கதையில் வராத பக்கங்கள் – ஓர் அறிமுகம்

0
229

கதையில் வராத பக்கங்கள் 

(‘சாந்தீபிகா’)

ஒரு ஆசாமியை எது எழுத்தாளனாக்குகிறது?

அதற்குப் பல காரணிகளைப் பல எழுத்தாளர்களும் பல கோணங்களில் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்தவரை எனக்கு முக்கியமாகப் பட்ட ஒன்று — நினைவுகள். 

ஒரு எழுத்தாளனின் சுபாவத்தில்  கூரிய பார்வை, ஆச்சரியமான பார்வை, சுவையான பார்வை, சமயத்தில் மற்றவர்கள் பார்க்காத அல்லது கவனிக்காத  சற்றே கோணலான, குசும்பான பார்வை, நடப்பவைகளை அவற்றின் சூழலோடு இணைத்தே பார்க்கும் பார்வை இவையெல்லாம் மிக இளம் வயதிலிருந்தே கூடுதல் என்பது என் கருத்து. அவன் பார்ப்பதோடு நில்லாமல் அவற்றைத் தன் மனதில் ஆழமாகவும் பதிந்து வைத்துக்கொள்கிறான். ஒரு எழுத்தாளனுக்கு அவனது நினைவுகள் பொக்கிஷம் போல. கிட்டத்தட்ட குழந்தைகள் சேர்த்து வைத்துக்கொள்ளும்  ‘வத்சலா குட்டி’ போல! 

அவ்வப்போது குழந்தைகள் தம் ‘வத்சலாக் குட்டி’கள் அடங்கிய பையை எடுத்துக் கவிழ்த்து எல்லாவற்றையும் பரத்தி ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்ப்பதில் மகிழ்கின்றன அல்லவா? அவ்வாறே எழுத்தாளனும் தன் நினைவுகளை அவ்வப்போது ஆழ் மனத்திலிருந்து வெளியே எடுத்துவந்து  தூசி தட்டித் துடைத்தும் மெருகேற்றியும் திரும்ப வைத்துக் கொள்கிறான்! வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் வீட்டில் உடனடி உபயோகமில்லாத சாமான்களைப் பரணில் தூக்கிப் போட்டு வைப்பது போல. போகிப் பண்டிகை சமயத்தில் பரணையும் தூசி தட்டிச் சுத்தம் செய்வதைப் போல!

எழுதவேண்டும் எனும் அரிப்பு வரும்போது எழுத்தாளன் இந்த நினைவுகள் எனும் ‘பரணிலிருந்து’ நிஜ வாழ்வில் அவன் கண்ட மனிதர்கள், சம்பவங்கள், பேச்சுகள், உரையாடல்கள், சூழல்கள் இவற்றை வெவ்வேறு கால கட்டங்களிலிருந்து வெளியே எடுக்கிறான்; அவற்றைக் கலந்து புரட்டி, கற்பனை மசாலாக்கள் சேர்த்துத் தாளித்து,  நிஜத்தில் பெரும்பாலும் நடக்காத ஓர் கதை முடிவை, அல்லது திருப்பத்தை  கற்பனையில் உருவாக்கித் தன் கதையை வடிக்கிறான்.

சில சமயங்களில், கற்பனையின் பங்கு கூடுதலவும் நிஜத்தின் பங்கு குறைவாகவும் இருந்து கற்பனை நல்ல வீரியமாக இருந்தால் அங்கே ஓர் நல்ல சுவையான புனைக் கதை உருவாகிறது. நிஜத்தின் பங்கு கூடுதலாயும், கற்பனையின் பங்கு குறைவாயும் இருக்கும் போது மிக  யதார்த்தமான ஓர்  கதை பிறக்கிறது.

இப்படிக் கதைகளாய் ஆக்கிய நினைவுகளைக் கழித்துக் கட்டிய பின்பும் கூட அவன் மனதில் சேர்த்து வைத்திருக்கும்  ‘சஞ்சித நினைவுகள்’ பலவும் இன்னும் பாக்கி இருக்கும்! 

