ரயில் மோகம்!

0
215

(ஆண்டு 1962)

 எனக்கு  அப்போது  4 அல்லது 5 வயது இருக்கும்.  எங்கள் குடும்பம் இருந்த கிராமத்தில், என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து சுமார் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் ஒரு ரயில் பாதை போகும். ஒவ்வொரு நாள்  பகல் பொழுதில் மூன்று நான்கு தொடர்வண்டிகள் அதில் போனாலே அதிகம். 

அந்தக் காலத்தில் அப்போதெல்லாம் நீராவியில் ஓடும் புகை வண்டிகள் தாம். ‘கூ’  என்று விசில் ஊதிக்கொண்டு “பொச்சக பொச்சக” என்று  ஒலியெழுப்பிக்கொண்டு ஏராளமாய் கரிப்புகையை விட்டுக்கொண்டு அவை ஓடும்.

எனக்கு ரயில் வண்டியை வேடிக்கை பார்ப்பதில் அலாதி ஆசை. என்  வீட்டுக் கொல்லைப்புறத்தில் அடர்ந்த புதர்கள் இருந்ததால் அங்கிருந்து பார்த்தால்  ரயில் கண்ணில் படாது. ஆனால் அதுவே என் வீட்டு எதிர் சாரியில் சில வீடுகள் தள்ளியிருந்த என் தாத்தா வீட்டின் திண்ணையில் ஏறி நின்று பார்த்தால் தூரத்தில் வயல்களுக்கு நடுவே இரயில் வண்டி போவதைப் பார்க்க முடியும்.

இரயிலின் “கூ…” விசில் சத்தம் தொலைவில் கேட்டால், நான் குடுகுடுவென்றோடித் தாத்தாவின் வீட்டுத் திண்ணையில் ஏறிக்கொள்வேன். அங்கிருந்து  தொலைவில் ஓடும் இரயிலைப் பார்க்கும்போது ஒரு பெரிய மரவட்டை  புகை விட்டுக்கொண்டே ஊர்வது போல எனக்குத் தோன்றும்.

ஒரு சமயம், என் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஏதோ ஒரு விசேடம்; நிறைய விருந்தினர்கள் வந்திருந்தார்கள். விருந்து சாப்பாடு எல்லாம் முடிந்ததும், வீட்டிலிருந்த  பெண்களுக்கு சமையலுக்கு உபயோகித்த பெரிய பெரிய அண்டாக்களைக் கழுவ வேண்டியிருந்தது. அவர்கள் வீட்டுக் கொல்லையின் வழியே வயலில் வரப்புகள் வழியே நடந்து போனால், ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் வயலின் இடையே ஒரு வாய்க்கால் ஓடும். அங்கு போய்ப் பாத்திரங்களைத் துலக்கலாம் என்று  அவ்வீட்டுப் பெண்கள் தீர்மானித்தார்கள். 

போகும்போது என்னையும்  கூட்டிக்கொண்டு வாய்க்காலுக்குப் போனார்கள். எனக்கு வரப்புகள் வழியே நடந்து வாய்க்காலுக்குப் போவது அதுவே முதல் அனுபவமாதலால், சந்தோஷமாய் அவர்கள் கூடப் போனேன். 

அப்போது சரியாக ரயில் வண்டி ஒன்று வரும் நேரம்! ‘பொச்சக பொச்சக’வென்று சப்தமிட்டுக்கொண்டு ரயில் வண்டி வந்தது! எனக்கு குஷியோ குஷி! அதைக் காணும் போது எனக்கு ஒரு மகா பெரிய ஆச்சரியம்! அட! இந்த வண்டி, தாத்தா வீட்டிலிருந்து பார்த்ததை விட எப்படி இத்தனை பெரிதாய் வளர்ந்தது?! மரவட்டை போல இருந்த ரயில் வண்டி, எப்படி இப்போது தீப்பெட்டிகளை அடுத்தடுத்து  இணைத்து இழுத்துக்கொண்டு போவது போலப் பெரிதாக ஆனது?!

எனக்கு ஆறு வயதாகும்போது என் அப்பாவுக்கு வேலை மாற்றல் ஆகிவிட்டது. அதனால் எங்கள் குடும்பம் அவ்வூரை விட்டு வேறு ஒரு ஊருக்குக் குடி பெயரும்படி ஆகிவிட்டது.  அப்போதுதான் எனக்கு முதன் முதலில் ரயில் பயணம்! மாட்டு வண்டியில் முக்கால் மணி நேரம்  குடும்பத்தாருடன் (அதாவது அப்பா, அம்மா, என் மூன்று அக்காமார்கள், ஒரு அண்ணன் இவர்களுடன்)  மூட்டை முடிச்சுகள் சகிதம் பயணித்து  இரயில் நிலையத்துக்கு வந்தோம்.  

