கதையில் வராத பக்கங்கள் – 5
5. ஒரு நண்பனின் கதையிது….
கல்லூரியில் உடன் படித்த (அத்தனை நெருக்கமில்லாத, ஆனால் என்னுடன் சகஜமாய்ப் பழகிய) ஒரு நண்பனைப் பற்றிய ஒரு செய்தி என்னை 15 வருடங்களுக்கு முன் அதிர்ச்சியடையச் செய்தது.
கல்லூரியில் நம்முடன் படித்தவர்களை ‘பழைய மாணவர்கள் குழுமமாக’ ஒரு 25 ஆண்டுகள் கழிந்தபின் ஒன்றாய்ச் சந்திக்கும் வழக்கம் பல கல்லூரிகளிலும் உண்டல்லவா?
அப்படி ஒரு சந்திப்பில் பழைய நண்பர்கள் பலரும் கூடினோம். பலரையும் இடையில் சந்திக்கவே வாய்ப்பில்லாமல் காலம் ஓடிவிட்டதால், அந்த சந்திப்புகள் உற்சாகமும், உத்வேகமும், இனிய நினைவுகளைக் கிளறி மகிழும் அரிய சந்தர்ப்பமாகவும் அமையும்.
வந்தவர்கள், வராத தமது பழைய நண்பர்களைப் பற்றி அறிந்தவர்களிடம் விசாரிப்பதும் இயற்கையே.
எனக்கு திடீரென என் வகுப்பில் படித்த வளவனின்* நினைவு வந்தது. அவன் அக்கூட்டத்தில் இல்லை. (* பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“கல்லூரியை முடித்து ஒரு ஐந்து வருடம் கழித்து வளவனை ஒரு முறை சந்தித்தேன். பிறகு தொடர்பு விட்டுப் போயிற்று. அவன் எப்படி இருக்கிறான்? என்ன செய்கிறான்?” என்று வளவனுக்கு நெருக்கமாயிருந்த வேறு ஒரு நண்பனை விசாரித்தேன்.
அவன் முகம் சற்றே இருண்டது.
“வளவன் செத்துப்போயிட்டான்டா” என்றான் அவன். நான் அதிர்ந்தேன். “எப்படி? என்ன ஆயிற்று?”
நண்பன் குரலைத் தாழ்த்தி, “எய்ட்ஸ் வந்து போயிச் சேர்ந்துட்டாண்டா” என்றான். மீண்டும் அதிர்ச்சி!
வளவன் எங்கள் கல்லூரி நாட்களில் ஹீரோ போல இருந்தவன்; வாட்ட சாட்டமான உடல்; சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து, ஒரு கிராமத்திலிருந்து வந்தவன்; படிப்பில் சராசரிக்கும் மேலே. சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரன்; ஓட்டப்பந்தயங்களிலும் வெற்றி வாகை சூடுபவன்; எல்லாரிடமும் சகஜமாக, நட்பாகப் பேசிப்பழகக் கூடியவன்; அகங்காரமற்றவன். கல்லூரி மாணவர் தலைவனாகப் போட்டியிட்டு வென்று, கல்லூரி கலாட்டாக்கள் எதிலும் ஈடுபடாமல், ஆசிரியர்களிடமும், மாணவர்களிலும் நல்ல பேர் எடுத்தவன்.
அவனா? செத்துப்போய் விட்டானா?
அவனது அந்தரங்கச் சேட்டைகள் சிலவற்றை நானும் படிக்கும் காலத்திலேயே கேள்விப்பட்டதுண்டு.
நாங்கள் நான்காம் ஆண்டு படிக்கையில் எங்களுக்கு ஒரு அகில இந்திய சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது 1978 ஆம் ஆண்டு.
அப்போது மும்பைக்கும் போயிருந்தோம். மும்பையில் அந்தக் காலத்தில் ‘க்ராண்ட் ரோடு’ எனும் இடம், விபசாரத் தொழில் நடக்கும் பிரபலமான சிவப்பு விளக்குப் பகுதி.
அந்த இரண்டுங்கெட்டான் வயதில், பல மாணவர்களுக்கும் அந்த ரோடு எப்படியிருக்கும் என்று பார்க்க ஒரு உந்தல்! பஸ் பிடித்து பல மாணவர்களும் “சும்மா ரோடிலிருந்து பார்த்துவிட்டு வரலாம்” என்று போனார்கள்; நானும் என் நெருங்கிய நண்பர்கள் மூன்று பேரும் கூடப் போனோம்.