அவற்றில் நிஜ மனிதர்களும், நிஜ சம்பவங்களும்  அவற்றிற்கேயான சுவைகளும் உண்டென்றாலும் ஒரு ‘கதைக்கான முடிச்சு’ அங்கே இல்லாமல் இருக்கும். வீட்டுப் பரணில் காலம் காலமாய்ச் சேர்த்து வைத்த சாமான்களில் பித்தளைப் பாத்திரங்கள் இருந்தால் அவை விலை போய்விடும். ஆனால் கூடவே பழைய கண்டாமுண்டான் சாமான்கள் எத்தனையோ கல்லு கல்லாக நன்றாக இருக்கும்; ஆனால் அவை விலை போகாது! தூக்கிப் போடவும் மனம் வராது! அது போல என்று வைத்துக்கொள்ளுங்கள்!

அப்படிக் கதையாய் விலை போகமுடியாத  சில பொக்கிஷமான என் நினைவுகளை இங்கே கதை ஓசை மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதில் ‘நான்’ நான் நிறையவே உண்டு’ ஓ! சந்தடி சாக்கில் சுயசரிதம் அல்லது சுயப் பிரதாபப் பீற்றலா என்று மிரளாதீர்கள்! இதில் நான் செய்த அசட்டுத் தனங்கள், நான் அனுபவித்த தார்மீகக் குழப்பங்கள், நான் உண்டாக்கிய அல்லது சந்தித்த சங்கடங்கள் எல்லாமே உண்டு.இதில் வேடிக்கையான, தமாஷான என் சின்ன வயது அனுபவங்கள் பலதும் உண்டு!

இதில் பிற சிறார் உண்டு, பெரியவர்கள் உண்டு, முதியவர்கள் உண்டு, எனக்குச் சுவையாய்ப் பட்ட பல நிகழ்வுகள் உண்டு.  அவை உங்களுக்கும் சுவையாய் இருக்கக் கூடும் எனும் ஓர் குருட்டு நம்பிக்கையில் இவற்றைப் பகிர்கிறேன்.

இவையெல்லாமே  100 சதமானம் நிஜமா? 

அப்படித் தலையில் அடித்து சொல்லிவிட முடியாது. ஆனால் சுமார் 95 சதமேனும் நிஜம். என் நினைவில் தங்கியவை எல்லாமே பூரணமான விரிவாயும் நுணுக்கமாயும் இருக்கும் சாத்தியம் குறைவு அல்லவா? ஒரு எழுத்தாளனாக, சொல்வதைச் சுவையாகவும் கோர்வையாகவும் சொல்ல முனையும் போது  ஒரு  3 முதல் 5 சதவீதமாவது கற்பனையும் வந்து சேரத்தான் செய்யும். சிறிதளவு செம்பைச் சேர்க்காமல் தங்க நகை செய்ய இயலாது அல்லவா? 

இவற்றில் சில ஏற்கனவே நான் தமிழ்-கோரா இணைய தளத்தில் தமிழில் இட்டுப் பலராலும் ரசிக்கப் பட்டவை. என் சிறு வயது நினைவுகள் பலவற்றையும் நான் பல இணையதளங்களில் ஆங்கிலத்தில் முன்பே பதிவிட்டிருந்தேன்.  இப்போது அவற்றையெல்லாம் திரட்டி, கூட்வே தமிழில் எழுதியவைகளையும் சேர்த்து  halfpantmemories.com எனும் எனது இணையதளத்தில் பதிவிட்டு வருகிறேன்.

எனது சில குட்டி வயது நினைவுகள் தீபிகாவின் ‘சிட்டுக் குருவி’ போட்காஸ்ட்டில் சீனு எனும் பையனின் அனுபவங்களாக ஒலி வடிவில் அவ்வப்போது வருகின்றன.  என் நினைவுகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக ஒன்று இருக்கட்டும் என்று இந்த “கதையில் வராத பக்கங்களை” உருவாக்க எண்ணம் வந்தபோது ஒரே இடத்தில் எல்லாமுமே இருக்கட்டுமே என்று அந்த சிறுவர்க்கான அனுபவங்களையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

இதில் வரும் அனுபவங்களை நான் ஓர் சரித்திரம் போல காலக் கிரமப்படி வரிசைப் படுத்தி எழுதவில்லை.  கலந்தாங்கட்டியாகத் தான் வரும்,

உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

அன்புடன் 

சாந்தீபிகா (சி வி ராஜன்)

-=0()0=-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here