முதன் முதலில் தண்டவாளங்களை  நான் பார்த்தது அப்போது தான்.  தீப்பெட்டி அளவில் இருக்கப் போகும் ரயில் போவதற்கு எதற்கு இத்தனை பெரிய தண்டவாளங்கள்?  அத்தனை சிறிய பெட்டிகளில் எப்படி ஏறி உட்கார முடியும்? எனக்கு ஏதேதோ சந்தேகங்கள்.

அப்போது ரயில் வண்டி கூவென்று விசில் ஊதியவாறே  கடபுட தடதடவென்றேல்லாம் பயங்கரமாக அதிரும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு புகையும் ஆவியும் சூழ தண்டவாளத்தில் வந்தது. நான் பிரமித்தும் பயந்தும் போனேன். ரயில் எப்படி இத்தனை பூதாகாரமாக எப்படி வளர்ந்தது என்று ஒரே ஆச்சரியம்!

ஒரு வழியாய் அடித்து பிடித்துக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் ஏறிய பின் எனக்கும் என் கடைசி அக்காவுக்கும்சன்னல் இருக்கைக்குப் போட்டா போட்டி;  நிலைய ஊழியர் பிளாட்பாரத்தில் தொங்கிய ஒரு தண்டாவளத்துண்டை இரும்புக் கம்பியால் அடித்து  மணியோசை எழுப்ப, ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடி அசைப்பதைப் பார்த்தேன்.   கூவென ஒலியெழுப்பிய பின், முக்கி முனகிக்கொண்டு, ‘புஸ் புஸ்’ என்ற ஒலியுடன் ரயில் புறப்பட்டது. “பச்சைக் கொடி காட்டினால்தான் ரயில் கிளம்பும். சிவப்புக் கொடி காட்டினால் நின்றுவிடும்; தெரியுமா?” என்று விளக்கம் கொடுத்தான் அண்ணன்.

ரயில்   சிறிது சிறிதாய் வேகம் எடுத்தது. சன்னல் வழி பார்க்கையில் மரங்கள் எதிர் திசையில் ஓடுவதை முதன் முதலில்  கண்டபோது எனக்கு மற்றோரு ஆச்சரியம்!  மரங்கள் ஓடும் என்று இத்தனை நாள் என் அறிந்ததே இல்லையே?!

“டேய்! கையை வெளியே நீட்டாதே! எட்டி எட்டிப் பார்க்காதே! கண்களில்  கரி எஞ்சின் புகை விழும், , ஜாக்கிரதை!” என்று அப்பா எச்சரிக்கை செய்தார். ஆனால் நான் காதில் வாங்கினால் தானே?  அலட்சியமாய் இருந்து விட்டுக் கண்ணில் கரிப் பொடி விழுந்து, அதைக் கசக்கி, பின் ஓர் குட்டி அழுகை! அப்பா கண்ணில் ஊதிப் பொடியைத் தள்ளிவிட்டபின் தான் ஆசுவாசம்.

வெளியே பார்க்கும் ஆர்வம் சற்று பட்டுப் பட்டதும்  எனக்கு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்து விட்டது. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. ரயிலுக்கு நேரமாகிவிடும்,  அதனால் ரயிலில் ஏறியபின்தான் காலைச் சிற்றுண்டி என்று அப்பா காலையிலேயே கறாராகச் சொல்லியிருந்தார்.

அம்மா மூட்டைகளைப் பிரித்தாள். வாழை இலை, செய்தித்தாள் இவற்றில் சுற்றிய இட்டலிப் பொட்டலம் என் கைக்கு வந்தது. ஆகா! மிளகாய்ப் பொடியோடும், கெட்டி சட்டினியோடும் சேர்ந்து எழும்பிய இட்டலியின் மணம் எனக்கு நாவில் எச்சிலை ஊற வைத்தது. விரைந்தோடும் ரயிலின் ஆட்டத்தோடு அவசர அவசரமாய்  இட்டலியைத் தின்றுவிட்டு, அலட்சியமாய் இலையைச் சுருட்டி நான்  சன்னல் வழியே எறிய,  அது காற்றில் சவாரி செய்து அடுத்த சன்னல் வழியே மீண்டும் உள் நுழைந்து விட்டது! இது என்ன வேடிக்கை!  ஆனால் எனக்கு என் கவனக் குறைவுக்காக மண்டையில்  அண்ணனிடமிருந்து ஓர் குட்டு ‘ணங்கென்று விழுந்தது!

