ஓட்டு வீட்டு வாழ்க்கை

0
159

கதையில்  வராத பக்கங்கள் – 9

9.   ஓட்டு வீட்டு வாழ்க்கை!

12 வருடங்கள் ஒரு கிராமத்து வீட்டில் – பெரிய ஒரு ஓட்டு வீட்டில் தான் எனது இளமைப் பருவத்தில் குடியிருந்தோம்.

கோடையில் ஓட்டு வீட்டினால் குளிர்ச்சி என்று என்னால் அடித்துச் சொல்ல முடியாது. ஆனாலும் காங்கிரீட் வீட்டை விட எவ்வளவோ பரவாயில்லை. கோடையில் இரவில் பெற்றோர்கள் புழுக்கத்தில் திண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன். கை விசிரி சத்தம் கேட்டபடியே இருக்கும்.

வீட்டின் நடுவே முற்றம். முற்றத்தில் கம்பிக் கிராதி போட்டிருக்கும். அதன் மேல் ஒர் உயரமாய், சரிந்த வாட்டில் வெளிச்சம் வரும்படி கட்டிய தென்னை ஓலைக் கூறை உண்டு. அதனால் பகலில் வெய்யிலின் நேர்த் தாக்கம் முற்றத்தில் இருக்காது. கம்பிக் கிராதியிருந்து தொங்கும் ஊஞ்சலில் எப்போதும் யாரேனும் ஆடிக்கொண்டிருப்போம். இரவில் புழுக்கத்தில் என் தாய் ஊஞ்சலில் ஆடியபடி படுத்திருப்பார்.

எனது 10 வயதுக்கு மேல் தான் மின் விசிரி வந்தது. அதுவும் மேசை விசிரிதான். அதை ஒரு ஸ்டூல் மேல் வைத்துவிட்டு வீட்டின் 7 உருப்படிகளும் வரிசையாகப் படுத்துக் கொள்வோம். முதல் காற்றுக்கு உரிமையாளர் அப்பா; அடுத்து அம்மா, பின் பிள்ளைகளுக்குள் போட்டா போட்டி!

குளிர் காலத்தில் ஓட்டு வீட்டில் குளிர் சற்று அதிகமாகத் தான் தோன்றும். மழை காலத்தில் உடைந்த ஓடுகள் உள்ள ஒரிரு இடங்களில் மழை நீர் சொட்டும். கீழே பாத்திரம். இரவில் ‘சொட், சொட்’ ஒலி!

ஓட்டு வீட்டின் மிகப் பெரிய பிரச்சனை தேள்கள். கோடை வெயில் எகிறும் போது ஓட்டு இடுக்கில் வாழும் தேள்கள் தொப்பென்று விழும். எங்கேனும் ஓடி ஒளிந்து கொள்ளும். 2-3 வருடத்திற்கு ஒரு முறை யாருக்கேனும் ஒரு கொட்டாவது கிட்டும்! எங்கள் தாய் தான் அதில் அடிக்கடி மாட்டுவார். அடுப்பை மெழுகுகையில், விளக்கு மாறைக் கையில் எடுக்கையில், மூலையில் கிடந்த பழந்துணியை எடுக்கையில் என்று காத்திருந்து கொட்டும்!

சிறு வயதில் நானும் ஒரிருமுறை தேள் கொட்டு வாங்கியிருக்கிறேன். ஒரு முறை தேனியும் கொட்டியிருக்கிறது. 4-5 வயதில் எனக்குத் தலையில் தேள் கொட்டியதால் அதன் பாதிப்பு சற்று கடுமையாக இருந்தது. கடும் வலி, வெள்ளமாக வேர்வை வந்தது. அப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் மருத்துவ வசதி ஒன்றும் இல்லை. வண்டி கட்டிக்கொண்டு பக்கத்துக் கிராமத்துக்குப் போய் மந்திரித்துக்கொண்டு வந்தோம்! மந்திரத்தால் சரியாயிற்றா அல்லது இரண்டு மணி நேரம் போகவர வண்டிப் பயணத்திலேயே விஷம் வீரியம் குறைந்துவிட்டதா என்பது தெரியாது!

