ஏப்ரல் ஃபூல்!

0
311

கதையில்  வராத பக்கங்கள் – 2 

2.   ஏப்ரல் ஃபூல்!

இப்போது நினைத்துப் பார்த்தாலும், ‘ஏண்டா இப்படி ஒரு அற்பத்தனமான குறும்பைச் செய்து ஒருவருக்கு மன வேதனை கொடுத்தோம்’ என்று என்னை நானே தலையில் குட்டிக்கொள்ளத் தோன்றும் ஒரு நிகழ்வு இது:

எனக்கு அப்போது சுமார் 24 வயது இருக்கும். அப்போது நான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் ஓர் கம்பெனியில் எஞ்சினீயராகப் பணியாற்றத் தொடங்கியிருந்தேன்.

நான் வேலை செய்த கம்பெனிக்கு 15 நிமிட சைக்கிள் பயண தூரத்தில், பிரம்மச்சாரிகள் தங்கும் மேன்ஷன்  ஒன்றில் தனி அறை எடுத்துத் தங்கியிருந்தேன்.

ஒரு நாள், என் அலுவலகத்தில் ஒரு பெரிய பதவியிலிருந்தவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். போனேன். அவர் அறையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞனை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, “இவனைத் தற்காலிகமாய் ஒரு சில மாதங்களுக்கு உன் அறையில் உன்னுடன் தங்க வைத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார். என்னால் மறுக்க முடியாத நிலை.

அந்த இளைஞன் அடுத்தனாளே தன் பெட்டி படுக்கைகளுடன் என் அறைக்குத் தங்க வந்துவிட்டான். அவன் நல்ல மாதிரி; தமிழ் தாய் மொழி; ஆனால் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். அவன் பெற்றோர்கள் அந்த நாட்டில்தான் இருந்தார்கள். இவன் எப்படி எந்த சிபாரிசில் இங்கு என் கம்பனியில் வேலைக்கு வந்து சேர்ந்தான் என்பது எனக்குத் தெரியவில்லை. 

அவனோடு சேர்ந்து இருப்பதில் பிரச்சனை ஒன்றும் பெரிதாக ஒன்றும் இல்லை. அவனிடம் கொஞ்சம் அதிகப்படியாய் சுயப் பிரதாபம் பேசும் குணம் மாத்திரம் இருந்தது. அவ்வளவே.

ஒரு மார்ச்சு மாதம் அது. ஏப்ரல் முதல் தேதியன்று முட்டாள்கள் தினம் கொண்டாடுவதைப் பற்றி ஒரு நாள் பேச்சு வந்தது. முட்டாள்கள் தினத்தில், தான் அடுத்தவர்களை முட்டாளாய் ஆக்குவதில் கை தேர்ந்தவன் என்றும், அதில் தனக்கு ரொம்பவும் குஷி என்றும் பலமுறை அந்த சம்பவங்களைப் பற்றியே சவடாலாய்ப் பேசிக்கொண்டிருந்தான்.

‘ஆனாலும் ஓவராய் பேசுகிறானே?” என்று எனக்கு அப்போது தோன்றியது.

அவனுக்கு தாய் நாட்டிலிருந்து என் முகவரிக்கு மாதம் ஓரிருமுறை தபால் வரும். தொலை பேசியே அதிகம் இல்லாத காலம்(1980) அது. அவன் மிக மிக முக்கியமான ஏதோ ஒரு கடிதத்தை  அவன் ஊரிலிருந்து எதிர் பார்த்துக்கொண்டிருந்தான். தினம் தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், “எனக்குக் கடிதம் ஏதாவது வந்திருக்கிறதா?” என்று ஆவலுடன் கேட்பான்.

அவனுக்கு இதற்கு முன் வந்த கடிதங்களின் வெற்று உறைகளை அவன் அலமாரியின் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்பான். அவை எல்லாம் வெள்ளை நிறத்தில் ஒரே சைஸில் இருக்கும். அப்போது தான் எனக்கு அந்தக் குறும்பு எண்ணம் உதித்தது.

மார்ச் 31 அன்று நான், அவனுக்கு வரும் கடிதங்களின் உறைகள் போலவே ஒரு வெள்ளைப் பேப்பர் கொண்டு ஓர் உறை தயாரித்து அவனுடைய பழைய உறைகளிலிருந்து முகவரி, தபால் தலை இவற்றை வெட்டியெடுத்து புதிய உறையில் ஒட்டி, உள்ளே ஒரு குப்பை காகிதத்தை வைத்து, ஒரு துண்டு காகிதத்தில் “ஏப்ரல் முட்டாள்” என்று எழுதி வைத்து ஒட்டி, தயார் செய்து வைத்துவிட்டேன்.

மறுநாள் – ஏப்ரல் 1. எப்போதுமே நான் அலுவலகத்திலிருந்து சீக்கிறம் வந்துவிடுபவன்; அவன் காலம் தாழ்த்தியே வருவான். அவன் வந்ததும், நான் சாது போல முகத்தை வைத்துக்கொண்டு, “உனக்கு தபால் வந்திருக்கிறது பார்” என்று மேசை மீது கை காட்டினேன்.

அவன் முகம் பிரகாசமாக, பரபரப்புடன் பாய்ந்து சென்று உறையை எடுத்துக் கிழித்தான். உள்ளே இருப்பதைப் பார்த்தவுடன் அவன் முகம் போன போக்கு இருக்கிறதே!

“ஏப்ரல் ஃபூல்!  என்னப்பா!  நல்லா ஏமாந்தியா? ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்று நீ கேள்விப்பட்டதில்லையா?” என்றேன் நக்கலாக.

அவன் முகத்தில் அசடு வழிந்தது; கோபம் சிறிது துளிர்த்தது; தான் எதிர் பார்த்த முக்கியமான கடிதம் உண்மையில் வரவில்லை என்கிற வேதனையும் ஏமாற்றமும் அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிந்தது. நான் “கெக்கே” என்று சிரித்தேன். அப்படி சிரிப்பது தவறு என்று என் மன சாட்சி உடனே கண்டித்தாலும் நான் சிரித்தேன்.

பாவம். அவன் உண்மையிலேயே நல்ல பையன். தன் வேதனையையும் அவமானத்தையும் சீரணித்துக்கொண்டான். அடுத்த ஓரிரு நாட்களில் பழையபடி சுமுகமாகப் பழக ஆரம்பித்துவிட்டான்.

அடுத்த இர்ண்டு மூன்று மாதங்களில் அவன் எதிர்பார்த்த கடிதமும் வந்தது. அவன் தன் நாட்டுக்குத் திரும்பவேண்டிய சூழலும் வந்தது. நட்புடன் விடை பெற்றான்.

ஆனால், ஏப்ரல் 1 அன்று அவனிடம் நான் உண்டாக்கிய முகபாவங்கள் இன்றளவும் என் நினைவில் நின்று உறுத்திக்கொண்டிருக்கிறது. எதற்காக நான் அவனிடம் அத்தனை சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டேன்? 

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here