புது ஊரில்  குடி போவதற்காக அப்பா பார்த்து வைத்திருந்த வீடு  ரயில் பாதைக்கு மிக அருகில்  ஒரு ஐம்பது அடி தொலைவில் தான் இருக்குமாம். அதைக் கேட்டதும் எனக்கு மீண்டும் குஷி!   ‘ஐ,  ஜாலி! இனி தினம் தினம் பக்கத்தில் ரயிலைப் பார்த்து ரசிக்கலாம்! ‘

சுமார் ஒரு மணி நேரம் பிரயாணம் செய்ததும் நாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தாயிற்று. எல்லாரும் அவசர அவசரமாய் இறங்கினோம்.  ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரைக் கிலோ மீட்டர் தூரத்திலேயே வீடு இருந்ததால் பொடி நடையாய் நடந்தே போய்விடலாம் என்றார் அப்பா. அப்படியே, ரயில் பாதையை ஒட்டியே இருந்த ஒற்றையடிப் பாதையில்  என் அண்ணன் அக்காக்களும் அப்பா அம்மாவும் ஆளாளுக்கு பைகள்,  பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு   நடந்தார்கள்! 

பாதி தூரம் போனதும் என் செருப்பு அறுந்து போக, காலில் சரளைக் கற்கள்  குத்த ஆரம்பித்தன.  வலியில் நான் முகம் சுளிப்பதைப் பார்த்துவிட்டு என் அப்பா, என்னைத்  தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். எனக்கு மனசெல்லாம் குதூகலம். அப்பா என்னைத் தூக்கிக்கொண்டு எத்தனையோ காலம் ஆகிவிட்டதே!

“எருமை மாடு மாதிரி வயசாகிறது; இவனுக்கு தூக்கல் வேறு!” என்று சிறிய அக்கா சின்னக் குரலில் குமைந்தது காதில் விழ எனக்கு இன்னும் பெருமையாக இருந்தது!

இதோ வீடு வந்து சேர்ந்தாயிற்று.  

புது வீட்டுக்குக் குடி வந்த புதிதில் எனக்கு அத்தனை அருகில் ரயிலைப் பார்ப்பதில் அலுக்காத  குஷி! வாழை இலையைக் கிழித்து பச்சைக் கொடி போல் செய்து கொண்டு ரயில் போகும் போது ஆட்டி ஆட்டிக் காண்பிப்பேன். நான் பச்சைக் கொடி காட்டுவதால் தான் ரயிலே போகிறது! தெரியுமா? எனக்கு மட்டும் ஒரு சிகப்புக் கொடி கிடைத்தால் ஒரு நாள் இல்லை ஒரு நாள்  ஓடும் ரயிலை நிறுத்திப் பார்க்கவேண்டும் என்று மனதுக்குள் ரகசியத் திட்டம் வேறு வைத்திருந்தேன்!

நள்ளிரவில் ‘போட் மெயில்’ எனப்பட்ட விரைவு வண்டி தடதடவென்று ஓடும்போது, தரை குலுங்கும். பேரொலியாய் அருகில் கேட்கும் விசிலொலியும், தடதட ஒலியும் குடிவந்த புதிதில் எல்லாருடைய தூக்கத்தையும் கெடுக்கும். எனக்கு நெஞ்சு படபடக்க ஏதோ ஒரு பயத்துடன் விழிப்பு வரும்.

குடிவந்து 6 மாதங்களாகி விட்டது.

 வீட்டினுள் பொழுது போகாமல் ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தேன். 

அப்பா அம்மாவிடம், “இது என்ன?  சுவர்க் கடிகாரம் நின்நு போச்சா என்ன? ‘டே எக்ஸ்ப்ரஸ் போயாச்சோ?” என்றார். அந்த வண்டி போகும் நேரம் காலை 9:40 என்பது வீட்டில் எல்லாருக்கும் தெரியும். நேரம் சரியா என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்டார் அப்பா.

“நான் கவனிக்கலையே” என்றாள் அம்மா.

“ஏண்டா, நீ தானே டிரயின் பார்க்க ஓடுவே? ‘டே எக்ஸ்பிரஸ்’ போயாச்சா>” என்று என்னிடம் கேட்டார் அப்பா.

“தெரிலியே?” என்றேன். 

எனக்கு அதொன்றும் இப்போது காதில் விழுவதே இல்லை. வாசலுக்கு ஓடுவதும் இல்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here