங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்துத் தூக்கமே வரவழைத்துவிடுவான். அவன் சொன்ன ஒரு கதா பாத்திரத்தின் பெயர் எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது – “தட்டாம்பரிகை முத்துத் தலையாள்!” கதையில் அவள் தான் வில்லி!

நாணாவுக்கு இந்த ஒரு சபலத்தைத் தவிர வேறு எந்த சபலமும் இருந்ததாய் எனக்கு நினைவில்லை. அவனுக்கென்று அனேகமாக வேறு ஏதும் பணச் செலவு கிடையாது. நோய் நொடி வந்து அவன் படுத்து நான் பார்த்ததில்லை.

தவறாமல் தினம் சிவன் கோவிலுக்குப் போய்ச் சுற்றுவான். யார் வீட்டுக் கல்யாணம் விஷேசத்துக்கும் போக மாட்டான். முதலில் அவனை யார் மதித்துக் கூப்பிட்டார்கள்? கூப்பிட்டாலும் போவதில்லை.

பாவாடைத் தாவணி அணிந்த , புடவை கட்டிய கல்யாணமாகாத தெருப் பெண்களைக் கண்டால் தெறிக்க அந்தண்டை ஓடிவிடுவான்! அவர்களே வலியப் பேச்சுக் கொடுத்துவிட்டாலோ, ஆள் வெலவெலத்து வியர்த்துவிடுவான்!

ஆனால் லூசு நாணாவுக்குக் குட்டிக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்! யார் வீட்டிலாவது குழந்தை பிறந்துவிட்டால், அந்த வீட்டுக்காரர்களை கூடுதலாய் நட்பு பிடித்துக்கொண்டு அவ்வப்போது போய்க் குழந்தையைக் கொஞ்சி விட்டு, மடியில் வைத்துக் கொண்டு விடுவான். என்னிடம் வந்து பெருமையாக யார் வீட்டுக் குழந்தையோ தன் வேட்டியை நனைத்ததைப் பெருமையாகச் காட்டிக்கொள்வான்!

குழந்தையைத் தூக்கும் வயது வந்ததும் தூக்கிக்கொண்டு அலைவான். பேசும் வயது வந்ததும் பேசிப் பேசி வம்புக்கிழுப்பான்.

என் மூத்த அக்காவுக்கு எங்கள் வீட்டில் முதல் குழந்தை பிறந்தது. அதுவும் அவன் செல்லம் ஆயிற்று. 2-6 வயதில் பாட்டி வீட்டுக்கு வரும்போதெல்லாம் அந்தப் பிள்ளைக்கு லூசு நாணாவும் ஒரு விளையாட்டுத் தோழன் தான்! நாணா அவனைக் கூடுதல் வம்புக்கு இழுத்து அழவிடப் பார்த்தால், “நீ ஒரு பைத்தியம்!” என்று திட்டிவிட்டு வீட்டுக்குள் ஓடிவந்துவிடுவான் அப்பிள்ளை!

நான் வெளியூர் கல்லூரியில் சேர்ந்தேன். ஆஸ்டலில் தங்கினேன். லீவுக்கு ஊருக்கு வரும் காலத்தில், அனேகமாக சக வயதுத் தோழர்கள் அன்னியப் பட்டுப் போய்விட்டார்கள் — அவரவர்கள் படிப்பு, உத்தியோகம் என்று. அப்போது எனக்கு ஊருக்கு வந்தால் லூஸ் நாணாதான் தானே வந்து ஒட்டும் தோழன்.

என்னுடன் வாசல் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படிப்பான்; மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். மாலையில் வயல்வெளி வரப்புகளில் நடப்போம். ரயில்வே தண்டவாளத்தில் அடிமேல் அடிவைத்து நடப்போம். சைக்கிளில் டபிள்ஸ் அடித்து சுற்றுவோம்.