பஸ்களும், கார்களும், ரிக்ஷாக்களும் பொதுமக்களும் சகஜமாகப் பயணிக்கும் அந்த பொதுச் சாலையில், இரண்டு பக்கங்களிலும் இருந்த நெருக்கமான கட்டடங்களில் உள்ள எல்லா வாயில்களிலும், சன்னல்களிலும், மாடிகளிலும், பால்கனிகளிலும் நெருக்கியடித்துக்கொண்டு 16 வயது முதல் 45 வயது வரை இருக்கும் கணக்கற்ற பெண்கள், அதீதமான மேக்கப்புடனும், தலையில் பூவுடனும், சற்றே அரைகுறை ஆடைகளுடனும் சாலையில் போய்வரும் ஆண்களைப் பார்த்து கையை ஆட்டியும், கண்ணால் விளித்தும், தலையை ஆட்டியும் ‘வா வா’ என்று கூப்பிடும் காட்சி, நாங்கள் தப்பித் தவறிக்கூடக் கற்பனை செய்யாதது!
அலறிப் புடைத்துக்கொண்டு அடுத்த பேருந்தைப் பிடித்து தங்குமிடத்துக்கு ஓடி வந்தோம்.
கண்ட காட்சி எங்கள் மனதைப் பிசைந்தது. இப்படி ஒரு கேவலமான நிலையா?
“டேய், ராத்திரி தூங்க முடியலடா. என்ன பாவம்டா இது! வயிற்றுப் பிழைப்புக்காக இத்தனைத் தாய்க்குலம் இப்படி ஒரு மோசமான வாழ்க்கையிலா? ” – மறுநாள் இதைப்பற்றிப் பேசும்போது இளகிய மனதுள்ள ஒரு நண்பன் அழுதே விட்டான்.
இப்படிச் சிலர்.
அதே சமயம் வளவன் உட்பட அவனது இரண்டு மூன்று நண்பர்கள் அந்த விலை மகளிரிடம் போய்வந்த விஷயமும் நெருப்பென சக மாணவர்களிடம் பரவியது.
அப்படியும் சிலர்.
கல்லூரியை விட்டுப் போகும்போது ஒரு சமயம் வளவன் என்னிடம் மனம் விட்டு அவன் குடும்பப் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவனிடம் மேற்கண்ட செய்தி உண்மையா என்று கேட்டேன். “ஆமாம் மச்சி! அங்க மட்டும் இல்லே; எங்க ஊருலேயே எனக்கு இப்படி அடிக்கடிப் பழக்கமான லேடீஸ் இருக்காங்க; நீயெல்லாம் பழம்; உனக்கு இதெல்லாம் புரியாது; இதெல்லாம் ஒரு ‘வீக்னெஸ்’ மச்சி; நீ கண்டுக்காதே” என்றான்.
கல்லூரிப் படிப்பு முடித்து ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு வளவன் சென்னையில் ஒரு பெரிய கடைத்தெருவிலிருந்த எங்கள் அலுவலகத்துக்கு வந்து எதேச்சயாய் என்னைப் பார்த்தான். பார்க்கவே மிகவும் வித்தியாசமாக இருந்தான். தலையில் பெரிய முன் வழுக்கை. உடல் மிகவும் மெலிந்து போயிருந்தது. முகத்தில் சுருக்கங்கள். “என்னடா ஆயிற்று? உடம்புக்கு என்ன? ஏன் இப்படிக் கிழவன் போல் ஆகிவிட்டாய்?”என்று விசாரித்தேன். அசட்டு சிரிப்பு சிரித்து, ஏதோ சொல்லி மழுப்பினான். நல்ல உத்தியோகம் ஒன்றும் இல்லை என்றும், குடும்பத்தொழிலைக் கவனிப்பதாகவும் சொன்னான். உணவு விடுதிக்குப் போய் அவனுடன் ஒன்றாய் உணவருந்திவிட்டு வழியனுப்பினேன்.
இருபது வருடங்களாய் அவனைப் பற்றிப் பின் ஒன்றும் கேள்விப் படாமல், இப்போது அவன் செத்துப்போன செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன்.
ஏன் இப்படி ஆக வேண்டும்? பழகுவதற்கு எத்தனை நல்ல பையன் அவன்! கவனத்துடன் வாழ்வைத் துவக்கி வெற்றி நடை போடவேண்டிய வயதில், வெற்றி பெறப் பல தகுதிகளும் ஆளுமையும் பெற்றிருந்த அந்த நல்லவன் ஏன் இப்படித் தடுமாறி விழவேண்டும்?
வயதுக் கோளாறு; பாழாய்ப் போன சபலம்; சுய கட்டுப்பாடு இன்மை. அதற்கு மேல் தலைவிதி என்று ஒன்றும் கூடவே.
வாழ்க்கையில் நாம் பாடம் படிக்க எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!
-=0()0=-