ஒரு பழிவாங்கலில் வந்த வேதனை

0
150

கதையில்  வராத பக்கங்கள் – 6 

6.  இன்றும் உறுத்தும் மன சாட்சி

இதோ, இப்போது நினைத்தாலும் மனசாட்சி உறுத்தும் ஒரு அற்ப செயலை 33 வருடங்களுக்கு முன்பு நான் செய்தது நினைவில் இருக்கிறது.

அவர் எனது தந்தை வழி உறவுக்காரர். என்னைவிட சுமார் 16 வயது மூத்தவர். எங்கள் ஊரிலிருந்து அருகில் இருந்த கிராமத்தில் பள்ளி இறுதிவரை படித்தவர். அதற்கு மேல் படிக்க வசதியில்லை. எப்படியோ, யார் யாரையோ பிடித்து மும்பைக்குப் போய் அங்கே ஒரு சிறு உத்தியோகத்தில் சேர்ந்து, பின் தமது சாமர்த்தியத்தால் பெருமளவு முன்னுக்கு வந்து காரும் பங்களாவுமாய் மும்பையில் உயர்ந்து விட்டவர்.

எனக்குத் திருமணம் ஆகுமுன்பு, பெற்றோருடன் மும்பைக்குப் போயிருந்தேன். அப்போது என் தந்தையின் ஆசைக்கிணங்க அந்த உறவினர் வீட்டுக்குப் போனோம். நீண்ட காலத்திற்குப் பிறகு நேரும் சந்திப்பு. என் தந்தை மிகுந்த பிரியத்துடன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்னை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. ஒரு புதிய பணக்காரரின் அலட்சியம் அவரிடம் வந்திருந்ததோ என்று அப்போது எனக்குத் தோன்றியது.

அடுத்த ஓரிரண்டு வருடங்களில் அவர் சென்னை வந்திருந்தார். எங்களுக்குப் பொதுவான மற்றொரு உறவினர் வீட்டிற்கு நான் போயிருந்த போது அவர் அங்கு வந்திருந்தார். நான் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தும் அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்று தோன்றியது. சென்னை உறவினர், என்னிடம், “இவர் யாருன்னு உனக்கு தெரியுமா?” என்று விசாரிக்க, நான், “ஓ! நன்றாகத் தெரியுமே! ரெண்டு வருஷம் முன்பு தானே மும்பையில் இவர் வீட்டில் சந்தித்தேன்” என்றேன்.

ஆனால் அவரோ, அசட்டு சிரிப்புடன், “நீ யாருன்னு ஞாபகம் இல்லையே?” என்றவுடன் என் இளம் வயது அகங்காரம் ஏதோ ஒரு விதத்தில் அடிபட்டது. பின் நான் யார், யாருடைய பிள்ளை, அவருக்கு என்னவகையில் உறவு என்றெல்லாம் நான் விளக்கிய பிறகு, “ஓ! மறந்தே போச்சு!” என்று அசடு வழிந்தார். அவருக்கு மறதி இருந்திருப்பது இயற்கையே. அடிக்கடி தொடர்பில் இல்லாத உறவு தானே எங்களிடையில்? ஆனாலும், என் மனம் என்னவோ அது அவரின் “புதுப்பணகார அகங்காரம்” என்று அவரைக் குற்றம் காண்பதில் தான் திருப்தியடைந்தது.

பின்னர் விரைவிலேயே அவர் மும்பையிலிருந்து சென்னை வந்து ‘செட்டில்’ ஆகிவிட்டார்.

அடுத்த இரண்டு  ஆண்டுகளில் எனக்குத் திருமணமும் ஆயிற்று. என் புது மனைவியுடன் வேறொரு உறவினரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். நானும் என் மனைவியும் பின் வரிசையில் உட்கார்ந்து ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது அந்தத் திருமணத்துக்கு ‘மும்பை’ உறவினரும் வந்திருந்தார். இந்த முறை அவர் என்னை நினைவு வைத்திருந்தார்; நானும் என் மனைவியும் பின்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு என்னை நோக்கி சிரித்துக்கொண்டே வந்து , “என்னப்பா! சௌக்கியமா? இதான் உன் மனைவியா?” என்று கேட்டார்.

புது மனைவி அருகில் இருக்கும் திமிறா, ஏதோ ஒன்று ஒரு கணத்தில் என் அகங்காரத்தை பூதம் போல் விரியச் செய்து, அவரது பழைய அலட்சியத்தை இப்போது பழிவாங்கும் ஒரு வக்கிரமான எண்ணம் மனதில் உதித்தது! “சார் யாரு? ஞாபகம் இல்லையே?” என்றேன்!

அந்தக் கணத்தில் அவர் முகம் இருண்டது; அசடு வழிந்தது; அவர் தடுமாறினார். “என்னப்பா! போன வருஷம் தானே மைலாப்பூர் பெரிய மாமா வீட்டில் வைத்து பார்த்தோம்? ஞாபகம் இல்லையா?; மும்பையில் என் வீட்டுக்குக் கூட வந்திருந்தாயே?” என்றார்.

அந்த ஒரு கணத்தில் பழி வாங்கிய திருப்தி எழுந்தாலும், உடனே, என் மனசாட்சி, ‘முட்டாளே! முட்டாளே! வயதில் பெரியவரை இப்படி வேண்டுமென்றெ அவமதித்து பழி வாங்கிவிட்டாயே!” என்று திட்ட ஆரம்பித்து விட்டது. அவரோடு சில  வார்த்தைகள் சுமுகமாகப் பேசி, என் மனைவியையும் அறிமுகப் படுத்தி, சிறிது உரையாடிய பின் அவர் விடை பெற்றுக்கொண்டு அகன்றபின்  பிறகு, என் மனைவியிடம் விஷயத்தை சொன்னேன், அவள் புது மனைவியாய், லட்சணமாய், “வேண்டியது தான் அந்த ஆளுக்கு” என்று சொன்னாலும், நான் அவளிடம், “சீச்சி; நான் அப்படி நடந்திருக்கக் கூடாது” என்று ஓரிரு முறை புலம்பினேன். அதனால் கொஞ்சம் மனம் சமாதானமாயிற்று.

பிறகு அவ்வுறவினரும் நானும் பல முறை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தோம்; அவர் என் தந்தையோடு பேசிக்கொண்டிருக்க எங்கள் வீட்டுக்கும் வருவார்; இருவருமே அந்த பழைய சம்பவங்களைத் தொடாமல், சுமுகமாக உறவைத் தொடர்ந்தோம். பழகப் பழக, அவர் அடிப்படையில் கர்வியல்ல என்பதும், அதிகம் கலந்து பழகாத introvert தான் என்பதும், நன்கு பழக்கமாகி விட்டால் சுமுகமாகவும் சுவையாகவும் பேசக்க்கூடியவரே என்பதும்  புரியவந்தது.

ஆக, எனது அற்பமான அன்றைய நடத்தை தந்த உறுத்தல் இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது உள்ளே!

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here