வாழ்ந்து கெட்ட குடும்பம்

0
225

கதையில்  வராத பக்கங்கள் – 3

(3)  வாழ்ந்து கெட்ட குடும்பம் 

45-50 வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்துத் தெருவில் எங்கள் கண் முன்னே வாழ்ந்து கெட்ட குடும்பம் அது.

நடுத்தரக் குடும்பம் தான் அது; கணவர் ரயில்வேயில் பயணச் சீட்டுப் பரிசோதகர். மனைவி குடும்பத் தலைவி. 2 பிள்ளைகள் இரண்டு பெண்கள். மனைவியின் தாய், சகோதரிகள் எல்லாரும் சென்னையில் வாழ்ந்தார்கள். பெண்மணிக்கு பிறந்த வீட்டு ஆதரவும் செல்லமும் மிகவும் அதிகம். அந்தப் பெண்மணியின்  தாய் உட்பட அவர்கள் பிறந்தகக் குடும்பத்தில் எல்லாருமே  சினிமாப் பைத்தியங்கள்!

எங்கள் கிராமத்தில் அவர்கள் வீட்டில் அந்தக் காலத்திலேயே ‘பேசும் படம்’ எனும் சினிமாப் பத்திரிக்கை வாங்குவார்கள். எங்கள் தெருவிலேயே வேறு யாரும் அந்தப் பத்திரிக்கை வாங்கமாட்டார்கள். அவர்கள் வீட்டில் எல்லாருமே, எப்போதுமே சினிமா பற்றித்தான் அனேகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். பிள்ளைகள் அவர்கள் அம்மாவை “அடீ தேவகீ” என்று கூப்பிட்டு வாடி, போடி என்று தான் பேசுவார்கள்!

பக்கத்து டவுனில் எந்தப் படம் புதிதாக ரிலீசானாலும் இந்தப் பெண்மணிக்குப், பிள்ளைகளோடு உடனே போய்ப் பார்த்துவிடவேண்டும். கணவர் அதைக் குறித்துக் கன்னாபின்னாவென்று அக்கம் பக்கமெல்லாம் கேட்கும் விதத்தில்  திட்டுவார். அது எருமை மாட்டின் முதுகில் பெய்த மழை தான்.

பெண்மணி  தாம் தூமென்று பணத்தைச் செலவு செய்வார். தனக்குப் புதுப் புடவைகளும் தன் பெண்களுக்குப் புதுத் துணிகளும் அடிக்கடி வாங்கியபடியே இருப்பார். 

அக்காலத்தில், இன்னும் திருமணம் ஆகாத என் இரு சகோதரிகள் எங்கள் வீட்டில் தையல் இயந்திரம் வைத்துக்கொண்டு துணிகள் தைத்துக் கொடுத்து கொஞ்சம் வருமானம் ஈட்டினார்கள், ஜாக்கெட்டுகள், பெண்குழந்தைகளுக்கான ஃபிராக் எல்லாம் தைப்பார்கள்.

 இந்தப் பெண்மணி மூலம் என் சகோதரிகள் காட்டில் மழை!

அந்தப் பெண்மணியின் ஒரு தங்கை பார்க்கக் கொஞ்சம் கவர்ச்சியாய் இருப்பார்; எப்போதாவது அக்காவைப் பார்க்க எங்கள் கிராமத்துக்கு வருவார். கிராமத்து இளவட்டங்கள் அவளைப் பார்த்து ஜொள்ளு விடுவார்கள்! அவர் கோடம்பாக்கத்தில் சிறிய வேஷங்கள் தேடி சினிமாக் கம்பெனிகளைச் சுற்றிக்கொண்டிருந்ததாகக் கேள்வி. மற்றோரு தங்கை சுமாராகப் பாடுவாள். அவளுக்கு சினிமாவில் பாட ஆசை. எப்படியோ தலை கீழாக நின்று ஒரு பாட்டில் சின்னக் குழந்தை குரலில் வரும் இரண்டு வரிகளை டி.எம்.எஸ்ஸுடன் சேர்ந்து ஒரு சினிமாப் பாட்டில் பாடியிருந்தாள். பெண்மணி ஊரெல்லாம் அதைப் பற்றிப் பெருமை பேசுவார். “ரேடியோல என் தங்கை பாடின அந்தப் பாட்டு வெச்சானே கேட்டீங்களா?” என்று விசாரித்துக்கொண்டிருப்பார்

கணவர் அனேகமாக வாரத்துக்கு ஓரிரு முறைதான் வீட்டில் கண்ணில் படுவார். வரும்போதெல்லாம் அவர்கள் வீட்டில் நடக்கும் அடிதடிச் சண்டைகள் அக்கம் பக்கமெல்லாம் பிரசித்தம். சமயத்தில் கணவரோடு சண்டையிட்டுக்கொண்டு  தனியாகவும் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளோடும் சென்னைக்கு ரயிலேறிவிடுவார்.

அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் எப்போதும்  மைக்ரேன் தலைவலி உண்டு போலும்! அவர்கள் எலலாரிடமும் எப்போதும் அமிர்தாஞ்சனின் வாசம் வீசும். அவர்கள் வீட்டுக்குள் போனாலும் அந்த வாசம் எப்போதும் இருக்கும்!

இப்படியிருக்கையில் அவர் கணவர் சுமார் 45 வயதாயிருக்கையில் ஒரு நாள் திடீரென்று மாரடைப்பு வந்து அகால மரணமடைந்தார். குடும்பம் வறுமையிலும் கடனிலும் சிக்குண்டது. ஒன்றிரண்டு வருடங்கள் எப்படியோ எங்கள் கிராமத்திலேயே அவர்கள் வாழ்க்கையை ஓட்டினார்கள். மூத்த மகனுக்குப் பைத்தியம் பிடித்தது. அடுத்த மகன் மனச்சோர்வில் சிக்குண்டான். பெண் குழந்தைகளுக்கு படிப்பு சரியாக வரவில்லை.

வேறு வழியின்றி கிராமத்து வீட்டைப் பூட்டிப் போட்டுவிட்டு, பிறந்த வீட்டு ஆதரவை நம்பிச்  சென்னைக்குக் குடியேறினார்கள். எப்போதாவது அந்தப் பெண்மணி ஊரில் தலையைக் காட்டுவார். இளைத்துக்,  வாடிப்போய் அவர் பொலிவு எல்லாவற்றையும் இழந்து காணப்பட்டார். மூத்தபையன் தற்கொலை செய்துகொண்டானாம். வளர்ந்துவரும் தன் பெண் பிள்ளைகளைப் பற்றிய கவலை அவருக்குக் கனமாய் இருந்தது. அவர்களும் கோடம்பாக்கத் தயாரிப்பாளர்கள் பின்னே போனால் என்னாவது என்கிற பயம் இருந்ததுபோல் இருந்தது. இன்னும் என்னென்னவோ சோகக் கதைகள்.

மொத்ததில் நாங்கள் படித்தது:

  • சினிமாப் பயித்தியத்தால் ஒரு குடும்பம் உருப்படாமல் போகும்.
  • அடங்காத ஆசைகள் உள்ள மனைவி, அவளை அடக்க முடியாத கணவன் இருந்தால் குடும்பம் வீணாய்ப் போகும்
  • சதா சண்டை போடும் கணவன் -மனைவி உறவில் பிள்ளைகள் மனதளவில் பெரும் பாதிப்பை அடையக் கூடும்
  • ஒரு அகால மரணம், குடும்பத்தையே ஆட்டிப் போட்டுவிடும் சக்தி வாய்ந்தது
  • கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை.

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here