நான் இல்லாத நாட்களிலும் வாசலில் அவன் நிழலாடினால், வீட்டிலிருந்த கடைசி அக்காவோ, அப்பாவோ, அம்மாவோ தினமணிப் பேப்பர், கல்கியை அவனுக்குத் தருவார்கள். படித்துவிட்டு, அதை மூன்றாம் வீட்டில் கொடுத்து மாற்றாக இந்து பேப்பர், விகடன் வாங்கிப் படித்துவிட்டு, எங்கள் வீட்டில் அவற்றைக் கொடுத்துவிட்டுப் போவான். இது அவனது தினசரி சேவை.

டெல்லியில் வேலையில் இருந்த என் அண்ணன் எப்போதாது லீவுக்கு வரும் போது அவனுக்கும் ‘கம்பெனி’ கொடுப்பான்.

இப்படிக் காலம் ஓடுகையில் என் கடைசி அக்காவுக்குத் திருமணம் நிச்சயம் ஆயிற்று. பெரிய கிராமத்து வீடு. வீட்டிலேயே தான் கல்யாணமும். கல்யாணக் காரியங்களில் நானும் என் அண்ணனும் மும்முறமாயிருந்தோம். நாணாவை என்னவோ அதிகம் காணோம். கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. அவன் கல்யாணங்களுக்கு வரமாட்டான் என்பது தெரிந்ததே.

நான்கு மாதம் கழித்து நான் லீவுக்கு ஊருக்கு வந்தேன். நாணா கண்ணிலேயே படவில்லை. அம்மாவிடம் விசாரித்தேன். “அந்த லூசுக்கு என்ன திருவுள்ளக் கலக்கமோ? பேப்பர் வாங்கிப் படிக்கக் கூட வரதில்லையே? ” என்றாள். எனக்கு என்னவோ நாணாவைத் தேடி அவன் வீட்டுக்குப் போய்ப் பார்க்கத் தோன்றவில்லை. நான் தான் ஒரு வறட்சி கேஸ் என்றேனே?

வந்த இரண்டாவது நாள் வாசலில் உட்கார்ந்திருந்த போது தெருவின் எதிர் சாரி வழியாக நாணா அதிவேகமாக என் பக்கம் திரும்பாமல், ஏதோ தனக்குத் தானே பேசி, சைகைகளையும் செய்துகொண்டு போவதைப் பார்த்தேன் (அவனுக்கு அப்படி ஒரு சுபாவமும் உண்டு). முகத்தில் ஒளியுமில்லை; சிரிப்புமில்லை. ஏனோ அப்போதும் எனக்கு அவனைக் கூப்பிடத் தோன்ற வில்லை. (‘ஒரு வேளை கொஞ்சம் முத்திடிச்சோ?’)

மூன்றாவது நாள் தெருவில் போகையில் எதிரே வந்து மாட்டிக்கொண்டான்.

“என்ன மகாராஜா? கண்டுக்கிறதே இல்லே?” என்று சிரித்தேன். அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்; ‘சௌக்கியமா’வுக்குப் பிறகு பேச்சைத் தவிர்த்து ஓடப் பார்த்தான். இளைத்திடுந்தான். தலையிலும் தாடியிலும் ஓரிரு நரைகள் ஓடியிருந்தன. ஆச்சு; அவனுக்கும் கிட்டத்தட்ட 34 வயதாயிற்றே?

இப்படித்தான் அவன் என் வாழ்க்கையிலிருந்து விலகிப் போனான். எனக்கு படிப்பு முடிந்து பட்டணத்தில் வேலையும் கிடைத்த பின் நாங்களும் அடுத்த சில வருடங்களில் கிராமத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு பட்டணத்துக்கு குடிபெயர்ந்தோம்.

வருடங்கள் ஓடின. எனக்கும் கல்யாணமாயிற்று. கிராமத்து நினைவுகளையும் இளமைக் கால நினைவுகளையும் பொக்கிஷமாய்ச் சுமக்கும் எனக்கு என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் சொல்ல லூசு நாணாவின் கதைகள் உண்டு. அவன் ஏன் என்னை விட்டு அப்படி விலகிப் போனான்? அவனுக்கு என்னதான் அப்படி ஆச்சு? அவன் வருத்தப் படும் விதத்தில் நான் அவன் மனதை எப்போதாவது புண் படுத்தி விட்டேனா? அவனை எவ்வளவு தான் கிண்டலடித்தாலும் அவன் எதிர்க் கிண்டல் அடிப்பானே தவிரக் கோபிக்க மாட்டானே?