ஓரு முறை கொட்டு வாங்கிவிட்டால் உடம்பு அதற்குள்ள எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிக்கொள்ளுமாதலால், அடுத்த முறை வலியும், பாதிப்பும் குறைவாகவே இருக்கும். என் அன்னை தேள் கொட்டினால் (பல முறை கொட்டு வாங்கியதால்) எளிதாக வேதனையைப் பொருத்துக்கொள்வார். 

நாளாவட்டத்தில் தேள் விழும் ‘தொப்’ ஒலியின் பிரத்தியேகம் தெரிந்து, காதில் விழுந்ததும் தரையில் தேட ஆரம்பித்துவிடுவோம்! பிடிபட்டு விட்டால் உடன் மரண தண்டனை தான்!

ஒரு முறை எங்கள் வீட்டில் நட்டுவாக்காலி எனப்படும் மாபெரும் தேள் வந்திருக்கிறது! விரலோடு சேர்த்த உள்ளங்கை நீளம் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு நண்டுக்குக் கொடுக்கு வைத்தாற்போல போல இருக்கும். பார்த்தாலே அச்சத்தில் உடம்பு சிலிர்க்கும். அது கொட்டினால் மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அவ்வளவு சட்டென்று கொட்டிவிடாது என்றும் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதைச் சீண்டினால், சீறும் ஒலி கேட்கும்!

ஓட்டு வீட்டின் மேல் இரவில் காட்டுப் பூனைகள் சரக் சரக் என்று ஒலி எழுப்பி நடக்கும். பெரியவர்களும், சிறுவர்களும் கிளப்பி விடும் திருடன் கதைகளில் பயந்து, இந்த ஒலி இரவில் கேட்டால் திருடன் ஓட்டின் மீது நடந்து வருகிறான் என்று இதயம் படபடக்கும்!

ஓட்டு வீடு என்றாலே ஓட்டுக்குக் கீழே ஏராளமான சிலந்தி வலைகளும், அதன் காரணமாக வரும் ஒட்டடைகளும் சகஜம். பொங்கல் சமயத்தில் ஆளை வைத்து முழு வீடும் (ஓட்டுக்குக் கீழேயெல்லாம் கட்டை விளக்குமாற்றால் தட்டி) ஒட்டடை அடிப்பார்கள். அதில் விழும், தூசு, ஒட்டடையையின் அளவைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கும்!

ஓடுகள் ஆங்காங்கே உடைவதும், அதனால் ஒழுக்கு வருவதும், உடைந்த பகுதிகளில் ஓடுகளை மாற்றுவதுமாக பராமரிப்பு அவ்வப்போது செய்ய வேண்டி வரும். ஓடுகளைத் தாங்கி நிற்கும் மரச்சட்டங்கள் ஆங்காங்கே உளுத்துப் போவதும் நடக்கும். 5-6 வருடங்களுக்கு ஒரு முறை உளுத்துப் போன சட்டங்களை ஒரு சில பகுதிகள் மட்டும் மாற்ற வேண்டிவரும். அப்படியே அந்தப் பகுதியில் மட்டும் ஓடுகளையும் மாற்றுவார்கள்.

அதனால் சில இடங்களில் பளிச்சென்ற சென்னிறத்தில் புதிய ஓடுகளும் மற்ற இடங்களில் பாசி பிடித்த பழைய ஓடுகளும் கண்களை உறுத்தும்!

பராமரிப்பு தான் ஓட்டு வீடுகளில் பெரும் தலைவலி. கூடவே தேள் பிரச்சனை. அதனால் தான் அவை அனேகமாக வழக்கொழிந்து விட்டன என்று நான் கருதுகிறேன்.

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here