நான் தொலைந்து போனேன்!

0
128

அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும். அந்த வயது வரை நான் நான் எங்கள் கிராமத்தை விட்டு எங்கும் போன நினைவில்லை.

அப்போது தான் முதன் முதலில் அப்பா என்னை ஒரு கல்யாண நிகழ்வுக்காக  பெரிய அக்காவுடன் ஸ்ரீரங்கத்துக்குக் கூட்டி வந்திருந்தார். அம்மாவும் மற்ற உடன் பிறந்தோரும்  வந்ததாக நினைவில்லை.

வந்த நாள் அன்று மாலை என் அக்காவையும் என்னையும் அப்பா ஸ்ரீரங்கம் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். அத்தனை பிரம்மாண்டமான ஓர் கோவிலை நான் பார்த்ததும் இல்லை; கற்பனை செய்ததும் இல்லை.  எங்கள் கிராமத்துக் கோவிலுக்குப் போனால் உள்ளே போய், உடனே சாமி கும்பிட்டுவிட்டு, பிராகாரத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்து விடலாம். ஆனால் இங்கே ஸ்ரீரங்கத்திலோ! அப்பப்பா எத்தனை பெரிய கோயில்; எத்தனை கோபுரங்கள், அவையெல்லாம் எத்தனை உயரங்கள்! 

கோயிலுக்கு உள்ளே போகையிலேயே ஒரே கடைகடைகளாக இருந்தன. கோயிலுக்குள்ளேயே கடைகள் என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. அப்பப்பா! எத்தனை கடைகள் — பாத்திரக் கடைகள், சாமிப் படங்கள் விற்கும் கடைகள், விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடைகள், வீட்டு சாமான்கள் விற்கும் கடைகள் என்று எத்தனை!

எனக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வேடிக்கை பார்த்து மாளவில்லை. எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம். யார் மீதும் இடிக்காமல் நடக்கவே முடியவில்லை.

“ஏய்! அப்பா கையை கெட்டியாய் பிடித்துக்கொள்; பராக்கு பார்க்கும் மும்முறத்தில் கையை விட்டுவிடாதே” என்று பெரியக்கா அவ்வப்போது  மிரட்டிக்கொண்டே இருந்தாள்.

அடுத்தடுத்து பொம்மைக் கடைகள்! என் கால்கள் என்னையறியாமல் அவற்றின் முன் ‘பிரேக்’ போட்டு நின்றுவிடும்;  அப்பா என்னை இழுத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது! 

என் அவஸ்தையை பெரியக்கா கவனித்துவிட்டாள்.

“அப்பா, இவனுக்கு ஏதேனும் விளையாட்டு சாமான் வாங்கிக்கொடுப்பா, பாவம்” என்றாள். வீட்டில் கடைக்குட்டியான நான் பெரியக்காவுக்கு மட்டும்தான் கொஞ்சம் செல்லம். என்னைவிட 12 வயது பெரியவள் அவள். மற்ற இரு அக்காக்கள் ஒரு அண்ணன் எல்லாம் என்னிடம் ‘கடுகடு சிடுசிடு’ தான் பெரும்பாலும். 

“ஊகூம்! இங்கெல்யெல்லாம் வெளியூர் ஜனங்கள் சாமி தரிசனம் செய்ய வர்ற எடம்; கடைக்காரர்கள் கொள்ளையாய் வெலை சொல்லுவாங்க;  எல்லாம் நம்ம ஊர்லியே வாங்கிக்கலாம்” என்றார் அப்பா.

அக்கா சிபாரிசு கிடைத்ததால் எனக்கு தைரியம் கூடி, “அப்பா, அப்பா, ஒரேயொரு பொம்மை பா” என்று கெஞ்சினேன்.

அப்பாவுக்கும் பாவமாகிவிட்டது போலும். ஒரு கடை வாசலில் நின்றார். நான் பரக்கப் பரக்க எல்லா பொம்மைகளையும் நோட்டம் விட்டேன். அப்பப்பா! எதை எடுக்க, எதை விட?