ஒரு நாள் இரவு உறங்கும் போது நாணா கனவில் வந்தான். தாடியெல்லாம் நரைத்து சோகம் அப்பிய முகத்துடன். திடீரென்று விழித்து எழுந்து உட்கார்ந்தேன்.

மனதில் ஒரு மின்னல் வெட்டியது. “அடச்சீ; எப்படி இத்தனை நாள் இது பிடிபடாமல் போனது?” என்று தலையில் குட்டிக்கொள்ளத் தோன்றியது.

நாணா லூசுதான்; படிப்பு, வேலை வெட்டி கிடையாது தான்; ஒன்றுக்கும் லாயக்கில்லை தான். ஆனாலும் அவனும் ஒரு சாண் பிள்ளை, ஆண் பிள்ளை தானே? அவனுக்கும் ஏன் ஓர் ஒருதலைக்காதல் வந்திருக்கக் கூடாது? அந்தக் காவி கட்டாத அரைச்சாமியார், ஓசிப் பேப்பர் வாங்குகையில், மணிக்கணக்காய் என்னுடன் திண்ணையில் அரட்டை அடிக்கையில் அங்கே வீட்டினுள்ளே ஓர் பார்வை ஓட்டம்; அங்கே அவன் அடி மனதில் ஒளித்து பூசை செய்துகொண்டிருந்த தேவதையின் மீது விழும் ஒரு பார்வை. எப்போதோ அவள் வாசலில் வருகையில் அரக்கப் பரக்க எழுந்து நின்று, மடித்த வேட்டியை இறக்கிவிட்டு, தலையைக் கையினால் வாரி, விதிர்விதிர்த்து நின்று அருகில் காணும் ஓர் தரிசனம்!

ஆம்! அதுதான் இருக்க வேண்டும். அதே தான். அவன் அம்மா செத்தபோது அவன் சிறு வயதில் வாங்கிய முதல் உள் காயத்துக்குப் பிறகு, இது இரண்டாவது ஊமைக் காயமோ? அதுதான் அவனை மீண்டும் ஒரு முறை உள் வாங்கிவிட்டதோ? சே! என்ன முட்டாள் நான்! லூசுக்கும் ஓர் உணர்ச்சியிருக்கும் என்று தெரியாமலேயே இத்தனை வருடங்கள்!

அப்போது எனக்கு ஒரு நடை கிராமத்துக்குப் போகவேண்டும்; லூசு நாணாவைப் பார்த்து அன்புடன் நாலு வார்த்தை பேசி “இது தானா? இதே தானா?” என்று கேட்டுவிடவேண்டும் என்று உள்ளே அரித்தது.

ஆனால், அதற்குள் லூசு போய்ச் சேர்ந்து விட்டான். அவன் அப்பாவும், தள்ளாத வயது வரை சமைத்துப் போட்ட கிழ சித்திப் பாட்டியும் போய்ச் சேர்ந்து விட்ட பின், நாணாவின் அண்ணன்மார் கிராமத்து வீட்டை விற்றுக் காசாக்கிக் கொண்டார்களாம். நாணாவுக்கு ஒரு சிறு தொகை கொடுத்து, அவனை ஏதோ ஒரு மடத்தில் சேர்த்து சோற்றுக்கும் தங்கலுக்கும் வழி செய்து விட்டுப் போய்விட்டார்களாம். மடத்தில் அரைப் பையித்தியமாய் ஆகி வாழ்ந்த நாணா செத்துப் போயிவிட்டதாக யாரோ எப்படியோ கிராமத்தில் தகவல் சொன்னார்களாம்.

ஹூம்….. ஒரு லூசு இருந்தால் என்ன, செத்தால் தான் யாருக்கு என்ன? உலகம் அதன் போக்கில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here