விதம் விதமான கலரில் விதம் விதமான கார்  பொம்மைகள்; அதோ ஒரு லாரி பொம்மை; அட அங்கே ஒரு பஸ் பொம்மை! கலர்க்கலராய்  கவுன் போட்டிருந்த வெள்ளைக்காரி பொம்மைகள்; செட்டியார் பொம்மை; தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை; ஒரு தட்டு நிறைய வித விதமான கலரில் பம்பரங்கள்; துப்பாக்கி பொம்மைகள், ஆனை பொம்மை; சிங்கம் பொம்மை. பல்லாங்குழிகள், இவை தவிர மேலே விதவிதமாய் ஊதல்கல்கள் தொங்கின; சின்னதும் பெரியதுமாய் எத்தனை பந்துகள்! காற்று ஊதிய வாத்து பொம்மை; கரடி பொம்மைகளும் தொங்கின. நான்வைப் பார்த்ததும் கடைக்காரர், ஓர் குரங்கு பொம்மையை அட்டைப் பெட்டியிலிருந்து எடுத்து சாவி கொடுக்க அது கையில் இருந்த இரு பெரிய ஜாலராக்களைத் தட்டி ஜிங்குஜிங்கு என்று ஒலிஎழுப்பியது! நான் அது போல் முன்பு பார்த்ததே இல்லை. 

“அப்பா! அதான் வேணும்” என்று கூவியவாறே, கடைக்காரர் கையிலிருந்து பிடுங்கிக்கொள்ளாத குறையாக அதைக் கையில் வாங்கிக்கொண்டேன். குரங்கு இன்னும் ஜாலரா அடித்துக் கொண்டிருந்தது.

அப்பா, “என்ன விலை?” என்று கடைக்காரரிடம் கேட்க, அவர் விலை சொல்ல, அப்பா அதிர்ந்து போய், “யப்பாடி! அவ்வளவா, கொள்ளையா இருக்கே?” என்றார்.
அக்கா என்னைத் தாஜா செய்து பொம்மையை வாங்கி கடைக்காரரிடம் கொடுக்க நான் அடுத்த கணம் ஓர் லாரி பொம்மையை எடுத்து “இதை வாங்கிக்கலாம்!” என்றேன். நான் பெரியவனானதும் லாரி ஓட்டவேண்டும் என்று ஒரு  தீர்மானம்!

அப்போது எதேச்சையாக என் கண்ணில், இந்தக் கடையே ஒட்டி  இருந்த அடுத்த கடையில் ஒரு ரயில் பொம்மை கண்ணில் பட்டுவிட்டது! ஆ, ஒரு எஞ்சின், நாலு பெட்டிகளுடன் வண்ணமயமான ரயில் பொம்மை! 

நான் கையில் இருந்த லாரியைத் தூக்கிக்கொண்டு விருட்டென்று பாய்ந்தேன் அடுத்த கடைக்கு! அங்கே லாரியை வைத்து விட்டு, “எனக்கு இந்த ரயில் தான் வேணும்!” என்று குரல் கொடுத்தேன். முதல் கடைக்காரர், “சார்! பையன் என் லாரியை தூக்கிக்கொண்டு ஓடிட்டான்; அதற்குக் காசு கொடுங்க!” என்று இரைந்தார்!

அப்பாவும் என்னைத் துரத்திக்கொண்டு அடுத்த கடைக்கு வந்து லாரி பொம்மையை எடுத்து முதல் கடைக்காரரிடம் கொடுத்து சமாதானம் செய்து விட்டுத் திரும்பி வந்தார். பெரியக்கா  என்னை, “பறக்காவெட்டி!” என்று திட்டிக் காதைத் திருகினாள்! எனக்கு ஒன்றும் உறைக்கவில்லை. ரயில் பொம்மை பாம்பு போல் என் கையில் நெளிந்தது!

அப்பா ரயிலின் விலையை விசாரிக்க, அவர் முகம் போன போக்கை, நான் கவனித்தேன். புரிந்து விட்டது.  இது தேறாது! அழுது ஆர்ப்பாட்டம் பிடிக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன்! எனக்குத் தெரியும். எங்களின் பெரிய சம்சாரத்தில் பிடிவாதமெல்லாம் ஒன்றும் செல்லுபடி ஆகாது என்று.

கடைசியில் அப்பாவே எச்சரிக்கையாய் விலை விசாரித்துவிட்டுத் திருப்தியுடன் தலையை ஆட்டிவிட்டு ஓர் பிளாஸ்டிக் பந்தை என்னிடம் காட்டினார்! பந்தில் ஆரஞ்சு சுளை போல பலவித நிறங்களில் பட்டை பட்டையாய் பளீறென்று சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என்று வண்ணம் தீட்டியிருந்தது. பந்தைக் கீழே போட்டால் டொக்கு டொக்கென்று சத்தம் போட்டு எம்பியது. என்னிடம் ஏற்கனவே இருந்த ரப்பர் பந்து போல அசட்டு நீல நிறம் இல்லை இது; ரப்பர் நாற்றமும் அடிக்க வில்லை. எனக்குப் பிடித்துப் போய் விட்டது. அப்பாவுக்கும் நிம்மதி!

நான் என் தொள தொளா டிராயர் பாக்கெட்டில் பந்தை செறுகிக்கொண்டேன். அது உப்பலாய் அங்கே துறுத்திக்கொண்டு இருந்தது. அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே நடந்தேன். “டேய், அதை என்னிடம் கொடுத்துடு; பையில் பத்திரமாய் வெச்சுக்கிறேன்; ஊருக்கு வந்ததும் எடுத்துத் தரேன்; இல்லைன்னா நீ தொலைச்சுடுவே” என்று எச்சரித்தாள் பெரியக்கா. “சீ, போ!” என்று அவளிடம் எரிந்து விழுந்தேன். அவ்வப்போது பந்தை வெளியே எடுத்து அழகு பார்த்தேன். இந்த மாதிரி கலர்க்கலர் பந்து என் அண்டை வீட்டு விளையாட்டுத் தோழர்கள் யாரிடமும் கிடையாது! ஆமாம்.

கோவிலுக்குள்  பெருமாள் சன்னிதியில் கூட்டம் இடித்துக் கசக்கியது. ஒரே புழுக்கம்; தாகம். அப்பா என்னைத் தூக்கிக்கொண்டு காண்பிக்க,  இருட்டில் அரைகுறை வெளிச்சத்தில் பெரிய்ய ரங்கனாதர்  கருப்பாய் பூதம் போலப்படுத்துக்கொண்டிருந்தது ஏதோ கொஞ்சம் கண்ணில் தெரிந்தது. நான் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக்கொண்டேன். பட்டர் கொடுத்த வாசனையான தீர்த்தம் ஒரு ஸ்பூன் என் தாகத்துக்கு தேவாமிருதமாய் இருந்தாலும் போதவில்லை!

நடநடவென்று சன்னதி சன்னதியாய் நடந்தோம். எனக்கு அலுப்புத் தட்டியது. “கோவில் போரும்; எப்போ கல்யாண வீட்டுக்குப் திரும்பிப்போலாம்?”  என்று திருக ஆரம்பித்துவிட்டேன். எனக்கு புதிய பந்தை வைத்துக்கொண்டு  விளையாடவேண்டும்.

தாயார் சன்னதி வந்தது. வெளியே படியில் இரு யானை உருவங்கள் கல்லில் செதுக்கப் பட்டிருந்தன. நான் அந்த ஒரு யானை மீது உட்கார்ந்து சவாரி செய்ய ஆரம்பித்தேன். துணைக்கு அப்பா பக்கத்திலேயே நிற்க, மற்றவர்கள் சன்னதிக்குள்ளே போய் கும்பிட்டுவிட்டு வந்தார்கள். 

நடந்து நடந்து கால்கள்  கடுகடுக்க, ஒரு வழியாய் வெளியே வந்தோம். மீண்டும் கடைகள் வழியே.  ‘ஒரு வேளை பிடிவாதம் பிடித்து அந்த ரயில் பொம்மையையே வாங்கிக்கொண்டிருக்கலாமோ? ஆனால் பந்தும் நன்றாகத்தான் இருக்கிறது; இதையும் வைத்துக்கொண்டு அதையும் வாங்கியிருக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டேன்.

வெளிச்சத்தில் மற்றோரு பார்வை பார்க்கலாம் என்று பாக்கெட்டிலிருந்து  பந்தை வெளியே எடுத்தேன்.  அப்பா, எதிர்பாராது வழியில் சந்தித்த ஓர் உறவினருடன் சுவாரசியமாய் பேசிக்கொண்டே வந்தார்.  நான் அப்பாவின் கையை விட்டுவிட்டேன். அப்பாவும் தன் பேச்சு சுவாரசியத்தில் கவனிக்க வில்லை. 

என் கையிலிருந்த பந்தை எவரோ முழங்காலால் தட்ட அது விழுந்து உருண்டு பல கால்களுக்கு இடையே புகுந்து ஓடியது. யார் யாரோ, அதனைக் கவனிக்காமல் “ஃபுட் பால்” விளையாட, அது கண்ணுக்ககப்படாமல் எங்கோ மறைந்தது! நான் பதற்றமானேன்; “என் பந்து, என் பந்து!” என்றவாறே கூட்டக் கால்களுக்கு இடையே புகுந்து ஓடிப் பந்தைத் தேட ஆரம்பித்தேன். அக்கா என்னைக் கவனிப்பதற்குள் நான் மாயமாய் கூட்டத்தில் மறைந்து விட்டேன்.

பந்தைத் துரத்திக்கொண்டு எத்தனை தூரம் வந்துவிட்டேன் என்று எனக்கு உறைக்கவில்லை. திடீரென்று உணர்வு வந்தது.  நான் எங்கே இருக்கிறேன்? அப்பா எங்கே? அக்கா எங்கே? பயம் ஒரு பந்து போல எழும்பி என் நெஞ்சை அடைத்தது. எம்பி எம்பி எல்லார் முகத்தையும் பார்த்தேன். என்னைச் சுற்றிலும் ஏதேதோ அறியா முகங்கள். அவ்வளவுதான்!  “அப்பா! அக்கா!” என்று  பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தேன்.

இப்போது யாரோ ஒரு பெரியவர் என்னைத் தூக்கிக்கொண்டிருந்தார். “அழாதே தம்பி! என்ன ஆச்சு? யார் நீ? உன் பேரென்ன?” என்றெல்லாம் விசாரித்தார்.

“எம்பேரு வரதூ! எங்க அப்பா, அக்கா கூட கோவிலுக்கு வந்தேன்; அவங்களக் காணூம்…” என்று கேவினேன்.  

“நீ பயப்படாதே; கண்டு பிடிச்சிறலாம்” என்றவாறே அவர் என்னைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்த்தார்; “யாருடைய பையன் சார் இது? பாருங்க; பையன் தொலஞ்சுட்டான் போலிருக்குதே! இவனோட அப்பா அம்மா யாரு?” என்று கூவினார்.

எங்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது.

சிறிது நேரத்தில், கூட்டத்தை விலக்கிக்கொண்டு அப்பா பரபரவென்று வந்தார். பின்னாலேயே அக்காவும்! அவர்கள் முகமெல்லாம் கவலை அப்பியிருந்தது. என்னைப் பார்த்ததும் பளீரென்று முகம் மலர்ந்தது! “ரொம்ப தேன்க்ஸ் சார்!” என்று இரண்டு மூன்று தடவை சொல்லி  என்னைத் தூக்கிக்கொண்டிருந்தவரிடமிருந்து தான் வாங்கித் தூக்கிக்கொண்டார். “ஏன் சார்! சின்னப் பிள்ளையைக் இந்தக் கூட்டத்திலே கைப்பிடிச்சு ஜாக்கிறதையாய்க் கூட்டிப் போகத்தெரியாதா?” என்றார்கள் ஆளாளுக்கு.

என்னைத் தூக்கிக்கொண்டே நடந்தார் அப்பா.  அப்பா என்னைத் திட்டுவாரோ?

 கல்யாண வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் அக்கா தலையில் குட்டுவோளோ? 

அக்காவின் முகத்தில் சிரிப்பும் கோபமும் மாறி மாறித் தெரிந்தது. அவள் ஒன்றும் சொல்லாமல் அடக்கிக்கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.

அப்பா என்னைத் திட்டவேயில்லை. “பயந்திட்டியாடா? போனாப் போறது; பெருமாள் கிருபை, நல்ல வேளை, நீ உடனே கெடெச்சுட்டே” என்றார் அப்பா. 

எனக்கு சொல்லாமலும் இருக்க முடியவில்லை.  “அப்பா! பந்து தொலஞ்சு போச்சுப்பா!” என்று அழ ஆரம்பிதேன். 

“பந்துதானே, போனாப் போறது; காசு கொடுத்தால் வேற பந்து வாங்கிக்க முடியுமே?” என்றார் அப்பா. அப்புறம் ஒரு மௌனம். அவர் பிடி என் உடம்பில் இறுகியது போலத் தோன்றியது எனக்கு.

-=0O0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here